பனம் பழம்
பனம் பழம் என்பது பனை மரத்தின் பழம் ஆகும். 15 சமீ (6 அங்குலம்) தொடக்கம் 20 சமீ (8 அங்குலம்) வரை விட்டம் கொண்ட இவை குலைகளாகக் காய்க்கின்றன. நார்த் தன்மை கொண்ட இதன் தோல் கரு நிறமானது. இப் பழத்தில் இரண்டு அல்லது மூன்று விதைகள் இருக்கும். ஏறத்தாள 10 சமீ வரை அகல நீளங்களைக் கொண்ட சதுரப் பாங்கான வடிவம் கொண்ட இவ்விதைகள், அண்ணளவாக 2.5 சமீ தடிப்புக் கொண்டவை. இவற்றைச் சுற்றிலும் நீண்ட தும்புகள் காணப்படுகின்றன. இத் தும்புகளிடையே களித் தன்மை கொண்ட, உணவாகக் கொள்ளத்தக்க, செம்மஞ்சள் நிறப் பொருள் உள்ளது. இது பனங்களி எனப்படுகின்றது. ஏனைய பழங்களைப் போல் இப்பழத்தை நேரடியாக உட்கொள்வதில்லை. இதனை நெருப்பில் சுட்டே உண்பது வழக்கம். நெருப்பில் சுட்ட இப் பழத்தின் தோலை உரித்து எடுத்தபின், களியைப் பிழிந்து உண்பார்கள்.
இக்களி கசப்புக் கலந்த இனிப்புத் தன்மை கொண்டது. இதை நேரடியாக உண்பது மட்டுமன்றி, இக் களியைப் பதப்படுத்திப் பல வகையான உணவுப் பொருட்களையும் செய்வது உண்டு. இக்களியைப் பிழிந்து, பாய்களிற் பரவி, வெயிலில் காயவிட்டுப் பெறப்படுவது பனாட்டு எனப்படுகின்றது. இது நீண்ட காலம் வைத்து உண்ணத்தக்கது. இப் பனாட்டிலிருந்து பாணிப் பனாட்டு என்னும் ஒருவகைப் உணவுப் பண்டமும் தயாரிக்கலாம்.
இக் களியை அரிசி மாவுடன் கலந்து, சீனியும் சேர்த்து பிசைந்து, உருண்டைகளாக்கி எண்ணெயில் பொரித்து எடுப்பர். இது யாழ்ப்பாணப் பகுதியில் பனங்காய்ப் பணியாரம் எனப்படுகின்றது.
நுங்கு


இந்த பனம்பழமானது இளம் காய்களாக இருக்கையில் நுங்கு என அழைக்கப்படுகிறது. நுங்குக்கு என ஒரு நுணுப்பமான பருவம் உள்ளது. இந்தப் பருவத்திலே நுங்கில் காணப்படும் வழுவழுப்பான, திரவநிலை கலந்த திண்ம விதையானது மிகவும் இனிப்பாகவும், உண்பதற்கு சுவையானதாகவும் இருக்கும். இந்தப் பருவம் தாண்டி சற்று முற்றி விட்டால் இதன் சுவை குன்றி விடும். நன்கு முற்றி விட்ட பின் இதனை சீக்காய் என்பர். சீக்காய் திரவநிலை குறைந்து இறுக்கமாகக் காணப்படும். இதை உண்பதால் வயிற்றில் உபாதை ஏற்படும் என நம்பப் படுகிறது. சீக்காயை சிறுசிறு துண்டுகளாக்கி ஆடு, மாடுகளுக்கு உணவாகவும் கொடுப்பார்கள்.
நுங்கின் மருத்துவப் பயன்
நுங்கைச் சுற்றி இருக்கும் பாடை என்னும் மேல் தோலானது வயிற்றுக்கடுப்புக்கு நல்லது. ஆகவே அந்தப் பாடையுடன் சிலர் நுங்கை சேர்த்துச் சாப்பிடுவர். கண் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு, இது ஒரு அருமருந்து எனப்படுகிறது. கண்ணீல் தூசி விழுந்தாலோ சூட்டால் கண் எரிச்சலடைந்தாலோ நுங்கின் நீரை நேரடியாகக் கண்களில் உடைத்து ஊற்றுவது வழக்கம்.[1]
இலக்கியத்தில் பனம்பழம்
தமிழ் இலக்கியத்தில் ஔவையார் என்பது சிறப்பிடம் பெற்றுள்ள ஒரு பெயர். இவர் பாடியதாகக் கூறும் பல பாடல்களும், இவர் தொடர்பான பல கதைகளும் உள்ளன. இதுவும் அவ்வாறான ஒரு கதை:
புகழ் பெற்ற வாள்ளலான பாரி பறம்பு மலையின் வேந்தன். மூவேந்தர்களான சேர, சோழ பாண்டியர்கள் பாரியுடன் போர் தொடுத்து அவனைக் கொன்று அவன் நாட்டையும் கவர்ந்து கொண்டனர். பாரியின் பெண் மக்கள் இருவரும் அனாதைகளாகித் துயருற்றனர். அவர்களுக்கு மணம் முடித்து வைக்க ஔவையார் முன்வந்து திருக்கோவலூர் மலையமானுக்கு அவர்களைத் திருமணம் செய்ய ஒழுங்கு செய்தார். திருமணத்துக்காக மூவேந்தர்களுக்கும் அழைப்பு அனுப்பினார். திருமணத்துக்கு வந்த மூவேந்தர்கள் பனம்பழம் கேட்டார்கள். அது பனம்பழக் காலமல்ல. கேட்டதைக் கொடுக்காவிட்டால் பிரச்சினை வரக்கூடுமென உணர்ந்த ஔவையார். வெளியே கிடந்த பனை மரத் துண்டம் ஒன்றைப் பார்த்து,
- திங்கட் குடையுடைச் சேரனும் சோழனும் பாண்டியனும்
- மங்கைக் கறுகிட வந்துநின்றார், மணப் பந்தலிலே
- சங்கொக்க வெண்குருத்து ஈன்று, பச்சோலை சல சலத்து,
- நுங்குக்கண் முற்றி, அடிக்கண் கறுத்து, நுனி சிவந்து
- பங்குக்கு மூன்று பழம் தரவேண்டும் பனந்துண்டமே!
என்ற பாடலைப் பாடவே பனந்துண்டம் முளைத்து வளர்ந்து பழம் ஈந்ததாம்.
யாழ்ப்பாணத்து நவாலியூர்ச் சோமசுந்தரப்புலவர் வாழ்ந்த காலத்திலே மேல்நாட்டு மோகம் அதிகரித்து உள்ளூர் உற்பத்திகள் நலிவடைந்து, மரபுவழிப் பழக்க வழக்கங்களும் மதிப்புக் குறைவானவையாகக் கருதப்பட்டன. அக்காலத்தில் பனையின் உற்பத்திகளைப் பிரபலப் படுத்துவதற்காக அவர் பாடிய பின்வரும் பாடலிலே மேற்காட்டிய ஔவையாரின் பாடலை எடுத்துக்காட்டியுள்ளார்.
- திங்கட் குடையுடைச் சேரனும், சோழனும்,
- பாண்டியனும் ஔவை சொற்படியே
- மங்கலமாயுண்ட தெய்வப் பனம்பழம்
- மரியாதை அற்றதோ ஞானப் பெண்ணே
மேற்கோள்கள்
- காட்சன் சாமுவேல் (2018 செப்டம்பர் 29). "நோகாமல் தின்னும் நுங்கு". கட்டுரை. இந்து தமிழ். பார்த்த நாள் 30 செப்டம்பர் 2018.