எலுமிச்சை

எலுமிச்சை (Lemon) சிட்ரசு எலுமிச்சை (எல்) ஓசுபேக் என்ற தாவரவியற் பெயர் கொண்ட நிலம்வாழ் தாவரமாகும். ஆசியாவை தாயகமாகக் கொண்ட இத்தாவரம் பூக்கும் தாவரம் என்ற துணைப்பிரிவில் ருட்டேசி குடும்பத்தின் உறுப்பினராக வகைப்படுத்தப்பட்டுள்ளது.பெரும்பாலும் வெப்ப மற்றும் மிதவெப்ப மண்டல மண்டலப் பகுதிகளில் இது வளர்கின்றது. குறுஞ்செடி வகைத் தாவரமாக எலுமிச்சை அறியப்படுகிறது.

எலுமிச்சை
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: Rosids
வரிசை: Sapindales
குடும்பம்: Rutaceae]
பேரினம்: Citrus
இனம்: C.× limon
இருசொற் பெயரீடு
சிட்ரசு × லிமன், பெரும்பாலும் சி. லிமன் என வழங்கப்படுகிறது
(லின்.) பர்ம்.எஃப்.
மஞ்சள் நிற எலுமிச்சம் பழமும் அதன் மலரும்

தேசிக்காய் (lime), தோடம்பழம் ஆகியவற்றை உள்ளடக்கிய பூக்கும் தாவரக் குடும்பத்தை சேர்ந்த தாவரமாகும். இதன் பழம் பொதுவாக அதன் சாற்றுக்காகவே பயன்படுத்தப்படுகின்றது. எலுமிச்சை மருத்துவ குணம் கொண்டது. எலுமிச்சைச் சாற்றை தண்ணீருடன் கலந்து, விருப்பத்துக்கேற்ப சீனி (சர்க்கரை) அல்லது உப்புடன் சேர்த்துப் பருகுவது ஆரோக்கியமான பானமாகக் கருதப்படுகிறது. சமையலில், உணவுகளுக்குச் சுவை சேர்ப்பதற்காகப் பயன்படுகிறது.

மரத்தின் நீள்வட்ட மஞ்சள் பழமானது உலகம் முழுவதிலும் சமையல் மற்றும் சமையல் அல்லாத நோக்கங்களுக்காகப் பயன்படுகிறது, முதன்மையாக இதன் பழச்சாறுக்கு உணவு மற்றும் சுத்திகரிப்பு பயன்பாடு ஆகிய இரண்டும் உள்ளன [1]. திசுக்கூழ் மற்றும் தோல் கூட சமையல் மற்றும் உட்சுடல் என்ப்படும் பேக்கிங்கில் பயன்படுத்தப்படுகின்றன. எலுமிச்சை சாறில் சுமார் 5% முதல் 6% சிட்ரிக் அமிலம் உள்ளது, எலுமிச்சை சாறின் தனித்துவமான புளிப்பு சுவை எலுமிச்சைப் பானம் போன்ற உணவுகளில் ஒரு முக்கிய மூலப்பொருளாக உள்ளது.

எலுமிச்சை சாறின் pH அளவு 2 முதல் 3 வரை இருக்கும். இதனால் இதைப் பள்ளிகளில் கற்பித்தல் சோதனைகளில் மலிவான அமிலமாகப் பயன்படுத்துகிறார்கள்.

வரலாறு

எலுமிச்சையின் மேற்பரப்பும் குறுக்கு வெட்டுத் தோற்றமும்

இது இந்தியாவின் அசாம் மாநிலம், வடக்கு பர்மா, சீனா ஆகிய பகுதிகளிலேயே தோன்றியிருக்கலாம் என நம்பப்பட்டாலும், இதன் தோற்றம் பற்றிய சரியான தகவல்கள் தெரியவில்லை [1]. கசப்பு ஆரஞ்சு (புளிப்பு ஆரஞ்சு) மற்றும் சிட்ரான் இடையிலான கலப்பினச்சேர்க்கை தொடர்பான ஆய்வே எலுமிச்சை மரபணு பிறப்பு பற்றி மேற்கொள்ளப்பட்ட ஆய்வாக அறியப்படுகிறது [2][3].

பண்டைய ரோம் சமுதாயத்தில் இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், தெற்கு இத்தாலியின் அருகே ஐரோப்பாவில் எலுமிச்சை சாகுபடி அறிமுகமாகியிருக்கிறது[1]. எனினும், இங்கு பரவலாக பயிரிடப்படவில்லை. தெற்காசியாவிலும், தென்கிழக்காசியாவிலும், இது ஒரு தொற்றுநீக்கியாகப் பயன்பட்டு வந்தது. அத்துடன் பல வகை நச்சுப் பொருட்களுக்கான நஞ்சு முறிப்பு மருந்தாகவும் பயன்பட்டது. பின்னர் இது பாரசீகத்துக்கும் அங்கிருந்து ஈராக் மற்றும் கிபி 700 அளவில் எகிப்துக்கும் அறிமுகமானது. இது பற்றிய பதிவுகள் முதன் முதலில் கிபி பத்தாம் நூற்றாண்டின் வேளாண்மை தொடர்பான நூல்களில் காணப்படுகின்றன. இது தொடக்க கால இசுலாமியப் பூங்காக்களில் அழகூட்டல் தாவரங்களாகவும் பயன்பட்டன. கிபி 1000க்கும் 1150க்கும் இடைப்பட்ட காலத்தில் அரபு உலகிலும், மத்தியதரைக் கடல் பகுதிகளிலும் எலுமிச்சை பரவியிருந்தது.[4] [1]

எலுமிச்சைகளின் கணிசமான சாகுபடி 15 ஆம் நூற்றாண்டின் மத்தியில் ஐரோப்பாவின் கெனோவாவில் தொடங்கியது. கிறிசுடோபர் கொலம்பசு தனது பயணத்தில் எலுமிச்சை விதைகளை இசுபானியோலாவிற்கு கொண்டு வந்தபோது 1493 ஆம் ஆண்டில் எலுமிச்சை அமெரிக்கர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. எசுப்பானிய வெற்றி புதிய உலகம் முழுவதும் எலுமிச்சை விதைகள் பரவ உதவியது. இது முக்கியமாக அலங்கார செடியாகவும், மருந்துக்காகவும் பயன்படுத்தப்பட்டது [1]. 19 ஆம் நூற்றாண்டில், எலுமிச்சைகளை புளோரிடா மற்றும் கலிபோர்னியாவில் அதிக அளவில் எலுமிச்சையை பயிரிட்டனர் [1]. 1747 ஆம் ஆண்டில் யேம்சு லிண்டு சிகர்வி நோயால் பாதிக்கப்பட்ட தனது மாலுமிகளுக்கு உணவில் எலுமிச்சம் பழசாறை கலந்து கொடுத்ததாக அறியப்படுகிறது. அக்காலத்தில் வைட்டமின் சி கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது [1][5].

மத்தியக் கிழக்கிலிருந்து லெமன் என்ற சொல் தோன்றியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. பண்டைய பிரெஞ்சு மொழியில் limon என்றும், இத்தாலிய மொழியில் limone என்றும், அரபு மொழியில் laymūn அல்லது līmūn, சமசுகிருதத்தில் nimbū, “lime மற்றும் பாரசீக மொழியில் līmūn,என்றும் காணப்பட்டாலும், எலுமிச்சை பொதுவாக எல்லா இடங்களிலும் சிட்ரசு பழம் என்ற பொருளிலேயே வழங்கப்படுகிறது [6].

தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம், புளியங்குடி நகரில் தனியான எலுமிச்சைக்கான தினசரி சந்தை நடைபெறுகிறது. புளியங்குடி அருகிலுள்ள புன்னையாபுரம் கிராமம் எலுமிச்சை விளைவிப்பதில் சிறந்த இடம் வகிக்கின்றது. இப்பகுதி எலுமிச்சை பழத்தில் சாறு (நீர்ப்பதம்) குறைவதற்கு மற்ற எலுமிச்சைகளைவிட அதிக நாட்களாகும் என்பதே இதன் சிறப்பாகும்.[7]

வகைகள்

எலுமிச்சையின் விரிவான தாவரவியல் வகைபாடு, பிரான்சு யூகென் கோக்லர்

'போனி பிரேய்' என்பது நீளமான, மென்மையான, மெல்லிய தோல், மற்றும் விதையற்ற ஓரினமாகும்[8]. பெரும்பாலும் கலிபோர்னியாவின் சான் டியாகோ மாவட்டத்தில் வளர்கிறது.[9]

யுரேகா எலுமிச்சை ஆண்டு முழுவதும் மிகுதியாக வளர்கின்ற ஒரு தாவரமாகும். ஆண்டு முழுவதும் பழங்களையும் மலர்களையும் ஒன்றாக உற்பத்தி செய்யும் திறனைப் பெற்றதன் காரணமாக இதை 'நான்கு பருவங்களின் தாவரம் என்றும் அழைக்கப்படுகிறது[10]. பொதுவான பல்பொருள் அங்காடி எலுமிச்சையாக விற்பனை செய்யப்படுகிறது[11]. இளஞ்சிவப்பு- சதையுடன் பச்சை மற்றும் மஞ்சள் வண்ணமயமான வெளிப்புற தோல் கொண்டதாக இந்த யுரேகா எலுமிச்சை காணப்படுகிறது[12].

இத்தாலியில் பெம்மினெல்லோ செயின்ட் தெரசா', அல்லது சார்ரெண்டோ நகருக்குச் சொந்தமானதாக எலுமிச்சை கருதப்படுகிறது [13]. இலிமோன்செல்லோ என்ற இத்தாலிய பானம் தயாரிப்பில் இது பாரம்பரியமாக பயன்படுத்தப்படுகிறது.

எலுமிச்சை மற்றும் ஆரஞ்சுடன் குறுக்குக் கலப்பினச் சேர்க்கையால் மெயர் வகை எலுமிச்சை தோன்றுகிறது. 1908 ஆம் ஆண்டில் அமெரிக்காவுக்கு அறிமுகப்படுத்திய ஃபிராங்க் என். மெயர் என்பவரின் பெயரால் இப்பழம் அழைக்கப்படுகிறது. இலிசுபன், யுரேகா எலுமிச்சைகளைக் காட்டிலும் மெல்லிய தோலும், சிறிது அமிலத்தன்மையும் மெயர் எலுமிச்சையில் குறைவாக உள்ளது. வணிக அடிப்படையில் பரவலாக வளர்க்கப்படாத போது மெயர் எலுமிச்சைக்கு அதிக கவனம் தேவை. பெரும்பாலும் இது மஞ்சள் நிற ஆரஞ்சு நிறத்தில் முதிர்ச்சியடைகிறது. மற்ற எலுமிச்சைகளை விட உறைபனியை தாங்கும் சக்தி இதற்கு அதிகமாக உள்ளது.

சாதாரணமான எலுமிச்சைகளைக் காட்டிலும் 'பொன்டெரோசா' எலுமிச்சை மிகவும் குளிர்ச்சியானது ஆகும். இப் பழம் தடித்த-தோலுடன் மிகப்பெரிய அளவில் காணப்படுகிறது. இது ஒரு சிட்ரான்-எலுமிச்சை கலப்பினமாகும். 'யென் பென்' என்பது ஆத்திரேலிய பழங்குடியினரால் சாகுபடி செய்யப்பட்ட ஒரு எலுமிச்சை வகையாகும் [14].

சிட்ரசு ஆரேன்சியம் எனப்படும் நார்த்தங்காய், சிட்ரசு ரெடிகுலேட்டா எனப்படும் கமலா ஆரஞ்சு, சிட்ரசு சைனென்சிசு எனப்படும் சாத்துக்குடி போன்றவை இதே வகையில் வகைப்படுத்தப்பட்ட சிட்ரசு வகைத் தாவரங்களாகும்.

தோட்டப்பயிர்

எலுமிச்சைக்கு குறைந்தபட்சமாக 7 ° செல்சியசு வெப்பநிலை தேவைப்படுகிறது, எனவே இவை மிதமான பருவநிலையில் கடுமையாக இருப்பதில்லை, ஆனால் முதிர்ச்சியடைந்த நிலையில் இவை கடினமாகி விடுகின்றன. வளரும்போது குறைக்கப்பட வேண்டிய கிளைகளை வெட்டி குறைக்கப்படுகிறது. மிக அதிகமான கிளைகள் புதராக வளரும் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன. கோடையில் முழுவதும், மிகவும் தீவிரமான வளர்ச்சியடைகிறது.

பயன்கள்

சிகர்வி, வாதம், முடக்குவாதம் போன்ற நோய்களுக்கு மருந்தாகவும் உணவாகவும் இதைப் பயன்படுத்துகிறார்கள். ஊறுகாய், மருந்துகள், மிட்டாய், பழப்பாகு முதலியன தயாரிக்கப் பயன்படுகின்றன. நறுமண எண்ணெய்கள் தயாரிப்பிலும் சோப்பு தயாரிப்பிலும் எலுமிச்சை பயன்படுகிறது.எலுமிச்சை நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது[15].

ஊட்டச்சத்துகளும் தாவர வேதிப்பொருட்களும்

எலுமிச்சையில் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது. அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் பிறவும் சிறிதளவில் கலந்துள்ளன. எலுமிச்சைகள் பாலிபீனால்கள், டெர்பீன்கள் மற்றும் டானின்கள் [16] உள்ளிட்ட பல்வேறு தாவர வேதிப்பொருட்களும் எலுமிச்சையில் உள்ளன. மற்ற சிட்ரசு பழங்களைப் போலவே இதிலும் சிட்ரிக் அமிலத்தின் குறிப்பிடத்தக்க செறிவு நிரம்பியுள்ளது. (சுமார் 47 கிராம் / லி) [17].

உற்பத்தி

அதிக அளவு எலுமிச்சை உற்பத்தி செய்யும் நாடுகள் (டன்னில்)
நாடு 2010 2011 2014
 இந்தியா2 629 2002 108 000தரவு இல்லை
 மெக்சிக்கோ1 891 4002 147 7402 255 000
 அர்கெந்தீனா1 113 3801 228 6601 100 000
 சீனா1 058 1051 313 394Nதரவு இல்லை
 பிரேசில்1 020 3501 126 740தரவு இல்லை
 ஐக்கிய அமெரிக்கா800 137834 610806 000
 துருக்கி787 063790 211680 000
 ஈரான்706 800F560 052Fதரவு இல்லை
 எசுப்பானியா578 200F700 000Fதரவு இல்லை
 இத்தாலி522 377483 088no data
உலகம்13 032 388F13 861 411A
Without footnote — official data, F = FAO estimation, A =aggregated data (includes official, and estimated data), N = unofficial data;

ஆதாரம்: ஐநா உணவு மற்றும் வேளாண்மைப்பு[18] *அனைத்து எலுமிச்சையினங்களை உள்ளடக்கியது

மேற்கோள்கள்

  1. Julia F. Morton (1987). "Lemon in Fruits of Warm Climates" 160–168. Purdue University.
  2. Gulsen, O.; M. L. Roose (2001). "Lemons: Diversity and Relationships with Selected Citrus Genotypes as Measured with Nuclear Genome Markers". Journal of the American Society of Horticultural Science 126: 309–317.
  3. Genetic origin of cultivated citrus determined: Researchers find evidence of origins of orange, lime, lemon, grapefruit, other citrus species", Science Daily, January 26, 2011 (Retrieved February 10, 2017).
  4. எலுமிச்சை சாறு நன்மைகள்
  5. James Lind (1757). A treatise on the scurvy. Second edition.. London: A. Millar.
  6. Douglas Harper. "Online Etymology Dictionary".
  7. எலுமிச்சை
  8. Spalding, William A. (1885). The orange: its culture in California. Riverside, California: Press and Horticulturist Steam Print. பக். 88. https://books.google.com/books?id=_l1EAAAAYAAJ&dq=Bonnie%20Brae%20lemon&pg=PA88#v=onepage&q=Bonnie%20Brae%20lemon&f=false. பார்த்த நாள்: March 2, 2012.
  9. Carque, Otto (2006) [1923]. Rational Diet: An Advanced Treatise on the Food Question. Los Angeles, California: Kessinger Publishing. பக். 195. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4286-4244-7. https://books.google.com/books?id=zDjmYpZGh_4C&lpg=PA195&dq=Bonnie%20Brae%20lemon&pg=PA195#v=onepage&q=Bonnie%20Brae%20lemon&f=false. பார்த்த நாள்: March 2, 2012.
  10. Buchan, Ursula (January 22, 2005). "Kitchen garden: lemon tree". The Daily Telegraph (London). http://www.telegraph.co.uk/gardening/3325753/Kitchen-garden-lemon-tree.html. பார்த்த நாள்: January 24, 2014.
  11. "Complete List of Four Winds Dwarf Citrus Varieties". Fourwindsgrowers.com. பார்த்த நாள் June 6, 2010.
  12. Vaiegated pink at the Citrus Variety Collection.
  13. "Taste of a thousand lemons". Los Angeles Times. September 8, 2004. http://www.latimes.com/features/la-fo-limoncello8sep08,0,771590.story. பார்த்த நாள்: November 21, 2011.
  14. "New Zealand Citrus". ceventura.ucdavis.edu. பார்த்த நாள் June 13, 2010.
  15. Kiecolt-Glaser, J. K.; Graham, J. E.; Malarkey, W. B.; Porter, K; Lemeshow, S; Glaser, R (2008). "Olfactory influences on mood and autonomic, endocrine, and immune function". Psychoneuroendocrinology 33 (3): 328–39. doi:10.1016/j.psyneuen.2007.11.015. பப்மெட்:18178322.
  16. Rauf A, Uddin G, Ali J (2014). "Phytochemical analysis and radical scavenging profile of juices of Citrus sinensis, Citrus anrantifolia, and Citrus limonum". Org Med Chem Lett 4: 5. doi:10.1186/2191-2858-4-5. பப்மெட்:25024932.
  17. "Quantitative Assessment of Citric Acid in Lemon Juice, Lime Juice, and Commercially-Available Fruit Juice Products" (PDF). Journal of Endourology 22 (3): 567–570. 2008. doi:10.1089/end.2007.0304. பப்மெட்:18290732. பப்மெட் சென்ட்ரல்:2637791. http://www.liebertonline.com/doi/pdfplus/10.1089/end.2007.0304.
  18. "Production/Crops of Lemons and Limes, World by Countries". Food and Agriculture Organization of the United Nations, Statistics Division (FAOSTAT) (2014). பார்த்த நாள் 22 November 2015.

புற இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.