முந்திரி

முந்திரி அல்லது மரமுந்திரி (Anacardium occidentale) என்பது Anacardiaceae குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மரம் ஆகும். இது விரும்பி உண்ணப்படும் முந்திரிக்கொட்டைகளைத் தரும் ஓர் மரம் ஆகும். முந்திரிக்கொட்டைகள் வறுக்கப்பட்டு உண்ணப்படுவதுடன், கறி சமைக்கவும், ருசியைச் சேர்ப்பதற்காக வேறு உணவுகளுடன் சேர்க்கப்பட்டும் பயன்படுத்தப்படுகின்றது.

முந்திரி
கினி-பிசாவு நாட்டில் முந்திரி சாகுபடிக்குத் தயாராயுள்ள நிலையில்
உயிரியல் வகைப்பாடு
திணை: நிலைத்திணை
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: ரோசித்கள்
வரிசை: Sapindales
குடும்பம்: Anacardiaceae
பேரினம்: Anacardium
இனம்: A. occidentale
இருசொற் பெயரீடு
Anacardium occidentale
L.

முந்திரியில் முந்திரிப்பழமென நாம் அழைப்பது, உண்மையில் பழமல்ல. எனவே அது போலிப்பழம் எனவும் அழைக்கப்படும். இது பூவின் சூலகப் பகுதியில் இருந்து உருவாவதில்லை. பூவின் அடிப்பகுதியில் உள்ள தடித்த பூக்காம்புப் பகுதியே இவ்வாறு பேரிக்காய் உருவத்தில் விருத்தியடைகின்றது.[1]. இதனை முந்திரி ஆப்பிள் எனவும் அழைப்பர்.

முந்திரியில், முந்திரி ஆப்பிளின் அடியில் சிறுநீரக வடிவில் அல்லது குத்துச்சண்டை யில் பயன்படுத்தப்படும் கையுறை வடிவில் விருத்தியடையும் அமைப்பே உண்மையான பழம் ஆகும். இது உண்மையான பழமாக இருந்தபோதிலும், இதன் உள்ளே இருக்கும் உண்ணக்கூடிய பகுதி முந்திரிக்கொட்டை என அழைக்கப்படுகின்றது. அதாவது முந்திரியின் உண்மைப்பழமானது தனி ஒரு விதையைக் கொண்ட பழமாகும்.

பெயரீடு

Anacardium என்ற பெயரானது முந்திரிப்பழத்தின் உருவத்தை விளக்கும் பெயராகும். ana என்பது மேல்நோக்கிய என்ற பொருளையும், cardium என்பது இதயம் என்ற பொருளையும் குறிக்கின்றது. தலைகீழான அல்லது மேல்நோக்கிய இதயத்தின் அமைப்பை ஒத்த பழத்தையுடைய மரமாக இருப்பதனால் Anacardium என்ற பெயரைப் பெற்றுள்ளது.

முந்திரிக்கொட்டையானது போர்த்துகீச மொழியில் கஜூ (Caju) என்ற பெயரைக் கொண்டிருப்பதனால், கஜூ என்ற பெயரும் பேச்சுத் தமிழில் பயன்பாட்டில் உள்ளது. போர்த்துகீச மொழியில் Caju எனப்படும் சொல்லில் இருந்தே ஆங்கிலத்தில் Cashew என்ற பெயர் வந்ததாக அறியப்படுகின்றது. போர்த்துக்கீச மொழியில் கஜூ என்ற பெயரானது, Tupian மொழியிலுள்ள acajú என்ற சொல்லில் இருந்து பெறப்பட்டுள்ளது.

Tupian மொழியில் acajú என்பது தன்னைத் தானே உருவாக்கும் கொட்டை என்ற பொருளில் அமைந்துள்ளது[2]. பொதுவாக விதைகள் அல்லது கொட்டைகள் பழத்திற்கு உள்ளாகவே அமைந்திருக்கும். ஆனால் இந்த முந்திரிக்கொட்டை நாம் முந்திரிப்பழமென அழைக்கும் பகுதிக்கு வெளியாக அமைந்திருப்பதனால் இப்பெயரைப் பெற்றுள்ளது.

பரம்பல்

முந்திரி மரம்

இம்மரமானது தென்னமெரிக்காவின் வடக்குப் பகுதியை பூர்வீகமாகக் கொண்டிருப்பினும், பின்னர் 1560- 1565 ஆண்டளவில்போர்த்துக்கீசரால் இந்தியாவில் உள்ள கோவாவுக்கு எடுத்து வரப்பட்டு, பின்னர் தென்கிழக்கு ஆசியா, மற்றும் ஆப்பிரிக்காவுக்கு பரம்பல் அடைந்தது[3]

இம்மரம் பிரேசிலின் வடகிழக்குப் பகுதியை பூர்வீகமாகக் கொண்டிருந்தாலும், இன்று வெப்பமண்டல நாடுகள் பலவற்றில் இது வளர்க்கப்படுகிறது. வியட்நாம், நைஜீரியா, இந்தியா, பிரேசில், இந்தோனீசியா ஆகிய நாடுகளில் இது அதிகம் பயிரிடப்படுகிறது. தமிழ்நாட்டில் கடலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் விழுப்புரம் மாவட்டங்களில் அதிக அளவில் முந்திரி பயிரிடப்படுகிறது. கடலூர் மாவட்டம் பன்ருட்டியில் அதிகப்படியான விளைச்சலும் அதற்கு அடுத்தபடியாக அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் இரண்டாம் இடத்திலும் உள்ளது.

பயன்கள்

போலிப்பழம்

முந்திரிப்பழம் என அழைக்கப்படும் போலிப்பழமானது ஆரம்பத்தில் பச்சை நிறமாக இருந்து, பழுக்கும்போது மஞ்சள் அல்லது சிவப்பு கலந்த மஞ்சள் நிறத்தை அடையும். இது உண்ணப்படக் கூடியதாகவும், இனிப்பாக இருப்பதுடன், இனிய வாசனை ஒன்றையும் தரும். இது மிக மெல்லிய தோலுடையதாகவும், இதன் சதைப்பகுதி மிகவும் சாறு நிறைந்ததாகவும் இருப்பதனால், இதனை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு எடுத்துச் செல்லல் கடினமாகும். இதிலிருந்து சாறும் தயாரிக்கப்படுகின்றது.

முந்திரிக்கொட்டை

இதை கப்பல் வித்தான் கொட்டை என்றும் கூறுவர்.வணிகத்திற்காக வந்த பிற நாட்டினர் இதன் சுவையால் ஈர்க்கப் பட்டு கப்பலை விற்று இதை உண்டதாக கூறுவர்.போலிப் பழத்திற்கு வெளியே, சிறுநீரக வடிவில் காணப்படும் உண்மைப்பழமானது கடினமான ஒரு வெளி உறையையும், உள்ளே ஒரு விதையையும் கொண்டிருக்கும். அந்த விதையே பொது வழக்கில் முந்திரிக்கொட்டை என அழைக்கப்படுகின்றது. இது ஒரு தாவரவியலாளர்களின் பார்வையில் உண்மையான கொட்டை இல்லாவிட்டாலும் கூட, சமையல்சார் நிலையில் கொட்டை எனவே அறியப்படுகின்றது. இந்த முந்திர்க்கொட்டையைச் சூழவுள்ள கடினமான இரட்டை ஓட்டில் ஒவ்வாமையை உருவாக்கக் கூடிய, தோலில் நமைச்சலைத் தரக்கூடிய சில பதார்த்தங்களைக் கொண்டுள்ளது. சரியான முறையில் வறுத்து பதப்படுத்தப்படும்போது, இந்தப் பதார்த்தங்கள் சில அழிவடைந்துவிடும். ஆனாலும் பதப்படுத்தலின்போது மூடிய அறைக்குள் அதன் புகை வெளியேறுமாயின் நுரையீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். எனவே அவதானத்துடன் செய்யப்பட வேண்டும்.

மருத்துவக் குணம்

மேற்கோள்கள்

  1. Varghese, T.; Pundir, Y. (1964). Anatomy of the pseudocarp in Anacardium occidentale L. Proceedings: Plant Sciences. 59(5): 252-258.
  2. http://www.embrapa.br/embrapa/imprensa/artigos/2005/artigo.2005-12-29.6574944222
  3. "Cajucultura historia (in Portuguese)". பார்த்த நாள் February 2, 2010.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.