மருத்துவம்

மருத்துவம் என்பது நோய்களைக் குணப்படுத்துவதற்கான கலையும், அறிவியலும் ஆகும். இதனை நோய்களைக் கண்டுபிடிக்கவும், அவற்றை குணப்படுத்தவும், அவை வராமல் தடுக்கவும் உதவும் அறிவியல் அல்லது செயல்பாடு எனலாம்[1]. இவ்வகைச் செயல்பாடுகள் மூலம் மனிதர்களின் உடல் நலத்தைப் பேணுதல், மீள்வித்தல் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்ட பல்வேறு உடல்நலம் பேணற் செயல்முறைகளை உள்ளடக்கும்.

மருத்துவத்துடன் தொடர்புடைய, பண்டைக் கிரேக்கச் சின்னமான ஒற்றைப் பாம்புடன் கூடிய அஸ்கிளெப்பியஸ் கோல். மருத்துவத் தொடர்புள்ள பல தற்காலக் கழகங்களும், நிறுவனங்களும் அஸ்கிளெப்பியஸ் கோலைத் தமது சின்னங்களில் சேர்த்துள்ளன.
மருத்துவர் நோயாளிக்கு மருத்துவம் செய்கிறார். லூவர் அருங்காட்சியகம், பாரிஸ், பிரான்ஸ்.

தற்கால மருத்துவம், காயங்களையும் நோய்களையும் கண்டறிந்து குணப்படுத்துவதற்கு, உடல்நல அறிவியல், உயிர்மருத்துவ ஆய்வுகள், மருத்துவத் தொழில்நுட்பம் போன்றவற்றைப் பயன்படுத்துகிறது. இவ்வாறான குணப்படுத்தல் பெரும்பாலும், மருந்துகள், அறுவை மருத்துவம் மற்றும் பிற சிகிச்சைகள் மூலம் செய்யப்படுகிறது. தற்கால மருத்துவத்துக்கு மருத்துவத் தொழில்நுட்பமும், நிபுணத்துவமும் இன்றியமையாதவை எனினும், நோயாளிகளின் உண்மையான துன்பத்தைக் குறைப்பதற்கு, மனித உணர்வுகளைப் புரிந்து கொள்ளலும், கருணையும் தொடர்ந்தும் தேவைகளாகவே உள்ளன.

வரலாறு

முதன்மைக் கட்டுரை: மருத்துவத்துறையின் வரலாறு

பண்டைய மருத்துவ முறை

வரலாற்றுக்கு முந்திய கால மருத்துவத்தில் தாவரங்கள், விலங்கு உறுப்புக்கள், கனிமங்கள் அடங்கியிருந்தன. பல வேளைகளில் இவை சடங்குகளோடு மந்திர சக்தி வாய்ந்த பொருள்களாகப் பயன்படுத்தப்பட்டன. பெயர் பெற்ற ஆன்மீக முறைகளில், ஆன்மவாதம் (animism), ஆன்மீகவாதம் (spiritualism), ஆவித்தொடர்பு (shamanism), குறிசொல்லல் (divination) என்பவை அடங்கும். மருத்துவ மானிடவியல் பல்வேறு வரலாற்றுக்கு முந்திய மருத்துவ முறைகள் குறித்தும் அவற்றுக்குச் சமூகத்துடன் இருந்த தொடர்புகள் பற்றியும் ஆய்வு செய்கிறது.

மருத்துவம் குறித்த பழைய பதிவுகள், இந்தியத் துணைக்கண்டத்தின் சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், பண்டைய எகிப்திய மருத்துவம், மரபுவழிச் சீன மருத்துவம், பண்டைக் கிரேக்க மருத்துவம், பண்டைய அமெரிக்க குடிகளால் (மாயன்கள், செவ்விந்தியர்கள்)[2] வழங்கிய மருத்துவ முறைகள், என்பவை தொடர்பில் கிடைத்துள்ளன. பழங்காலக் கிரேக்க மருத்துவர்களான இப்போக்கிரட்டீசு, காலென் ஆகியோர் பிற்கால மருத்துவம் பகுத்தறிவு சார்ந்த முறையில் வளர்வதற்கு அடித்தளமிட்டனர்.

இடைக்கால மருத்துவ முறை

ரோமப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர், இஸ்லாமிய மருத்துவர்கள் இத்துறையில் முக்கியமான கண்டுபிடிப்புக்களை நிகழ்த்தினர். ஹிபோக்கிரட்டீசினதும், காலெனினதும் நூல்களின் அரபி மொழி மொழிபெயர்ப்புக்கள் அவர்களுக்கு உதவியாக அமைந்தன. தற்கால மருத்துவத்தின் தந்தை எனப்படும் பொலிமத் அவிசென்னா, அறுவை மருத்துவத்தின் தந்தை எனப்படும் அபுல்காசிஸ், சோதனை அறுவை மருத்துவத்தின் தந்தை எனப்படும் அவென் சோவார், சுற்றோட்ட உடற்றொழிலியலின் தந்தை என வழங்கப்படும் இபின் அல் நாபிஸ், அவெரோஸ் என்போர் இஸ்லாமிய மருத்துவத்தின் முன்னோடிகள் ஆவர். குழந்தை மருத்துவத்தின் தந்தை எனப்படும் ரேசஸ் என்பார், மேல் நாட்டு மத்தியகால மருத்துவத்தில் செல்வாக்குடன் விளங்கிய உடல்நீர்மவியம் (humorism) என்னும் கிரேக்க மருத்துவக் கோட்பாட்டை முதன் முதலில் பிழை எனக் காட்டினார்.

தற்கால நவீன மருத்துவ முறை

அறிவியல் மருத்துவத்திற்கு முந்தைய காலத்தில் பயன்படுத்திய முறைகள் தற்போதும் அறிவியல் மருத்துவத்துடன் சேர்த்தோ, அல்லது அவற்றுக்கு மாற்றீடாகவோ பயன்படுத்தப்படுகின்றன. அவை பாரம்பரிய அல்லது மரபுவழி மருத்துவம் என்றோ, மாற்று மருத்துவம் என்றோ அழைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக அக்கு பங்சர் எனும் குத்தூசி மருத்துவத்திற்கான வினைத்திறன் நிலையற்றதாகவும், ஒவ்வாத தன்மை கொண்டும் காணப்படுகின்றது[3]. ஆனால் தகுதியுள்ள, பயிற்சிபெற்ற ஒருவரால் செய்யப்படும்போது ஆபத்தற்றதாக இருக்கிறது[4]. ஆனால் இத்தகைய மருத்துவ முறைகள் பாதுகாப்பு, கிடைக்கக்கூடிய எதிர்வினைகள் என்ற எல்லையைத் தாண்டும்போது, மோசடி மருத்துவம் எனப்படுகிறது.

மருத்துவர்களுக்கான நெறிமுறைகள்

மருத்துவ நெறிமுறைகள் என்பது மருத்துவ பயிற்சியை மேற்கொள்ளும்போது மேற்கொள்ளவேண்டிய நெறிமுறைகள் ஆகும்.இதில் வரலாறு, தத்துவம், இறையியல், மற்றும் சமூகவியல் சார்ந்த மருத்துவ கல்வியியல் துறை சார்ந்த கொள்கைகளை உள்ளடக்கியது.பொதுவான மருத்துவ நெறிமுறைகள் ஆறு ஆகும்.அவை:

  • சுயாட்சி - நோயாளி சிகிச்சை மறுக்க அல்லது ஒத்துக்கொள்ள மருத்துவருக்கு உரிமை உண்டு.
  • பலனளித்தல் - ஒரு மருத்துவர் நோயாளி சிறந்த அக்கறை காட்டவேண்டும்.
  • நீதி - அவர் சுகாதாரம் சம்பந்தப்பட்ட பிறழ்வுகள் எதையும் அணுமதிக்க கூடாது.
  • குற்றம் செய்யாதிருத்தல்-நோயாளியை காயப்படுத்தாதிருத்தல்
  • மரியாதை - நோயாளி கண்ணியமாக நடத்தப்பட வேண்டும்
  • உண்மை மற்றும் நேர்மை - முடிவுகளை மறைக்காமல் கூறவேண்டும்.
 நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் 
 வாய்நாடி வாய்ப்பச் செயல். திருக்குறள்; 948
 உற்றான் அளவும் பிணியளவும் காலமும் 
 கற்றான் கருதிச் செயல்.திருக்குறள்; 949

மருத்துவக் கல்வி

மருத்துவ கல்வி மற்றும் பயிற்சி உலகெங்கிலும் வேறுபடுகிறது. இது பொதுவாக ஒரு பல்கலைக்கழக மருத்துவ பள்ளியில் கற்பிக்கபடுகிறது. இதைத் தொடர்ந்து முதுகலை தொழில் பயிற்சியாக மருத்துவ கல்வி கற்பிக்கபடுகிறது. கனடா மற்றும் ஐக்கிய அமெரிக்காவில் முதுகலை மருத்துவ பட்டம், பெரும்பாலும் Doctor of Medicine சுருக்கமாக MD(எம்.டி) எனப்படும். மருத்துவ தொழில்நுட்பம் ஒரு விரைவான விகிதத்தில் வளர்வதற்கு ஏற்ப தொடர்ந்து மருத்துவ கல்வியில் பல திருத்தங்கள் செய்யப்பட்டுவருகின்றன. மேலும் மருத்துவர்கள் தங்கள் மருத்துவ அறிவை மேம்படுத்த மருத்துவப் பத்திரிகைகள், கருத்தரங்குகள், மாநாடுகள் மற்றும் தவிர மற்றவர்களிடம் இணையவழிக் கல்வி மூலம் வளர்த்துக்கொள்கின்றனர்.

மருத்துவத்தின் பிரிவுகள்

மருத்துவ பயிற்சியாளர்களைத் தவிர குறிப்பிட்ட துறையில் பயிற்சி பெற்ற மருத்துவர்கள் இணைந்து சிறந்த மருத்துவ வசதியை தருகின்றனர்.

பல துறைகள் மருத்துவ துறையில் இருந்தாலும் பன்முறை மருத்துவமும் ஒரு தனித் துறையாக கருதப்படுகிறது.

மருத்துவத்தில் உள்ள முக்கிய உட்பிரிவுகள்

  • அடிப்படை மருத்துவ அறிவியல்
  • சிறப்பு மருத்துவம்
  • பலதுறை மருத்துவம்

அடிப்படை மருத்துவ அறிவியலின் வகைகள்

அடிப்படை அறிவியல் பிரிவுகள் மேலும் நுண்ணிய முறையில் நோய்க்காரணிகளை ஆய்வு செய்யவும், நோயினைக் குணப்படுத்தவும் உதவுகின்றன.

சிறப்பு மருத்துவம்

நாளும் மாறிவரும் மருந்துகளின் எதிர்ப்புத்திறன், புதிய ஆய்வுகளின் இற்றைப்படுத்தல் சிறப்பு மருத்துவத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. அடிப்படை மருத்துவ கல்விக்கு பிறகு மேற்படிப்பாக சிறப்பு மருத்துவம் பயிற்சி மருத்துவர்களால் பயிலப்படுகிறது.

பொதுநல மருத்துவமல்லாது, சிறப்பு மருத்துவம் & அறுவை சிகிச்சை சார்ந்த மருத்துவப்பிரிவுகளுள்ளன. இச்சிறப்பு மருத்துவ வகைகளை பயிற்சி மருத்துவர்கள் இன்னும் ஆழமாகக் கற்க வேண்டியுள்ளது.

சிறப்பு மருத்துவ வகைப்பாடு

  • அறுவை சிகிச்சை மருத்துவம்
  • உறுப்பு சார்ந்த (அ) சிகிச்சை உத்தி சார்ந்த சிறப்பு மருத்துவம்
  • வயது வரம்பிற்கான சிறப்பு மருத்துவம்
  • நோய் இயல்பரிதல் (அ) நோய்க்கான சிகிச்சை

அறுவை சிகிச்சை மருத்துவம்

அறுவை சிகிச்சையானது சிறப்பு சிகிச்சை என்று அளக்கப்படுகிறது. மேலும் அறுவை சிகிச்சை தேவை என்ற போது பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன. அறுவை சிகிச்சை தேவையா, இல்லையா என்பதன் முக்கியத்துவத்தை மருத்துவரே முடிவு செய்ய வேண்டும். அறுவை சிகிச்சையின் துணைபிரிவுகளாவன :

  • இருதய அறுவை சிகிச்சை,
  • எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை,
  • குடல் அறுவை சிகிச்சை,
  • சிறுநீரக அறுவை சிகிச்சை,
  • செவிமிடற்றியல்,
  • புற்றுநோய் அறுவை சிகிச்சை,
  • பொது அறுவை சிகிச்சை,
  • மகப்பேறு அறுவை சிகிச்சை,
  • மாற்று அறுவை சிகிச்சை,
  • வடிவமைப்பு (ப்ளாஸ்டிக் சர்ஜரி) அறுவை சிகிச்சை,
  • வாஸ்குலர் அறுவை சிகிச்சை,
  • விபத்து அறுவை சிகிச்சை,

எனினும் உணர்வகற்றுதல் (மயக்கமளித்தல்), அறுவை சிகிச்சையின் ஒரு பகுதியாக உள்ளது.

உறுப்பு சார்ந்த (அ) சிகிச்சை உத்தி சார்ந்த சிறப்பு மருத்துவம்

வயது வரம்பிற்கான சிறப்பு மருத்துவம்

  • குழந்தை மருத்துவ அறிவியல்
  • குமரப்பருவ மருத்துவ சிகிச்சை
  • முதியோர்களுக்கான சிறப்பு மருத்துவ துறை

நோய் இயல்பரிதல் (அ) நோய்க்கான சிகிச்சை

  • உயிர் காக்கும் மருந்தியல் - அவசர விபத்து மற்றும் மருத்துவ உதவி
  • தொற்று நோய்கள்
  • புற்று நோய்கள்

பலதுறை மருத்துவத்தின் வகைகள்

  • அவசர சிகிச்சை
  • உயிரிமருத்துவ பொறியியல்
  • கால்நடை மருத்துவம்
  • சுற்றுலா மருத்துவம்
  • பாதுகாப்பு மருத்துவம்
  • தடயவியல் மருத்துவம்
  • நல்வாழ்வு மற்றும் நோய் தணிப்பு மருத்துவம்
  • நோய்ப்பகுப்பியல்
  • பரிணாம மருத்துவம்
  • பாலியல் மருந்துவம், பாலினம் சார்ந்த மருத்துவம்
  • பேரழிவு மருத்துவம்
  • போதை விடுவிப்பு சிகிச்சை
  • மருத்துவத் தகவலியல்
  • லேசர் மருத்துவம்
  • வலி மேலாண்மை
  • வனப்பகுதி மருத்துவம்
  • விளையாட்டு மருத்துவம்

மரபுசார் மருத்துவ முறைகள்

மரபுவழி பலத் தலைமுறைகளாக அறிவு, திறன், நம்பிக்கை, அனுபவம், பண்பாடு மூலம் தொடரும் மருத்துவ அறிவியல்.

சித்த மருத்துவம்

மரபு வழி மருத்துவத்தில் சித்தர்களால் தமிழில் வழங்கப்பட்ட மருத்துவ முறை சித்த மருத்துவம்.[6][7] அகத்தியர் ஆசானாக பதினெண் சித்தர்கள் தொகுத்து வழங்கிய தமிழ் மருத்துவ முறை ஆகும்.[8] தோசங்கள் மூன்றாக வாத, பித்த, கப [9] முறை கொண்டு ஆராயப்படுகின்றன. முத்தோசங்களில் ஏற்படும் மாற்றங்களே நோயாகக் கணிக்கப்படுகிறது.

சித்த மருந்துகள்

சித்த மருந்துகளின் வகைப்பாடு :

  • மூலிகை - தாவர இலை, தழைகள் மூலம் உருவாக்கும் மருந்துகள்
  • தாது - கனிமங்களைக் கொண்டு உருவக்கும் மருந்துகள் (உப்பு, பாசனம், உலோகம், இரசம், கந்தகம்)
  • ஜீவம் (அ) சங்கமம் - விலங்குகளிடமிருந்து மெறப்படும் உப பொருட்களைக் கொண்டு உருவக்கும் மருந்துகள்.

யுனானி மருத்துவம் (அ) இசுலாமிய மருத்துவம்

ஆயுர்வேதம்

அக்கு பங்சர்

பண்டைய சீன மருத்துவம்

சப்பானிய காம்போ மருத்துவம்

அமெரிக்க பூர்வ குடிகளின் மருத்துவ முறைகள்

இயற்கை வைத்தியம்

இயற்கை வைத்தியம் (அ) பாட்டி வைத்தியம் (அ) வீட்டு மருத்துவம் - சமையற் சார்ந்த, உணவுப் பொருட்களைக் கொண்டு செய்யப்படும் தற்காலிக நிவாரண முறைகள். தமிழினத்தில் வழிவழியாக பெண்பால் உறவுகளுக்கு கற்பிக்கப்பட்டது.

மேற்கோள்கள்

  1. "Medicine". Oxford Dictionaries Online. Oxford University Press. அணுகப்பட்டது 8 Nov 2014.
  2. https://www.holistic-guide.com/herbal-medicine/mayan-herbal-medicine/
  3. David Colquhoun; Novella S (2013). "Acupuncture is a theatrical placebo: the end of a myth" (PDF). Anesthesia & Analgesia 116 (6): 1360–1363. doi:10.1213/ANE.0b013e31828f2d5e. பப்மெட்:23709076. http://www.dcscience.net/Colquhoun-Novella-A&A-2013.pdf.
  4. "Acupuncture (PDQ®)". National Cancer Institute. பார்த்த நாள் 15 Sep 2013.
  5. http://portal.acs.org/portal/acs/corg/content?_nfpb=true&_pageLabel=PP_ARTICLEMAIN&node_id=1188&content_id=CTP_003379&use_sec=true&sec_url_var=region1&__uuid=aa3f2aa3-8047-4fa2-88b8-32ffcad3a93e
  6. Recipes for Immortality : Healing, Religion, and Community in South India: Healing, Religion, and Community in South India, p.93, Wellington Richard S Weiss, Oxford University Press, 22-Jan-2009
  7. The Encyclopedia of Ayurvedic Massage, John Douillard, p. 3, North Atlantic Books, 2004
  8. http://nischennai.org/uploaded/pdf/e-Book-NIS.pdf
  9. http://www.sysrevpharm.org/sites/default/files/2-7.pdf
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.