இழையவியல்

இழையவியல்(அ) திசுவியல் (histology) என்பது உயிரினங்களில் இருக்கும் உயிரணுக்கள், இழையங்கள் ஆகியவற்றின் உடற்கூற்றியலை ஆராய நுணுக்குக்காட்டியைப் பயன்படுத்தும் அறிவியல் துறையாகும்[1]. இத்துறை உயிரியல், மருத்துவம் போன்ற அறிவியல் துறைகளுக்கு அத்தியாவசியமான ஒரு கருவி போன்றது. இழையவியல் அறிவைக் கொண்டு தாவரம், விலங்கு ஆகிய இரு வகை உயிரினங்களிலும் பல வகையான ஆய்வுகளை மேற்கொண்டு அவை பற்றிய அறிவைப் பெற்றுக் கொள்ள முடியும்.

ஒரு ஒளி நுணுக்குக்காட்டியின் மேடையில் வைக்கப்பட்டுள்ள சாயமூட்டப்பட்ட ஒரு இழைய மாதிரி
Hematoxylin, eosin கொண்டு சாயமேற்றப்பட்ட மனித நுரையீரல் இழையத்தின் இழைய மாதிரியின் நுணுக்குக்காட்டியூடான தோற்றம்

இழையங்களின் மெல்லிய தட்டையான துண்டுகளை, ஒளி நுணுக்குக்காட்டி மூலமோ, இலத்திரன் நுணுக்குக்காட்டி மூலமோ ஆராய்ந்து அவை பற்றிய தகவல்கள் அறியப்படும். இழையங்களில் அல்லது உயிரணுக்களில் உள்ள வேறுபட்ட அமைப்புக்களை சரியானபடி வேறுபடுத்திப் பார்ப்பதன் மூலம், அவற்றைப் பற்றிய ஆய்வை மேலும் சிறப்பிக்கலாம். இவ்வகையான வேறுபாட்டைக் கொண்டு வருவதற்கு இழையச் சாயங்கள் (histological stains) பயன்படுத்தப்படும்[2].

திசுவியலும் திசுநோய்த்தோற்றவியலும்

தைராய்டு சுரப்பியின் நுண்ணோக்கித் தோற்றம்

திசுவியல் என்பது ஆரோக்கிய நிலையில் உள்ள திசுக்களைப் பற்றிய படிப்பு. நோய்த் தாக்கத்துக்கு உட்பட்ட இழையங்களை இவ்வகை ஆய்வுக்குட்படுத்தி நோய்த்தன்மையை அறிந்து கொள்வதை இழையநோயியல் (Histopathology) என்று அழைப்பர். திசுவியல் என்பது அடிப்படை மருத்துவ அறிவியல் துறைகளுள் ஒன்றான உடற்கூற்றியலின் உட்துறைகளுள் ஒன்றாகும். திசு நோய்த்தோற்றவியலோ நோய்த்தோற்றவியல் (Pathology) துறையின் உட்பிரிவு ஆகும். அறுவை சிகிச்சை செய்யப்பட்ட கட்டி சாதாரண கட்டியா அல்லது புற்றுக்கட்டியா என்பதையும் அது புற்றுக்கட்டியாயின் அது புற்று நோய் எந்த நிலையில் உள்ளது என்பன போன்றவற்றை எல்லாம் திசு நோய்த்தோற்றவியலாளர் மட்டுமே உறுதிபடுத்த முடியும். இழையவியல் ஆய்வுக்காக சாயமூட்டப்பட்டு தயார் செய்யப்படும் மாதிரிகளை, நோயியலாளர்கள் (Pathologists) நுணுக்குக்காட்டியில் பார்வையிட்டு, தங்களது அவதானிப்பின் அடிப்படையில் நோய் ஆய்வுறுதியைச் செய்வார்கள். நோயியலாளர்களுக்காக இவ்வாறான மாதிரிகளை தயார் செய்து கொடுக்கும் அறிவியலாளர்களை, இழையவியல் தொழில் நுட்ப வல்லுநர்கள், அல்லது மருத்துவ ஆய்வக தொழில் நுட்ப வல்லுநர்கள் என்பர்.

மேற்கோள்கள்

  1. "Histology". Merriam-webster dictionary. பார்த்த நாள் 21 சூன் 2014.
  2. "Histology Stains". IvyRose Holistic. பார்த்த நாள் 21 சூன் 2014.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.