குப்தப் பேரரசு

குப்தப் பேரரசு (ஆட்சிக் காலம்: கி பி 320 – 551) இந்தியத் துணைக்கண்டத்தின் பெரும் பகுதிகளை ஆண்ட பேரரசுகளில் ஒன்றாக விளங்கியது. குப்தப் பேரரசை நிறுவியவர் ஸ்ரீகுப்தர் ஆவார். கி பி 320 முதல் 550 வரை, குப்தர் எனும் அரச மரபினரால் ஆளப்பட்ட இப்பேரரசு அதன் உச்சக்கட்டத்தில், அக்கால வட இந்தியாவின் பெரும் பகுதியை உள்ளடக்கி இருந்தது.[1] இப்பேரரசின் பகுதிகளாக இன்றைய பாகிஸ்தான், இந்தியா, வங்காளதேசம் ஆகிய நாடுகள் அமைந்திருந்தன.

குப்தப் பேரரசு
கி பி 240–550
 

 

 

அமைவிடம்
குப்த பேரரசு
தலைநகரம் பாடலிபுத்திரம்
மொழி(கள்) சமசுகிருதம் (கலை-இலக்கியம்); பிராகிருதம் (பேச்சு வழக்கு)
சமயம் இந்து சமயம்
பௌத்தம்
சமணம்
அரசாங்கம் முடியாட்சி
பேரரசர்
 -  240–280 ஸ்ரீகுப்தர்
 - 280 – 319 கடோற்கஜன்
 - 320 - 335 முதலாம் சந்திரகுப்தர்
 - 335 - 375 சமுத்திரகுப்தர்
 - 375 - 415 இரண்டாம் சந்திரகுப்தர்
 - 415 – 455 முதலாம் குமாரகுப்தர்
 - 455 – 467 ஸ்கந்தகுப்தர்
 - 467 – 473 புருகுப்தர்
 - 476 – 495 புத்தகுப்தர்
வரலாற்றுக் காலம் பண்டைய இந்தியா
 - உருவாக்கம் கி பி 240
 - குலைவு 550
Area 35,00,000 km² (13,51,358 sq mi)
முந்தையது
பின்னையது
மகாமேகவாகன வம்சம்
கண்வ குலம்
குசான் பேரரசு
பார்சிவா வம்சம்
மேற்கு சத்ரபதிகள்
கூர்ஜர-பிரதிகாரப் பேரரசு
பாலப் பேரரசு
இராஷ்டிரகூடர்
ஹெப்தலைட்டுகள்
தற்போதைய பகுதிகள்  இந்தியா
 பாக்கித்தான்
 வங்காளதேசம்
 நேபாளம்
Warning: Value not specified for "common_name"
தியான புத்தர், 5-ஆம் நூற்றாண்டுச் சிற்பம்

அறிவியல், கணிதம், வானியல், சமயம், இந்திய தத்துவம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கியதால், குப்தப் பேரசின் காலம் இந்தியாவின் பொற்காலம் எனக் குறிப்பிடப்படுவது உண்டு.[2] இந்த பொற்காலம் என்ற கருத்து தற்போதைய அறிஞர்களால் மறுக்கப்படுகிறது [3][4][5][6] குப்தர்களின் ஆட்சியில் ஏற்பட்டிருந்த அமைதியும், வளமும் அறிவியல் மற்றும் கலைத் துறைகளில் வளர்ச்சி ஏற்படுவதை ஊக்குவித்தன. பதின்ம எண்முறை, இந்திய எண் முறை மற்றும் பூஜ்ஜியம் குப்தப் பேரரசுக் காலத்துக் கண்டுபிடிப்புக்களே. வரலாற்றாளர்கள், செந்நெறி நாகரிகத்தின் ஒரு மாதிரியாக குப்தப் பேரசை, ஹான் பேரரசு, தாங் பேரரசு மற்றும் ரோமப் பேரரசுடன் ஒன்றாக வைத்து எண்ணுகிறார்கள்.[7][8]

குப்தப் பேரரசர்களில் மிகவும் புகழ் பெற்றவர்கள் முதலாம் சந்திரகுப்தர், சமுத்திரகுப்தர் இரண்டாம் சந்திரகுப்தர் மற்றும் முதலாம் குமாரகுப்தர் மற்றும் ஸ்கந்தகுப்தர் ஆவார்கள்.

மேலும் குப்தர்கள் காலத்தில் அறிவியல், தொழில்நுட்பம், தருக்கம், கணிதம், வானவியல், இந்தியத் தத்துவம், சோதிடம், இந்து தொன்மவியல், இந்து சமயம், பௌத்தம் மற்றும் சமணம் போன்ற சமயங்கள் செழித்ததுடன், இந்துப் பண்பாடு, சமசுகிருத மொழி இலக்கியங்கள் வளர்ந்தது.

நான்காம் நூற்றாண்டின் சமசுகிருத மொழியின் மகாகவி காளிதாசன் தமது இரகுவம்சம் எனும் காவியத்தில், குப்த ஆட்சியாளர்கள், நடு ஆசியாவின் ஆமூ தாரியா ஆறு பாயும் இடங்களில் வாழும் சகர்கள் ஹூணர்கள், காம்போஜர்கள், கிராதர்கள் மற்றும் கிண்ணர நாடுகளையும் சேர்த்து, இந்தியத் துணைக்கண்டத்தின் 21 நாடுகளை வென்றதாக குறிப்பிட்டுள்ளார்.[9]

இரண்டாம் சந்திரகுப்தர் ஆட்சிக் காலத்தில் பண்பாட்டு, நாகரீகம், கலைகள், இலக்கியங்கள் நன்கு வளர்ச்சி அடைந்தது. சமஸ்கிருத மொழியில் புராணங்கள், இராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற இதிகாச இலக்கியங்கள் ஓலைச் சுவடிகளில் எழுத்து வடிவம் பெற்றது.[10]

குப்தர்களின் ஆட்சியில் கவிஞர் காளிதாசன், வானிலை மற்றும் கணித அறிஞர்களான ஆரியபட்டர் மற்றும் வராகமிகிரர், பஞ்சதந்திர நூலை எழுதிய விஷ்ணு குப்தர், காம சூத்திரம் நூலை எழுதிய வாத்சாயனர், ஆயுர்வேத மருத்துவரான சுஸ்ருதர் போன்ற பல்கலை அறிஞர்கள் வாழ்ந்தனர்.[11]

குப்தர்கள் ஆட்சிக் காலத்தில்அறிவியல் மற்றும் அரசியல் நிர்வாகம் செழித்தோங்கி உச்சகட்டத்தை அடைந்தது. குப்தர்கள் தென்கிழக்கு ஆசியா நாடுகளுடனும் குறிப்பாக இலங்கை மற்றும் பர்மா போன்ற அண்டை நாடுகளுடன் பலமான வணிக உறவுகளைக் கொண்டிருந்தனர்.[12]

குப்தப் பேரரசர் விஷ்ணு குப்தர் காலத்தில், குப்தப் பேரரசின் ஆட்சிப் பகுதிகள் சிறிது சிறிதாக, நடு ஆசியாவின் ஹெப்தலைட்டு ஹூணர்களின் தொடர் ஆக்கிரமிப்புகளாலும், அண்டை நாட்டவர்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டு, இறுதியில் கி பி 550-இல் குப்தப் பேரரசு வீழ்ச்சியுற்றது.[13][14]

குப்தப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் இந்தியத் துணைக்கண்டத்தில் புதிய சிறிய, பெரிய நாடுகள் உருவானது. விஷ்ணு குப்தருக்குப் பின் வந்த பிற்கால குப்த அரசர்கள் மகதத்தின் பகுதிjளை மட்டும் ஆண்டனர்.

குப்தர்களின் தோற்றம்

பல வரலாற்று அறிஞர்களின் கூற்றுப் படி, குப்த வம்சத்தவர்கள் வைசிய வர்ணத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கருதப்படுகிறது.[15][16] இருப்பினும் தங்களது ஆட்சிப் பரப்பில் சமணம் மற்றும் பௌத்த சமயங்களின் நடவடிக்கைகளையும் ஆதரித்தனர்.

குப்தர்களின் தாயகம்

வட இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் அலகாபாத் என தற்போது அழைக்கப்படும் பிரயாகை பகுதியே குப்தர்களின் தாயகம் என ஜெய்ஸ்வால் போன்ற வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். பார்சிவா ஆட்சிப் பகுதியான பிரயாகை பகுதியே குப்த வம்சத்தினர் தோற்றம் எனக் கருதுகிறார்கள்.

சில வரலாற்று ஆய்வாளர்கள் வடக்கு அல்லது நடு வங்காளமே குப்தர்களின் தாயகம் என கருதுகிறார்கள்.

ஸ்ரீகுப்தர் மற்றும் கடோற்கஜன்

சிற்றரசராக இருந்த ஸ்ரீகுப்தர் தற்கால பிகார் மாநிலமான மகதத்தில் கி பி 240-இல் குப்தப் பேரரசை நிறுவி, கி பி 280 முடிய ஆண்டார்.[17] ஸ்ரீகுப்தர் லிச்சாவி நாட்டு இளவரசியை மணந்து மகதத்தை சீதனமாகப் பெற்று மகத நாட்டை விரிவு படுத்தினார். ஸ்ரீகுப்தரின் மகன் கடோற்கஜன் குப்த நாட்டை கி பி 280 முதல் 319 முடிய ஆண்டார்.

முதலாம் சந்திரகுப்தர் (319 – 335)

ராணி குமாரதேவியுடன் முதலாம் சந்திரகுப்தர் உருவம் பொறித்த நாணயம், வெளியிட்டவர் அவரது மகன் சமுத்திரகுப்தர் 335–380.

பின்னர் ஆட்சிக்கு வந்த பேரரசர் முதலாம் சந்திரகுப்தர் (319 – 335) குப்த பேரரசை தற்கால உத்திரப் பிரதேசம், பீகார் மற்றும் நேபாளப் பகுதிகளில் விரிவாக்கினார்.[18][19] முதலாம் சந்திரகுப்தர் மகதத்தின் லிச்சாவி நாட்டு இளவரசி குமாரதேவியை மணந்தவர். பாடலிபுத்திரம் நகரை தலைநகராகக் கொண்டு குப்தப் பேரரசை ஆண்டவர்.

சமுத்திரகுப்தர்

சமுத்திரகுப்தர், கி பி 335 முதல் 375 முடிய குப்த பேரரசை ஆட்சி செய்த பேரரசர். இவர் இந்திய வரலாற்றில் மிகச்சிறந்த போர்த்திறன் படைத்தவர் எனப் போற்றப்படுகிறார். திறமையான ஆட்சியாளர், போர் நுணுக்கங்கள் அறிந்தவர் மற்றும் இந்து சமயம், கலை, இலக்கியங்களை பேணியவர் என்பதால் சமுத்திரகுப்தரின் ஆட்சிக் காலத்தை இந்தியாவின் பொற்காலம் என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இவர் மத்திய இந்தியாவின் மால்வா, பத்மாவதி நாகர்கள், யௌதேயர்களின் யௌதேய நாடு, ஆபீர நாடு, அருச்சுனயான பகுதிகளையும், வடமேற்கு இந்தியாவின் காஷ்மீர், ஆப்கானித்தான் போன்ற பகுதிகளையும் வென்று குப்தப் பேரரசை விரிவாக்கினார். 45 ஆண்டுகள் ஆட்சி புரிந்த சமுத்திரகுப்தர், 380-இல் இறப்பதற்குள், வடக்கே இமயமலை முதல் தெற்கே நர்மதை ஆறு வரையிலும், மேற்கே யமுனை ஆறு முதல் கிழக்கே பிரம்மபுத்திரா ஆறு வரையில் இருந்த இருபது நாடுகளை குப்தப் பேரரசின் கீழ் கொண்டு வந்தார். எனவே இவரை இந்தியாவின் நெப்போலியன் என வரலாற்று ஆய்வாளர் வின்செண்ட் ஆர்தர் ஸ்மித் அழைப்பர்.[20]

சமுத்திரகுப்தர் பெரும் போராளியாக இருப்பினும், அனைத்து சமயங்களுக்கும், கலை மற்றும் இலக்கியங்களுக்கும் ஆதரவு நல்கினார். இவரது அரசவையில் கவிஞர் ஹரிசேனர் மற்றும் வசுபந்து, அசங்கர் போன்ற பௌத்த அறிஞர்கள் இருந்தனர். விஷ்ணு பக்தரான சமுத்திரகுப்தர், இலங்கை மன்னர் சிறிமேகவண்ணனுக்கு புத்தகயாவில் விகாரை எழுப்ப அனுமதித்தார்.

தீர்த்தங்கரரின் தலைச் சிற்பம், மதுரா அருங்காட்சியகம்

இரண்டாம் சந்திரகுப்தர்

இரண்டாம் சந்திரகுப்தரின் இரண்டு தங்க நாணயங்கள்
கிருட்டிணன் குதிரை வடிவ அரக்கன் கேசியுடன் போரிடுதல், 5-ஆம் நூற்றாண்டு

இராமகுப்தருக்குப் பின்னர் அரியணை ஏறிய இரண்டாம் சந்திரகுப்தரை, சந்திரகுப்த விக்கிரமாதித்தியன் என்றும் அழைப்பர். சமுத்திரகுப்தரின் மகனாக இவர் வடஇந்தியா முழுவதையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்தவர். இவரின் ஆட்சி காலமான கி பி 380 முதல் 415 முடிய உள்ள காலத்தில், கலை, இலக்கியம், கட்டிடக் கலை, சிற்பக் கலை செழிப்பின் உச்சத்தைத் தொட்டது. இந்து சமயம் மீண்டும் மிகப் பொழிவுடன் செழித்தோங்கியது. எனவே இரண்டாம் சந்திரகுப்தரின் ஆட்சிக் காலத்தை இந்தியாவின் பொற்காலம் என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.[21]உஜ்ஜைன் நகரத்தை குப்த பேரரசின் இரண்டாவது தலைநகராகக் கொண்டவர். இந்தியத் துணைக்கண்டத்தின் கிழக்கில் வங்கத்தை வென்றதுடன், மேற்கில் சகர்கள் மற்றும் மேற்கு சத்ரபதி மன்னர் மூன்றாம் ருத்திரசேனரை வென்று சௌராட்டிர தீபகற்பத்தை கைப்பற்றியவர்.

சந்திரகுப்தரின் அரசவையில் நவரத்தினங்கள் என்று சிறப்பாக அழைக்கப்பட்ட காளிதாசன் உள்ளிட்ட ஒன்பது அறிஞர்கள் குழுவினர் இருந்தனர்.

வெளிநாட்டு இனக்குழுக்களுக்கு எதிரான இரண்டாம் சந்திரகுப்தரின் படையெடுப்புகள்

நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த சமசுகிருதம்|சமசுகிருத]] இலக்கிய அறிஞர் காளிதாசன் தனது இரகுவம்சம் எனும் காவியத்தில், சந்திரகுப்த விக்கிரமாதித்தியன் எனப் பெயர் பெற்ற இரண்டாம் சந்திரகுப்தர், பரத கண்டத்தின் மேற்கிலும், கிழக்கிலும் மற்றும் வெளியிலும் இருந்த 21 இராச்சியங்களையும், இனக்குழுக்களையும் வென்றதாக குறித்துள்ளார். மேலும் பரத கண்டத்தின் வெளிபுறத்தின் மேற்கிலும், வடமேற்கிலும் இருந்த ஹூணர்களையும், காம்போஜர்களையும், இமயமலை வாழ் கிராதர்களையும், கிண்ணரர்களையும் வென்றதாக குறித்துள்ளார்.[9]

சேமேந்திரா எனும் காஷ்மீர பண்டிதர் எழுதிய பிரகத்கதா மஞ்சரி எனும் நூலில் இரண்டாம் சந்திரகுப்தர், சகர்கள், மிலேச்சர்கள், காம்போஜர்கள், கிரேக்கர்கள், ஹூணர்கள், பரசிகர்கள், துஷாரர்கள் போன்ற பரத கண்டத்தின் மேற்கிலும் வடமேற்கிலும் இருந்த இனக்குழுவினரை வென்றதாக குறித்துள்ளார்.[22][23][24]

பாஹியான்

இரண்டாம் சந்திரகுப்தரின் ஆட்சிக்காலத்தில், சீன பௌத்த அறிஞரான பாகியான், குப்தப் பேரரசிற்கு வருகை புரிந்து, கி பி 405 முதல் 411 முடிய கன்னோசி, மதுரா]], கபிலவஸ்து, குசிநகர், வைசாலி, பாடலிபுத்திரம், ராஜகிரகம், சாரநாத், சாஞ்சி போன்ற பௌத்த புனித தலங்களுக்கு வருகை புரிந்ததுடன், அன்றைய காலகட்ட குப்தப் பேரரசின் ஆட்சி நிர்வாகம், நீதிமுறை, சமுதாய நிலை, சமயங்கள் உள்ளிட்டவைகள் சிறப்பாக இருந்ததாக தனது பயணக்குறிப்புகளில் குறித்துள்ளார்.

முதலாம் குமாரகுப்தன்

கி பி 450-இல் முதலாம் குமாரகுப்தன் காலத்திய குப்தப் பேரரசு
தில்லியிலுள்ள தில்லி இரும்புத் தூண். இது குமாரகுப்தன் காலத்தில் உருவாக்கப்பட்டது

இரண்டாம் சந்திரகுப்தருக்குப் பின் அவர்தம் மகன் முதலாம் குமாரகுப்தர் மகேந்திர ஆதித்தியன் எனும் பட்டப் பெயருடன் குப்தப் பேரரசின் மன்னரானார்.[25] முதலாம் குமாரகுப்தர் கி பி 415 முதல் 455 முடிய அரசாண்டார். முதலாம் குமாரகுப்தர் நாளந்தாவில் பௌத்த சமயம் மற்றும் அறிவியல் போன்ற கல்விகளைப் பயில நாளந்தா பல்கலைக்கழகத்தை நிறுவினார். தற்போது நாளாந்தா பல்கலைக்கழகம், யுனேஸ்கோ அமைப்பால் 15 சூலை 2016-இல் உலகப்பாரம்பரியக் களங்ளில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது.[26][27][28] தில்லியிலுள்ள கல்வெட்டுக் குறிப்புகளுடன் கூடிய தில்லி இரும்புத் தூண் குமாரகுப்தன் காலத்தில் நிறுவப்பட்டது.

ஸ்கந்தகுப்தர்

முதலாம் குமாரகுப்தருக்குப் பின் ஆட்சிக்கு வந்த ஸ்கந்தகுப்தர் குப்தப் பேரரசின் ஆட்சியாளர்களில் எட்டாவதும் மற்றும் இறுதி பேரரசராக கருதப்படுகிறார்.[29] புஷ்யமித்திர சுங்கனை போரில் வென்ற ஸ்கந்தகுப்தர், கி பி 455-இல் நடு ஆசியாவிலிருந்து, குப்தப் பேரரசின் வடமேற்கு பகுதிகளை முற்றுகையிட்டு தொடர் தாக்குதல்களை நடத்திய வெள்ளை ஹூணர்கள் எனப்படும் ஹெப்பதலைட்டுகளை போரில் விரட்டி அடித்த போதிலும், கி பி 455 தொடங்கி குப்தப் பேரரசின் நிதி மற்றும் பொருளாதாரம் வற்றியது. கி பி 467-இல் ஸ்கந்தகுப்தரின் மறைவிற்குப் பின் அவரது பங்காளி முறை சகோதரன் புருகுப்தர் 467-இல் குப்தப் பேரரசின் மன்னரானர்.[30]

குப்தப் பேரரசின் வீழ்ச்சி

ஸ்கந்தகுப்தரின் மறைவிற்குப் பின்னர் குப்தப் பேரரசு படிப்படியாக வீழ்ச்சி அடையத் துவங்கியது.[31] ஸ்கந்தகுப்தருக்குப் பின்னர் பட்டமேறிய குப்த பேரரசர்களான புருகுப்தர் (467–473), இரண்டாம் குமாரகுப்தர் (473–476), புத்தகுப்தர் (476–495), நரசிம்மகுப்தர் (495—?), மூன்றாம் குமாரகுப்தர் (530—540), விஷ்ணுகுப்தர் (540—550), மற்றும் குறைவாக அறியப்பட்ட வைணவகுப்தர் மற்றும் பானுகுப்தர் காலங்களில் குப்தப் பேரரசு தொடர்ந்து வீழ்ச்சி காணத் துவங்கியது.

கி பி 480-இல் குப்தப் பேரரசின் வடமேற்கு பகுதிகளை ஹெப்தலைட்டுகளும், கி பி 500-இல் ஹூணர்களும் கைப்பற்றினர்.

கி பி 510-இல் ஹெப்தலைட்டுகளின் மன்னரான தோரமணனை, பானுகுப்தர் போரில் வென்றார்.[32][33]

கி பி 528-இல் மால்வா மன்னர் யசோதர்மனுடன் சேர்ந்து குப்தப் பேரரசர் நரசிம்மகுப்தர் ஹூணர்களின் மன்னர் மிகிரகுலனை வெற்றி கொண்டனர்.[34] கி பி ஆறாம் நூற்றாண்டு காலத்திய குப்த பேரரசர்களின் பெயர்கள் தெளிவாக அறியப்படவில்லை எனினும், விஷ்ணுகுப்தர் குப்தப் பேரரசை 540 முதல் 550 முடிய ஆண்டார்.

குப்தப் பேரரசின் தெற்கில் இருந்த வாகாடகப் பேரரசு மற்றும் வடமேற்கிலிருந்து ஹூணர்களின் தொடர் தாக்குதல்கள் குப்தப் பேரரசின் வீழ்ச்சிக்கு காரணமாயிற்று.[35]

குப்தர்களின் இராணுவம்

கையில் வில் ஏந்திய முதலாம் குமாரகுப்தர் உருவம் பொறித்த தங்க நாணயம்
குப்தர் காலத்திய செந்நிற மணற்கல்லாலான விஷ்ணுவின் சிற்பம், 5-ஆம் நூற்றாண்டு

இரண்டாம் சந்திரகுப்தர் ஆட்சிக் காலத்தில், குப்தப் பேரரசின் இராணுவத்தில் ஐந்து இலட்சம் தரைப்படையினரும், ஐம்பதாயிரம் குதிரைப் படையினரும், இருபதாயிரம் தேர்ப்படையினரும், பத்தாயிரம் யாணைப்படைகளும், 1200 போர்க் கப்பல்களும் இருந்தன.

குப்தப் பேரரசின் நிர்வாகம்

குப்தர்கள் கால வெட்டெழுத்தியல் ஆய்வுகளின் படி, குப்தப் பேரரசை, இராச்சியம், இராஷ்டிரம், தேசம், மண்டலம், பிரிதிவி மற்றும் அவனி போன்ற பெயர்களால் அழைக்கப்பட்டது. குப்தப் பேரரசு, புக்தி, பிரதேசம் மற்றும் போகா போன்ற பெயர்களில் 26 மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டு இருந்தது. மாகாணங்கள் விஷயா என்றும் அதன் நிர்வாகியை விஷயாதிபதி என்றும் அழைத்தனர். அதிகரணம் எனும் ஆலோசனைக் குழுவின் உதவியுடன் விஷயாதிபதி செயல்பட்டார். அதிகரணம் எனும் ஆலோசனைக் குழுவில் நகரத் தலைவர், சார்தவாகன், பிரதமகுளிகன் மற்றும் பிரதம காயஸ்தன் இருந்தனர். விஷயாவின் ஒரு பகுதியாக வீதி விளங்கியது.[36] குப்தர்கள் உரோமானியர்களுடன் வணிக உறவு கொண்டிருந்தனர்.

குப்தப் பேரரசின் மரபுரிமைப் பேறுகள்

சதுரங்கம் விளையாடும் கிருட்டிணன் மற்றும் ராதையின் ஓவியம்

குப்தப் பேரரசின் காலத்தில் வானியலாளர், கணித மேதை மற்றும் சோதிடருமான வராகமிகிரர் மற்றும் பூஜ்ஜியத்தை கண்டுபிடித்த வானியலாளர், கணித மேதையான ஆரியபட்டர் போன்ற அறிவியல் அறிஞர்களும், காவிய இலக்கியங்களைப் படைத்த சமசுகிருத மொழி மகாகவி காளிதாசன் மற்றும் ஆயுர்வேத மருத்துவ அறிஞரும், அறுவை சிகிச்சை மருத்துவருமான சுஸ்ருதர் குப்தப் பேரரசில் வாழ்ந்தவர்கள்.

சதுரங்க விளையாட்டு குப்தர்கள் காலத்தில் துவங்கியது.[37] இந்திய எண் முறை குப்தர்கள் காலத்தில் உருவாகி உலகெங்கும் பரவியது. குப்தர்கள் காலத்தில் வாத்சாயனர் எழுதிய காம சூத்திரம் எனும் ஆண்-பெண் உடலறவு பற்றிய நூல் பெரும் புகழ் பெற்றதாகும்.

பூமி தனது சுழன்று கொண்டே சூரியனை சுற்றுகிறது என்றும், பூமியும் மற்ற கோள்களும் சூரியனிடமிருந்தே ஒளியை பெறுகிறது என்ற உண்மையை உலகிற்கு முதலில் உணர்த்தியவர் குப்தர் காலத்து ஆரியபட்டர் என்ற கணித மேதையும், வானியல் அறிஞரும் ஆவார்.[38]

குப்தப் பேரரசின் ஆட்சியாளர்கள்

குப்தப் பேரரசின் வளர்ச்சியைக் காட்டும் வரைபடம்: முதலாம் சந்திரகுப்தர் விரிவாக்கம் செய்த பகுதிகள் (இளம்பச்சை நிறம்-வடக்கு), சமுத்திரகுப்தர் விரிவாக்கம் செய்த பகுதிகள் (செம்மண் நிறம்-நடுப்பகுதி), இரண்டாம் சந்திரகுப்தர் விரிவாக்கம் செய்த பகுதிகள் (பச்சை நிறம்-மேற்கு)

முற்கால குப்தர்கள்

  1. ஸ்ரீகுப்தர் (240 – 280)
  2. கடோற்கஜன் (280 – 319)

குப்தப் பேரரசர்கள்

  1. முதலாம் சந்திரகுப்தர் (320 – 335)
  2. சமுத்திரகுப்தர் (335 – 380)
  3. இராமகுப்தர் (380)
  4. இரண்டாம் சந்திரகுப்தர் (380 – 413/415)
  5. முதலாம் குமாரகுப்தன் (415 – 455)
  6. ஸ்கந்தகுப்தர் (455 - 467)

பிற்கால குப்தர்கள்

  1. புருகுப்தர் (467 – 473)
  2. இரண்டாம் குமாரகுப்தர் (473 - 476)
  3. புத்தகுப்தர் (476 – 495)
  4. நரசிம்மகுப்தர் (495 – ?)
  5. மூன்றாம் குமாரகுப்தர் (530 – 540)
  6. விஷ்ணுகுப்தர் (540 – 550)
  7. வைன்யகுப்தர் (550 – ?)
  8. பானுகுப்தர் (550 - ?)

கலை மற்றும் கட்டிடக் கலை

வட இந்தியாவில் குப்தர்களின் ஆட்சிக் காலத்தில் கலை, அறிவியல், பொருளாதாரம், இந்து, பௌத்தம் மற்றும் சமண சமயங்கள் நன்கு வளர்ச்சியுற்றதால், குப்தர்களின் ஆட்சிக் காலத்தை பொற்காலம் என்றனர். இந்துக் கடவுளர்கள், பௌத்த சமயத்தின் கௌதம புத்தர் மற்றும் சமண சமய தீர்த்தங்கர்களின் சிற்பங்கள் குப்தப் பேரரசு முழுவதும் செதுக்கப்பட்டது. மதுரா மற்றும் காந்தாரம் சிற்பக்கலையின் மையங்களாக விளங்கியது. கிரேக்க சிற்பக் கலை நயத்தில் கௌதம புத்தரின் சிலைகள் வடிக்கப்பட்டது. சமசுகிருத மொழி இலக்கியங்கள் வளர்ந்தன.

அஜந்தா, எல்லோரா குடைவரைக் கோயில்களில் இந்து, பௌத்த, சமண சமயங்களின் சிற்பங்கள், ஓவியங்கள் எழுப்பப்பட்டது.

உதயகிரி, கந்தகிரி குகைகள் மற்றும் உதயகிரி குகைகளில் விஷ்ணுவின் வராக அவதாரச் சிற்பங்கள் வடிக்கப்பட்டது.[39] தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் அச்சிடப்பட்டது.

தற்கால உத்தரப் பிரதேச மாநிலத்தின் தியோகர் நகரத்தில் பஞ்சயாதன முறைப்படி கட்டப்பட்ட தசாவதாரக் கோயில் மற்றும் சமண சமயத் தீர்த்தங்கரரான சாந்திநாதரின் கோயில் சமைக்கப்பட்டது.[40]

இதனையும் காண்க

குப்தர்கள் கட்டிய இந்து, சமணக் கோயில்களும் மற்றும் கோட்டைகளும்;

அடிக்குறிப்புகள்

  1. "Gupta Dynasty – MSN Encarta"..
  2. N. Jayapalan, History of India, Vol. I, (Atlantic Publishers, 2001), 130.
  3. Jha, D.N. (2002). Ancient India in Historical Outline. Delhi: Manohar Publishers and Distributors. பக். 149–173. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-7304-285-3.
  4. https://books.google.co.in/books?id=wsiXwh_tIGkC&pg=PA191&lpg=PA191&dq=dn+jha+golden+age
  5. https://thewire.in/21359/how-hindutva-historiography-is-rooted-in-the-colonial-view-of-indian-history
  6. The Gupta Dynasty
  7. Gupta Dynasty
  8. Raghu Vamsa v 4.60–75
  9. Gupta dynasty (Indian dynasty). Britannica Online Encyclopedia. Retrieved on 2011-11-21.
  10. Gupta dynasty: empire in 4th century. Britannica Online Encyclopedia. Retrieved on 2011-11-21.
  11. Trade | The Story of India – Photo Gallery. PBS. Retrieved on 2011-11-21.
  12. Agarwal, Ashvini (1989). Rise and Fall of the Imperial Guptas, Delhi:Motilal Banarsidass, ISBN 81-208-0592-5, pp.264–9
  13. Grousset, Rene (1970). The Empire of the Steppes. Rutgers University Press. பக். 69. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8135-1304-9.
  14. Nehra, R.K.. Hinduism and Its Military Ethos. Lancer Publishers,2010. https://books.google.com/books?id=WaJ2tp_n1AMC&pg=PA208. பார்த்த நாள்: 2012-08-25.
  15. Brannigan, Michael C.. Striking a Balance: A Primer in Traditional Asian Values. Rowman & Littlefield, 2010. https://books.google.com/books?id=axvPxswqNLQC&pg=PA17. பார்த்த நாள்: 2012-08-25.
  16. Agarwal, Ashvini (1989). Rise and Fall of the Imperial Guptas, Delhi:Motilal Banarsidass, ISBN 81-208-0592-5, pp.84–7
  17. Chandra Gupta I
  18. "Founder of the Gupta Empire Maharaja Sri Gupta". theindianhistory.org.
  19. Smith, Vincent A. (1999). The Early History of India: From 600 B.C. to the Muhammadan Conquest. Atlantic. பக். 289. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-7156-618-9. https://books.google.com/books?id=8XXGhAL1WKcC&pg=PA289.
  20. <http://www.britannica.com/EBchecked/topic/92493/Chandra-Gupta-II>.
  21. ata shrivikramadityo helya nirjitakhilah Mlechchana Kamboja. Yavanan neechan Hunan Sabarbran Tushara. Parsikaanshcha tayakatacharan vishrankhalan hatya bhrubhangamatreyanah bhuvo bharamavarayate (Brahata Katha, 10/1/285-86, Kshmendra).
  22. Kathasritsagara 18.1.76–78
  23. Cf:"In the story contained in Kathasarit-sagara, king Vikarmaditya is said to have destroyed all the barbarous tribes such as the Kambojas, Yavanas, Hunas, Tokharas and the, National Council of Teachers of English Committee on Recreational Reading – Sanskrit language.
  24. Agarwal, Ashvini (1989). Rise and Fall of the Imperial Guptas, Delhi:Motilal Banarsidass, ISBN 81-208-0592-5, pp.191–200
  25. http://whc.unesco.org/en/list/1502/ Archaeological Site of Nalanda Mahavihara (Nalanda University) at Nalanda, Bihar
  26. 3 Indian Sites Make It To UNESCO's World Heritage List
  27. https://www.holidify.com/blog/world-heritage-sites-in-india/ 3 Indian Places Added To World Heritage Sites; Check-out Complete List of 35 World Heritage Sites in India
  28. Raychaudhuri, p. 510
  29. Raychaudhuri, p. 516
  30. Sachchidananda Bhattacharya, Gupta dynasty, A dictionary of Indian history, (George Braziller, Inc., 1967), 393.
  31. Ancient Indian History and Civilization by Sailendra Nath Sen p.220
  32. Encyclopaedia of Indian Events & Dates by S. B. Bhattacherje p.A15
  33. Columbia Encyclopedia
  34. Singh, Upinder (2008). A History of Ancient and Early Medieval India: From the Stone Age to the 12th Century. New Delhi: Pearson Education. பக். 480. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-317-1677-9. https://books.google.com/books?id=H3lUIIYxWkEC.
  35. Mahajan, pp. 530–1
  36. H. J. R. Murray (1913). A History of Chess. Benjamin Press (originally published by Oxford University Press). பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-936317-01-9. இணையக் கணினி நூலக மையம்:13472872.
  37. Thomas Khoshy, Elementary Number Theory with Applications, Academic Press, 2002, p. 567. ISBN 0-12-421171-2.
  38. Harle, 92-97
  39. Harle, 113-114

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

முன்னர்
கண்வ குலம்
குப்தப் பேரரசு
கி பி 240–550
பின்னர்
பாலப் பேரரசு
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.