யவனர்

தமிழகத்திற்குக் கடல் வழியே மரக்கலங்களில் வந்து வாணிகம் செய்த கிரேக்கரையும், பிற்பாடு ரோமானியரையும்[1] யவனர் என்று சங்கநூல்கள் குறிப்பிடுகின்றன.[2] சங்ககால ரோம கிரேக்க தமிழக தொடர்பை உறுதிப்படுத்தும் வண்ணம் ரோம நாணயங்களும் கிரேக்க நாணயங்களும் பல தமிழகத்தில் கிடைத்துள்ளன.[3]

தமிழகத்தில் கிடைத்த ரோமக் காசுகள்

மிலேச்சர்

கடல் வாணிகத்தின்போது மரக்கலங்களில் கப்பல் தலைவனுக்குப் பாதுகாவலராக வந்த யவனர் மிலேச்சர் எனப்பட்டனர். இவர்களில் சிலர் தமிழ் அரசர்களுக்கு மெய்காப்பாளராகவும் தங்கிவிட்டனர். இவர்கள் ஊமையர்.[4]

வணிகம்

மிளகு

யவனர் மரக்கலங்களில் வந்தனர். சேரநாட்டு முசிறித் துறைமுகத்தில் அவற்றை நிறுத்தினர். முசிறித் துறைமுகம் பெரியாறு கடலில் கலக்குமிடத்தில் இருந்தது. பெரியாறு அக்காலத்தில் கப்பல் செல்லும் அளவுக்கு அகன்றும் ஆழமாகவும் இருந்தது. அதன் ஆற்று நுரை கலங்கக் கலம் செலுத்திக்கொண்டு உள்நாட்டுப் பகுதிக்குச் சென்றனர். தாம் கொண்டுவந்த பொன்னைப் பண்டமாற்றாகக் கொடுத்துவிட்டுக் 'கறி' என்னும் மிளகை மூட்டை மூட்டையாக வாங்கிக்கொண்டு சென்றனர்.[5]

மதுக் கிண்ணம்

இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் என்னும் பாண்டிய மன்னன் யவனர் அன்பளிப்பாகத் தந்த பொன்னால் செய்யப்பட்டதும், அதிக வேலைப்பாடுகள் கொண்டதுமான கிண்ணத்தில் மகளிர் தேறல் கள்ளை ஊற்றித் தர உண்டு மகிழ்ந்தான் என்று கூறப்படுகிறது. எனவே யவனர் விற்பனை செய்த பொருள்களில் தங்கத்தாலான மதுக் கிண்ணமும் ஒன்று எனத் தெரியவருகிறது.[6]

ஓதிம விளக்கு

அன்னத்தைத் தலையிலே கொண்ட ஓதிம விளக்கு யவனர் விற்பனை செய்த பொருள்களில் ஒன்று.[7]

பாவை விளக்கு

பாவை விளக்கு அரண்மனைக்கு ஒளி ஊட்டிய விளக்குகளில் ஒன்று[8] இதுவும் யவனர் விற்பனை செய்த விளக்குகளில் ஒன்று எனலாம். இதனை 'யவனர் இயற்றிய வினைமாண் பாவை' என்று நக்கீரர் குறிப்பிடுகிறார். பாவை ஒருத்தி அகல்விளக்கைக் கையில் ஏந்தி நிற்பது போலவும், அந்த அகல் விளக்கில் ஐந்து திரிகள் போட்டு எரியவிட்டனர் என்றும், அது பாண்டிநாட்டு அரண்மனைப் பள்ளியறையில் எரிந்துகொண்டிருந்தது என்றும் நக்கீரர் குறிப்பிடுகிறார்.[9]

புலிப்படை

யவனர் மெய்ப்பை என்று சொல்லப்பட்ட சட்டை அணிந்திருந்தனர். ஆடைகளைச் செறித்து இறுக்கமாகக் கட்டியிருந்தனர். அதன் மேல் மத்திகை என்னும் அரைக்கச்சை அணிந்திருந்தனர். அவர்கள் வலிமை மிக்க யாக்கையைப் பெற்றிருந்தனர். அவர்களின் தோற்றம் பிறருக்கு அச்சம் தருவதாக அமைந்திருந்தது. அவர்கள் வன்கண் என்னும் முரட்டுக் குணம் உடையவர்களாக விளங்கினர். அரசனது பாசறையில் இவர்களுக்கும் தனி இடம் இருந்தது. அரசனுக்கு இவர்கள் புலிப்படை நடத்தி உதவிவந்தனர். பாசறையில் இவர்கள் புலியைச் சங்கிலித் தொடரால் பிணித்திருந்தனர். [10]

யவனர் பிணிக்கப்படல்

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்னும் சேர வேந்தன் தனக்கு நன்மை தராத வன்சொல் பேசிய யவனரைப் போரிட்டு வென்று அவர்களைக் கைது செய்து கொண்டுவந்து தன் நாட்டுச் சிறையில் அடைத்திருக்கிறான்.[11]

மேற்கோள்கள்

  1. பண்டைய தமிழகம், சி.க. சிற்றம்பலம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இலங்கை.
  2. யவனர்
  3. தமிழகத்தில் கிரேக்கக் காசுகள், தமிழகத்தில் ரோமக் காசுகள்
  4. முல்லைப்பாட்டு - 65-66
  5. தாயங்கண்ணனார் - அகநானூறு 149
  6. நக்கீரர் - புறநானூறு 56
  7. கடியலூர் உருத்திரங் கண்ணனார் - பெரும்பாணாற்றுபடை 316
  8. முல்லைப்பாட்டு - 85
  9. நக்கீரர் - நெடுநல்வாடை 101-104
  10. முல்லைப்பாட்டு - 59 முதல் 62
  11. பதிற்றுப்பத்து இரண்டாம்பத்து - பதிகம்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.