தாயங்கண்ணனார்

தாயங்கண்ணனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். 11 பாடல்கள் இவர் பாடியனவாகக் காணக் கிடக்கின்றன. இவரது மனைவியார் தாயங்கண்ணியார். இவரும் புலவர்.[1]

புறநாறூற்றுப் பாடல்கள்

புறநானூறு 397 பாடல் தரும் செய்திகள்

வாய்வாள் வளவன் எனப் போற்றப்படும் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்

குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் சங்ககாலச் சோழப் பெருவேந்தர்களில் ஒருவன். இவன் சிறந்த கொடைவள்ளல். இவன் போர்ப் பாசறையில் இருந்தபோது அப் பாசறை வாயிலில் இருந்துகொண்டு அவனைத் துயிலெழுப்பும் பாடலைத் தாயங்கண்ணனார் பாடினார். அப்போது அங்கே அவன் புலவருக்கு நெய்யில் பொறித்த கறித்துண்டுகள், மணிக்கலத்தில் தேறல் ஆகியவற்றைத் தந்து பசியைப் போக்கினான். பாம்புத் தோல் போன்ற ஆடைகளையும், அணிகலன்களையும் மழை பொழிவது போல் வாரி வாரி வழங்கினான்.

தாயங்கண்ணனார் அந்தணர்

அறுதொழிலோர் அறம் புரிந்து எடுத்த தீ வயலில் பூத்த தாமரை போல் இருந்தது என்று இவர் கூறுவதால் இவர் பார்ப்பனப் புலவர் எனலாம். இவரது மனைவி தாயங்கண்ணியார் தம் பாடலில் கணவனை இழந்த கைம்பெண்ணின் தலைமயிர் கொய்யப்படும் பார்பனரின் பழக்கத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

புறநானூறு 356 பாடல் தரும் செய்திகள்

  • காடு வாழ்த்து

மனைவி கணவன் எரியும் சுடுகாட்டுக்குச் சென்று அழுவாள். சுடுகாட்டில் பகலிலும் கூகை குழறும். பிணம் எரியும் ஈம விளக்கில் பேய் மகளிரோடு சேர்ந்து அழுவாள். கணவனின் எலும்பு எரியும் கனலை மனைவியின் கண்ணீர் அணைக்கும். இதனை முதுகாடு என்றும் கூறுவர். இந்த முதுகாட்டைத் தாண்டி வாழ்வோர் உலகில் யாரும் இல்லை.

அகநானூற்றுப் பாடல்கள்

அகநானூறு 105 பாடல் தரும் செய்திகள்

  • பாலைத்திணை

மகளை அவளது காதலனுடன் அனுப்பிவைத்த தாய் சொல்கிறாள்.

ஈனாத் தாய் (செவிலி) மணிக்கிண்ணத்தில் பாலை ஊட்டினாலும் உண்ணாத என் மகளை எழினி நாட்டுக்கு அனுப்பிவிட்டேனே!

எழினி அரசன்

குதிரை வீரன் 'பல்வேல் எழினி' அவனது மறவர் பகைவர் நாட்டுக் கறவைப் பசுக்களைக் கவர்ந்துவருவர்.

அகநானூறு 132 பாடல் தரும் செய்திகள்

தலைவன் நாட்டு வண்டின் இயல்பைச் சாக்காக வைத்துக் கூறி தலைவன் தலைவியைத் திருமணம் செய்துகொண்டு அவனுடைய ஊருக்கு அழைத்துச் செல்லவேண்டும் என்று தோழி தலைவனிடம் சொலகிறாள்.

தலைவன் நாட்டு வண்டுகள் சுனையில் பூத்த பூக்களைத் திறந்து பார்க்குமாம். அங்கிருந்து பறந்து சென்று வேங்கை மரத்திலுள்ள பூக்களை ஊதுமாம். அங்கிருந்து பறந்து சென்று காந்தள் பூவில் தேன் உண்ணுமாம். இவையெல்லாம் போதா என்று யானையின் மதநீரைக் குடிக்கக் கனவு காணுமாம். (வண்டுபோல் தலைவன் இருந்துவிடக் கூடாது என்பது தோழி கூறும் அறிவுரை.

மேலும் தலைவன் தலைவியை அடையும் வாய்ப்பு இல்லை என்பதற்கும் காரணம் கூறுகிறாள். தினை விளைந்து அறுவடை செய்யப்பட்டுவிட்டதாம். எனவே தலைவி தினைப்புனம் காக்க வரமாட்டாளாம். தலைவனை நினைந்து தலைவி ஏங்குவதால் அவளது தோற்ற வேறுபாட்டைக் கண்டு ஊரார் பழி தூற்றுகின்றனராம். மேலும் இவளைப் பெற்ற கானவர் குடியினரோ களிற்று முகத்தில் பாய்ந்த கறையுடன் கூடிய அம்பும் கையுமாகத் திரிபவர்களாம் (உன்னைக் கண்டால் விடுவார்களா?) என்கிறாள்.

அகநானூறு 149 பாடல் தரும் செய்திகள்

கரடிக் கூட்டம் மேயும் காட்டின் வழியே சென்று பெறுதற்கு அரிய செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும். திருப்பரங்குன்றத்துச் சுனையில் பூத்திருக்கும் நீல மலர் போன்ற கண்ணினை உடைய இவளை பிரிந்து வரமாட்டேன் என்று தலைவன் பொருள் தேடச் செல்லத் தீர்மானித்த தன் நெஞ்சுக்குச் சொல்கிறான்.

எண்கு

எண்கு என்பது கரடி. கரடி கறையான் புற்றைக் கிண்டிக் கரையானை உண்ணும். இது திகட்டிவிட்டால் இரும்பை என்னும் இலுப்பைப் பூவை மேயும்.

வரலாற்றுச் செய்திகள்

தாயங்கண்ணனார் சேரநாட்டில் யவனர் செய்த வாணிகம் பற்றியும், பாண்டிநாட்டுக் கூடல் நகருக்கு மேற்கில் முருகப்பெருமான் குடிகொண்டுள்ள திருப்பரங்குன்றம் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

யவனர்

கிரேக்க நாட்டு மக்களை யவனர் என்றனர். அவர்கள் முசிறித் துறைமுகத்தின் வழியாக நுழைந்து பெரியாற்று நீர்வழியில் முன்னேறி வாணிகம் செய்தனர். பெரியாறு சங்ககாலத்தில் 'சுள்ளியம்பேரியாறு' என்னும் விரிவான விளக்கப் பெயருடன் விளங்கியது.

சேரலர்

சேரலர் என்னும் சொல் 'சேர்ப்பு' என்னும் சொல்லோடு தொடர்புடையது. கடலும் நிலமும் சேரும் நிலம் சேர்ப்பு. சேர்ப்பு நிலத் தலைமகனைச் 'சேர்ப்பன்' என்பது தமிழ் வழக்கு. சேரநாட்டின் பெரும்பகுதி சேர்ப்புநிலம். பெரியாறு பாயும் சேர்ப்புநிலப்பகுதியை ஆண்ட அரசர்கள் சேரலர் எனப்பட்டனர்.

முசிறி

முசிறி Muziris சேர நாட்டின் துறைமுகம். பெரியாறு கடலோடு கலக்குமிடத்தில் முசிறித் துறைமுகம் அமைந்திருந்தது. யவன வணிகர் இங்கு வந்து வாணிகம் செய்தனர்.

கருவூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட சேர மன்னர்கள் காவிரியாற்றங் கரையிலுள்ள ஓர் ஊரைத் தம் வஞ்சித் தலைநகர் ஆட்சியின் நினைவாக அமைந்திருந்த முசிறித் துறைமுகத்தின் பெயரை முசிறி என்று இட்டு வழங்கினர்.

செழியன்

செந்தமிழைச் செழிக்கச் செய்த பாண்டிய மன்னனைச் செழியன் என வழங்கினர்ய

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் செழியனின் தலைநகர் கூடல் நகருக்குக் மேற்குப்பக்கத்தில் உள்ளது. அங்குள்ள முருகன் கோயிலில் சங்ககாலத்திலும் திருவிழாக்கள் இடையறாது நடந்துகொண்டிருந்தன. இங்குள்ள முருகன் சிலை மயில்மேல் காட்சி தருவது.

அகநானூறு 213 பாடல் தரும் செய்திகள்

தொண்டையர்

பத்துப்பாட்டில் ஒன்றான பெரும்பாணாற்றுப்படை நூலின் பாட்டுடைத் தலைவன் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு அரசாண்ட தொண்டைமான் இளந்திரையன். இவனது முன்னோர் இப்பாடலில் தொண்டையர் என்று குறிப்பிடப்படுகின்றனர்.

வேங்கடம்

வேங்கடம் என்னும் சொல் விரும்பத் தகுந்த காடு என்னும் பொருளைத் தரும். இப்போது உள்ள திருப்பதி மலை மலைதான் வேங்கடம். இந்த மலைக் காடு தொண்டையர் குடி மக்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது.

வடுகர்

தொண்டையரின் வேங்கடமலைக் காடுகளைக் கடந்து சென்றால் வடுகர் தேயம் இருந்தது. வடுகர் அதிரல் பூக்களைத் தலையில் சூடிக்கொள்வர். இந்தப் பூக்களைச் சூடிக்கொண்டு சென்று அவர்கள் ஆனிரைகளைக் கவர்ந்துவருவர். அவற்றை நாள்தோறும் உண்ணும் பலி உணவுக்காகவும், கள்ளுக்காகவும் விலையாகக் கொடுப்பர். பொருள் தேடச் சென்ற தமிழர் வடுகர் தேயத்துக்கும் சென்றனர்.

கொல்லிக் குடவரை

வானவன் என்னும் சேர அரசர்களுள் ஒருவன் கொல்லிமலை நாட்டை வென்று தனதாக்கிக்கொண்டான். இந்தக் கொல்லிமலை மூங்கிலுக்குப் பெயர் பெற்றது. இந்த மூங்கில் போல் தலைவியின் தோள் வனப்புடன் விளங்கியதாம்.

காவிரி ஆற்று அறல்

சோழர்கள் வள்ளண்மை மிக்கவர்கள். கழல்வளையல் அணிந்த அவர்களின் கை எப்போதும் கவிழ்ந்தே இருக்குமாம். அது பிறர் ஏந்தும் கலம் என்னும் ஏனத்தை நிறைவுறச் செய்வதற்காகக் கொடை வழங்கும் பாங்கில் கவிழ்ந்தே இருக்குமாம்.

இந்தச் சோழர்களின் காவிரியாற்று மணல் போல் தலைவியின் கூந்தல் அறல் அறலாகப் படிந்திருக்குமாம்.

அகநானூறு 237 பாடல் தரும் செய்திகள்

உறந்தையில் விருந்து

உண்ணத் திணைப் பொங்கலும், பருகக் கருப்பஞ்சாறும் சோழரின் தலைநகர் உறையூரில் விருந்தாகக் கிடைக்குமாம். இப்படி விருந்து படைக்கும் உறையூருக்குச் சென்றாலும் தலைவன் தலைவியின் எயிற்றில் ஊறும் இன்சுவையை மறந்து தங்கமாட்டான் என்று சொல்லித் தோழி தலைவியைத் தேற்றுகிறாள்.

செடியினம்

பாதிரி

பாதிரிப்பூ சிறிய காம்பினை உடையது. வரி வரியாகத் திரண்டு கொத்தாகப் பூக்கும். மணலில் படர்ந்திருக்கும் அதிரல் பூக்களின் மேல் பாதிரிப் பூக்கள் கொட்டிக் கிடக்கும்.

அதிரல்

இது மணலில் படரும் ஒருவகைக் கொடிப்பூ.

குரவு

குரவம்பூ பாம்மின் பல் போலப் பூக்கும். இதனை இக்காலத்தில் நாகலிங்கப் பூ என்பர்.

அகநானூறு 319 பாடல் தரும் செய்திகள்

கடுவினை மறவர்

நிலம் பாலையாக மாறிய காலத்தில் அந்நில மறவர் தன் வில் வலிமையால் வாழ்க்கை நடத்திவந்தனர். இந்தச் செயலைப் புலவர் தாயங்கண்ணனார் கடியத் தக்க செயல் என்று குறிப்பிடுகிறார். அவர்களைக் 'கடுவினை மறவர்' என்று குறிப்பிடுவது அவர் அவர்களைகளைக் கடியும் வன்சொல்.

செடியினம்

வேங்கை

மகளிர் மார்பகத்தின் நன்னிறத்தில் அவர்கள் தலைவனைப் பிரிந்திருக்கும் காலத்தில் தோன்றும் சுணங்கு என்னும் பொன்னிறம் பூத்து வேங்கைப் பூ கொட்டிக் கிடப்பது போல இருக்குமாம்.

அகநானூறு 357 பாடல் தரும் செய்திகள்

செடியினம்

ஈங்கை

ஈங்கை நீண்ட முள்ளுடன் கூடிய ஒருவகைச் செடி. இதன் பழம் வெண்மையாக இருக்கும். (இக்காலத்தில் சிறுவர்கள் இதனைப் பறித்து உண்பர்.)

சூரல்

(சூரல் வளைந்த முள்ளுடன் கூடிய ஒரு செடி. இதன் பழம் கருமையாக இருக்கும். இதனையும் சிறுவர்கள் பறித்து உண்பர்.) நிறைமாத யானை வயா வேட்கையில் இருக்கும்போது அதன் ஆண்யானை ஈங்கை, சூரல் பழங்கள் உள்ள செடியை அதற்கு வளைத்துக் கொடுக்குமாம்.

நீலம்

நீலப் பூ தன் இலையாகிய அகன்ற அடையிலிருந்து அவிழ்ந்து விழுந்து தண்ணீரில் மிதந்து காற்றில் அலைக்கழிவது போல தலைவியின் கண் தலைவனைப் பிரிந்திருந்தபோது கண்ணீரில் மிதந்தது என்கிறார் புலவர் தாயங்கண்ணனார்.

உம்பல் பெருங்காடு

உம்பல் என்னும் சொல் யானையைக் குறிக்கும். ஆனைமலைக் காடுகளை உம்பல் பெருங்காடு என வழங்கினர். உம்பற்காடு எனப்பட்ட இந்தக் காட்டில் யானைகளைப் புலி கொன்று குருதி பட இழுக்குமாம்.

குறுந்தொகை 319 பாடல் தரும் செய்திகள்

மாலைக் காலத்தைப் புதுமையான கண்ணோட்டத்தில் இந்தப் பாடல் பார்க்கிறது. மான் தன் பிணையைத் தழுவிக்கொண்டு புதரில் பதுங்கிக்கொள்ளுமாம். யானை தன் பிடியைத் தழுவிக்கொண்டு மலைப்பகுதிக்குச் சென்றுவிடுமாம்.

நற்றிணை 219 பாடல் தரும் செய்திகள்

பழக்க வழக்கம்

பரதவர் இரவு வேளையில் தம் திமில் படகுகளில் விளக்கேற்றி வைப்பர். அது மதில் சுவர்களில் ஏற்றி வைத்த விளக்குகளைப் போல இரவில் தோன்றுமாம்.

மேற்கோள்கள்

  1. தாயங்கண்ணனார் - தமிழ் இணையக் கல்விக் கழகம்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.