யோவான் (திருத்தூதர்)

புனித யோவான் அல்லது புனித அருளப்பர் (ஆங்கிலம்: Saint John) இயேசு கிறிஸ்துவின் பன்னிரு திருத்தூதர்களில் ஒருவர்;[1] இவர் இயேசுவின் அன்பு சீடர் ஆவார். கிறிஸ்தியல் கொள்கைகளைக் கொண்ட யோவான் நற்செய்தியை இவர்தான் எழுதினார் என்று பாரம்பரியமாக நம்பப்படுகிறது. இவர் கிறிஸ்தவ திருச்சபையின் தொடக்க காலத்தில் இருந்தே புனிதராக போற்றப்படுகிறார்.

திருத்தூதர் புனித யோவான்
இயேசுவின் அன்பு சீடர்
நற்செய்தியாளர்
பிறப்புc. கி.பி.6
கலிலேயா
இறப்புc. கி.பி.100
எபேசு, ஆசியா மைனர்
ஏற்கும் சபை/சமயம்கிறிஸ்தவம்
திருவிழாடிசம்பர் 27 (மேலைத் திருச்சபை)
செப்டம்பர் 26 & மே 8 (கீழைத் திருச்சபை)
சித்தரிக்கப்படும் வகைபுத்தகம், கழுகு, இரசக் கிண்ணம்
பாதுகாவல்நட்பு, எழுத்தாளர்கள், இறையியலாளர்கள்

புனிதரின் வாழ்வு

புனித யோவான் கலிலேயாவைச் சார்ந்தவர். இவரது தந்தை பெயர் செபதேயு. இயேசுவின் திருத்தூதர்களுள் ஒருவரான பெரிய யாக்கோபு இவரது சகோதரர் ஆவார்.[2] இவர்கள் மீன் பிடிக்கும் தொழிலை மேற்கொண்டிருந்தனர். முதலில் திருமுழுக்கு யோவானின் சீடராக இருந்த யோவான், அவரது வழிகாட்டுதலின்படி இயேசுவைப் பின்பற்றினார். இயேசு தனது பன்னிரு திருத்தூதர்களில் ஒருவராக இவரை ஏற்றுக்கொண்டார். இயேசு யோவானையும் அவர் சகோதரர் யாக்கோபையும் 'இடியின் மக்கள்' என்று அழைத்தார். திருத்தூதர்களிலேயே மிகவும் இளையவராக யோவான் இருந்தார். எனவே, இயேசு இவரை மிகவும் அன்பு செய்தார். இயேசுவின் உருமாற்றம்Mt. 17:1 உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளில் உடனிருந்த மூன்று திருத்தூதர்களுள் யோவானும் ஒருவர். இறுதி இரவுணவின்போது, இவர் இயேசுவின் மார்பில் சாய்ந்திருந்ததாக யோவான் நற்செய்தி குறிப்பிடுகிறது. இயேசு திருப்பாடுகளின்போது, இவர் தைரியமாக அவரைப் பின்தொடர்ந்து சென்று சிலுவை அடியில் நின்றார். அதன் விளைவாக, தனது தாய் மரியாவைப் பாதுகாக்கும் பொறுப்பை இயேசு யோவானிடம் அளித்தார். இயேசுவின் விண்ணேற்றத்திற்கு பிறகு, திருத்தூதர் பேதுருவோடு இணைந்து சிறிது காலம் எருசலேமில் நற்செய்தி அறிவித்த யோவான், மரியாவின் விண்ணேற்புக்கு பின்னர் எபேசு நகருக்கு சென்று போதித்தார் என்று நம்பப்படுகிறது. ரோமப் பேரரசன் தொமீசியன் காலத்தில், இவர் கொதிக்கும் எண்ணெய் கொப்பரையில் போடப்பட்டும் எத்தீங்கும் இன்றி உயிர் பிழைத்ததாக கூறப்படுகிறது. அதன்பின் பத்மு தீவுக்கு நாடு கடத்தப்பட்ட யோவான் அங்கேயே மரணம் அடைந்தார். யோவானின் திருப்பண்டங்கள் எதுவும் கிடைக்காததால், இவரும் உடலோடு விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப் பட்டிருக்கலாம் என்று ஒரு நம்பிக்கை நிலவுகிறது.

ஆதாரங்கள்

  1. St. John the Apostle Catholic Online.
  2. St. John the Evangelist New Advent.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.