புனித தீத்து

தீத்து (Titus) என்பவர் பண்டைக்காலக் கிறித்தவ சபையின் ஒரு தலைவரும் புனித பவுலின் துணையாளரும் ஆவார். இவரைப்பற்றிய குறிப்புகள் பவுலின் பல திருமுகங்களில் காணக்கிடக்கின்றன.

Saint Titus
புனித தீத்து
ஆயர், மறைச்சாட்சி
பிறப்புகி.பி. முதல் நூற்றாண்டு
இறப்புகி.பி. 96 அல்லது 107
கோர்ட்டின், கிரேத்து
ஏற்கும் சபை/சமயம்உரோமன் கத்தோலிக்கம்,
கீழை மரபுவழி சபை,
கீழை மரபுவழி கத்தோலிக்க சபைகள்,
லூத்தரன் சபை,
ஆங்கிலிக்க சபை
புனிதர் பட்டம் வழிமுறைகளுக்கு முற்பட்ட காலம்
முக்கிய திருத்தலங்கள்ஹெராக்ளியோன், கிரேத்து
திருவிழாசனவரி 26;
பழைய நாள்காட்டிப்படி, பெப்ருவரி 6
புனித தீத்து கோவில். இடம்: ஹெராக்ளியோன், கிரேத்து

வாழ்க்கைக் குறிப்புகள்

பவுலோடும் பர்னபாவோடும் தீத்து அந்தியோக்கியாவில் இருந்தார். பின்னர் அவர்களோடு எருசலேம் சங்கத்தில் கலந்துகொள்ளச் சென்றார். "பதினான்கு ஆண்டுகளுக்குப் பின் தீத்துவையும் கூட்டிகொண்டு பர்னபாவுடன் நான் மீண்டும் எருசலேமுக்குப் போனேன்" (கலாத்தியர் 2:1) என்று பவுல் எழுதுகிறார். ஆயினும் தீத்துவின் பெயர் திருத்தூதர் பணிகள் நூலில் காணப்படவில்லை.

தீத்து யூத இனத்தைச் சாராத புற இனத்தார் என்று தெரிகிறது. அவர் விருத்தசேதனம் செய்ய வேண்டிய தேவையில்லை என்று பவுல் மிகக் கண்டிப்பாகக் கூறியதிலிருந்து இது தெளிவாகிறது: "என்னுடன் இருந்த தீத்து கிரேக்கராய் இருந்தும் விருத்தசேதனம் செய்து கொள்ளுமாறு அவரை யாரும் கட்டாயப்படுத்தவில்லை" (கலாத்தியர் 2:3). கிறித்தவ நம்பிக்கையை ஏற்று வாழ்வதற்கு விருத்தசேதனம் தேவையில்லை என்றுதான் பவுல் வாதாடினார்.

தீத்து ஆற்றிய அறப்பணி

பவுல் எபேசு நகரில் கிறித்தவத்தை அறிவித்தபோது திமொத்தேயு மற்றும் தீத்து அவரோடு பணியாற்றினர். அங்கிருந்து பவுல் தீத்துவை கொரிந்து நகருக்கு அனுப்பினார். அந்நகரிலிருந்து காணிக்கை பிரித்து, எருசலேம் சபையினருக்கு உதவி செய்யும் நோக்கத்தோடு தீத்து அனுப்பப்பட்டார். "எனவே இந்த அறப்பணியைத் தொடங்கிய தீத்துவே அப்பணியை முடிக்க வேண்டும் என நாங்கள் அவரை வேண்டிக்கொண்டோம்" என்று பவுல் எழுதுகிறார் (2 கொரிந்தியர் 8:6).

பவுல் மாசிதோனியாவில் பணிபுரிந்த போது தீத்து அவரிடம் சென்றார். கொரிந்து நகரில் திருச்சபை வளர்ந்து வந்ததை தீத்து பவுலிடம் எடுத்துக் கூறினார். அது பற்றி பவுல் இவ்வாறு கூறுகிறார்: "மாசிதோனியாவிற்கு வந்து சேர்ந்த போது எங்களிடம் மன அமைதியே இல்லை. வெளியே போராட்டம், உள்ளே அச்சம்; இவ்வாறு எல்லா வகையிலும் துன்புற்றோம். தாழ்ந்தோருக்கு ஆறுதல் அளிக்கும் கடவுள் தீத்துவின் வரவால் எங்களுக்கும் ஆறுதல் அளித்தார். அவரது வருகையால் மட்டும் அல்ல; நீங்கள் தீத்துவுக்கு அளித்த ஆறுதலாலும் நாங்கள் ஆறுதல் அடைந்தோம்...நாங்கல் மிகுதியான மகிழ்ச்சி அடைந்தோம்" (2 கொரிந்தியர் 7:5-8).

தீத்து கிரேத்து சபைக்குப் பொறுப்பேற்றல்

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தீத்துவின் பெயர் பவுல் சிறைப்பட்டதை ஒட்டியும், தீத்து கிரேத்து சபைக்குப் பொறுப்பேற்றது பற்றியும் வரும் குறிப்பில் மீண்டும் காணப்படுகிறது. "நான் உனக்குப் பணித்தபடியே கிரேத்துத் தீவில் நீ மேலும் செய்ய வேண்டியவற்றை ஒழுங்குசெய்து, நகர்தோறும் மூப்பர்களை ஏற்படுத்த உன்னை அங்கே விட்டு வந்தேன்" (தீத்து 1:5) என்று பவுல் தீத்துவுக்கு எழுதுகிறார்.

பவுல் உரோமையில் இருந்தபோது தீத்து தல்மாத்தியாவுக்குச் சென்றார் என்பதே தீத்து பற்றிய இறுதிக் குறிப்பு. "தேமா இன்றைய உலகப்போக்கை விரும்பி என்னை விட்டு அகன்று, தெசலோனிக்கா சென்றுவிட்டார். கிரேஸ்கு கலாத்தியாவுக்கும் தீத்து தல்மாத்தியாவுக்கும் சென்று விட்டனர்" (2 திமொத்தேயு 4:10) என்று பவுல் குறிப்பிடுகின்றார்.

இறப்பு

தீத்துவின் இறப்புப் பற்றிய குறிப்பு புதிய ஏற்பாட்டில் காணப்படவில்லை.

மரபுப்படி, பவுல் தீத்துவை ஆயராகத் திருநிலைப்படுத்தி, கிரேத்து தீவின் கோர்ட்டின் நகர ஆயராக அவரை நியமித்தார். தீத்து கி.பி. 107இல் தமது தொண்ணூற்று ஐந்தாம் வயதில் இறந்தார்.

திருவிழா

தீத்துவின் திருவிழா 1854இல் திருவழிபாட்டு நாள்குறிப்பில் சேர்க்கப்பட்டது. அப்போது அது பெப்ருவரி 6ஆம் நாள் கொண்டாடப்பட்டது.[1] 1969இல் உரோமன் கத்தோலிக்க திருச்சபை தீத்துவின் திருவிழாவை சனவரி 26ஆம் நாளுக்கு மாற்றியது. இவ்வாறு, சனவரி 25ஆம் நாள் புனித பவுல் திருவிழாவும், அதற்கு அடுத்த நாள் பவுலோடு நெருங்கி ஒத்துழைத்துப் பணிசெய்த அவருடைய சீடர்களாகிய திமொத்தேயு மற்றும் தீத்து ஆகிய இருவரின் திருவிழாவும் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டது.[2]

அமெரிக்க நற்செய்தி லூத்தரன் சபை திமொத்தேயு, தீத்து ஆகிய இருவரோடு பவுலின் மற்றொரு சீடராகிய சீலாவின் பெயரையும் சேர்த்து, சனவரி 26ஆம் நாள் விழாக் கொண்டாடுகிறது.

மரபுவழிச் சபை தீத்துவின் திருவிழாவை ஆகத்து 25 மற்றும் சனவரி 4 ஆகிய நாள்களில் கொண்டாடுகிறது.

தீத்துவின் மீபொருள்கள்

துருக்கியர் ஆட்சிக்காலத்தில் வெனிசு நகருக்குக் கொண்டுபோகப்பட்டிருந்த புனித தீத்துவின் மீபொருள்கள் அவர் பணிசெய்து உயிர்துறந்த கிரேத்து தீவுக்கு 1969இல் திருப்பி அனுப்பப்பட்டன. தற்போது அப்பொருள்கள் கிரேத்து தீவில் அமைந்துள்ள ஹெராக்ளியோன் கோவிலில் வணக்கத்துக்கு வைக்கப்பட்டுள்ளன.[3]

புனித தீத்து விருது

ஐக்கிய அமெரிக்க நாடுகளின் படைத் திருப்பணியாளர்களில் சிறப்பான சேவை செய்வோருக்கு அளிக்கப்படும் விருது "புனித தீத்து விருது" என்று அழைக்கப்படுகிறது.[4]

குறிப்புகள்

  1. Calendarium Romanum (Libreria Editrice Vaticana, 1969), p. 86
  2. Calendarium Romanum (Libreria Editrice Vaticana, 1969), p. 116
  3. The Orthodox Messenger, v. 8(7/8), July/Aug 1997
  4. Lake Union Journal. http://www.lakeunionherald.org/103/3/41852.html.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.