ஆகாய்

ஆகாய் (ஆங்கிலம்:Haggai; /ˈhæɡ/; எபிரேயம்: חַגַּי, Ḥaggay or Hag-i, கிரேக்கம்: Ἀγγαῖος; இலத்தீன்: Aggaeus) என்பவர் கி.மு.6ஆம் நூற்றாண்டில் யூத மக்களிடையே வாழ்ந்த இறைவாக்கினர் ஆவார். பாபிலோனிய அடிமைத்தனத்தினின்று சொந்த நாடு திரும்பிய இஸ்ரயேல் மக்கள், எருசலேம் கோவிலை மீண்டும் கட்டியெழுப்புமாறு இவரது இறைவாக்குகள் தூண்டின. மக்களுக்குச் செழுமையையும் அமைதியையும் அருள்வதாக இவர் வழியாக கடவுள் வாக்களித்ததை ஆகாய் நூல் எடுத்துரைக்கிறது.

ஆகாய் இறைவாக்கினர். உருசிய படிம ஓவியம். உருவாக்கப்பட்ட காலம்: 18ஆம் நூற்றாண்டின் முற்பகுதி. காப்பிடம்: கிசி துறவியர் இல்லம், வடக்கு உருசியா.

பெயர் விளக்கம்

ஆகாய் என்ற பெயருக்கு விழாக் கொண்டாட்டம் அல்லது திருப்பயணம் செய்பவர் என்பது பொருள். ஆகாய் கூடாரத் திருவிழாவன்று பிறந்ததால், அவருக்கு இந்தப் பெயர் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்பது ஆய்வாளர்கள் சிலரின் கருத்து. ஆனால் அக்காலத்தில் ‘ஆகாய்' என்பது ஒரு பொதுவான பெயராகவே இருந்துள்ளது.

வரலாற்று பின்னணி

கி.மு.587ல் நெபுகத்நேசர் படைகள் எருசலேம் கோவிலைத் தரைமட்டமாக்கின. பாபிலோனில் அடிமைகளாக இருந்த யூதர்கள், அரசர் சைரசின் ஆணைப்படி கி.மு.538ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டார்கள். அவர்கள் சுதந்திரமாகத் தங்கள் நாடாகிய இஸ்ரயேலுக்கும், யூதாவுக்கும் திரும்பினார்கள். அவர்கள் தங்கள் நாட்டிற்குத் திரும்பியபோது, நெபுகத்நேசர் எருசலேமிலிருந்து அபகரித்துக் கொண்டு வந்திருந்த பொருட்களை அரசர் சைரஸ், அவர்களிடம் கொடுத்து அனுப்பினார். எருசலேம் திரும்பிய யூதர்கள், முதலில் கோவிலைக் கட்ட திட்டமிட்டு, அதற்கு அடித்தளமும் இட்டனர். ஆனால் அடுத்த 18 ஆண்டுகளாக கட்டட வேலை எதுவும் நடைபெறாமலே இருந்தது.

இறைவாக்குப் பணி

இந்நிலையில், கி.மு.520 ஆகஸ்டு மாதத்தில் இறைவாக்கினர் ஆகாயின் இறைவாக்குப் பணி தொடங்கியது. 'தாரியு அரசனது இரண்டாம் ஆட்சியாண்டின் ஆறாம் மாதம் முதல் நாளன்று இறைவாக்கினர் ஆகாய் வாயிலாக ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது'[1] என்று ஆகாய் நூல் கூறுகிறது. ஆகாய் ஒரு குருவாக இருந்திருக்க வாய்ப்புள்ளதாக சில அறிஞர்கள் கருதுகின்றனர். ஆனால் அவர் குருவாக இருந்தாரா என்பதற்கான தெளிவான ஆதாரம் எதுவும் விவிலியத்தில் காணப்படவில்லை. இறைவாக்கினர் செக்கரியாவைப் போன்றே, எருசலேம் கோவில் மீண்டும் எழுப்பப்பட வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாய் இருந்தார்.[2]

மக்களின் வாழ்க்கை முறைகளைப் பற்றி இறைவாக்கினர் ஆகாய் எதுவும் பேசவில்லை. எருசலேம் கோவிலைக் கட்டியெழுப்புமாறு மக்களைத் தூண்டுவதே அவரது ஒரே நோக்கமாக இருந்தது. "கோவிலைக் கட்டி முடியுங்கள்;[3] இப்போது நாட்டில் நிலவும் வறுமைக்குக் காரணம் கோவில் இல்லாமையே. கோவில் கட்டப்பட்டுவிட்டால், யாவே இறைவன் நல்ல மழையைக் கொடுத்து, நாட்டை வளமுடைய நாடாக மாற்றுவார்”[4] என்பது ஆகாயின் அசைக்க முடியா கருத்து.

ஆதாரங்கள்

  1. ஆகாய் 1:1
  2. எஸ்ரா 6:14 இறைவாக்கினர் ஆகாயும் இத்தோவின் மகன் செக்காரியும் இறைவாக்கு உரைத்ததன் விளைவாக யூத மூப்பர்கள் கோவிலைக் கட்டினர்.
  3. ஆகாய் 1:8 "என் இல்லத்தை மீண்டும் கட்டியெழுப்புங்கள்; அது எனக்கு உகந்ததாய் இருக்கும்; அங்கே நான் மாட்சியுடன் விளங்குவேன்" என்று சொல்கிறார் ஆண்டவர்.
  4. ஆகாய் 2:19 "விதை இனியும் களஞ்சியத்திலேயே இருந்துவிடுமோ? திராட்சைக் கொடியும் அத்தியும் மாதுளையும் ஒலிவமரமும் இனியும் பயன் தராமல் போகுமோ? இன்று முதல் உங்களுக்கு நான் ஆசி வழங்குவேன்."
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.