எஸ்ரா (நூல்)

எஸ்ரா (Ezra) என்பது கிறித்தவ மற்றும் யூதர்களின் திருநூலாகிய திருவிவிலியத்தில் (பழைய ஏற்பாடு) இடம்பெறுகின்ற ஒரு நூல் ஆகும்.

"எஸ்ரா: சட்டவல்லுநர், குரு". படிம உருவம். ஆண்டு: 1553.

நூலின் பெயர்

எஸ்ரா என்னும் இந்நூல் "1 & 2 குறிப்பேடு" என்னும் நூல்களின் தொடர்ச்சியாகும். இந்நூலைத் தொகுத்தவர் திருச்சட்ட வல்லுநரும் குருவுமாக கி.மு. 5ஆம் நூற்றாண்டில் செயல்பட்ட எஸ்ரா என்பவர் எனக் கருதப்படுவதால் இப்பெயர் எழுந்தது (எபிரேயம்: עֶזְרָא, கிரேக்கம்: Ἔσδρας; இலத்தீன்: Esdras).

எஸ்ரா நூலின் பின்னணி

கி.மு. 538இல் பாரசீக மன்னர் சைரசு பாபிலோனியாவைக் கைப்பற்றினார். அதே ஆண்டில் அவர் இசுரயேல் மக்களுக்கு விடுதலை அளித்து யூதாவுக்குத் திரும்பிச் செல்ல அனுமதித்தார். செருபாபேலின் தலைமையில் இசுரயேல் மக்களுள் ஒரு பகுதியினர் முதலில் திரும்பி வந்தனர். திரும்பிவந்த இசுரயேலர் எருசலேமில் அழிந்திருந்த கோவிலைத் திரும்பவும், 515இல் கட்டியெழுப்பிப் புனிதப்படுத்தினர். மீண்டும் அங்கு வழிபாடு நடத்தினர்.

சில ஆண்டுகளுக்குப் பின் எஸ்ராவின் தலைமையில் இசுரயேல் மக்களுள் மற்றொரு பகுதியினர் திரும்பி வந்தனர்.

எஸ்ரா ஒரு குரு; திருச்சட்ட வல்லுநர். உடன்படிக்கையின் மக்களாகவும், இறைவனின் புனித மக்களாகவும் தேர்ந்துகொள்ளப்பட்ட இசுரயேல் மக்களின் சிறப்பு நிலையைக் காக்குமாறு அவர்களின் மறைவாழ்விலும், சமூக வாழ்விலும் எஸ்ரா மறுமலர்ச்சி ஏற்படுத்தினார்.

மேலும் எஸ்ரா "இறையாட்சி" இசுரயேல் மக்களிடையே நிலவுமாறு அரசியல், மறை ஆகியவற்றின் பொறுப்பைக் குருக்களிடமே ஒப்படைத்து, அவற்றிற்கான சட்டதிட்டங்களை வகுத்துத் தந்தார்.

இந்நூலின் பெரும் பகுதி எபிரேயத்திலும், சிறு பகுதி (4:8-6:18, மற்றும் 7:12-16) அரமேயத்திலும் எழுதப்பட்டுள்ளன.

எஸ்ரா நூலின் உட்கிடக்கை

பொருளடக்கம் அதிகாரம் - வசனம் பிரிவு 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை
1. இசுரயேலர் சிறையிருப்பினின்று திரும்பி வருதலின் முதல் பகுதி 1:1 - 2:70 713 - 716
2. கோவில் மீண்டும் கட்டியெழுப்பப்பட்டு அர்ப்பணிக்கப்படல் 3:1 - 6:22 716 - 722
3. சிறையிருப்பினின்று எஸ்ராவின் தலைமையில் திரும்பி வருதலின் இரண்டாம் பகுதி 7:1 - 10:44 722 - 728

மேலும் காண்க

விக்கிமூலத்தில் எஸ்ரா நூல்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.