ஒசேயா (நூல்)

ஒசேயா (Hosea) என்பது கிறித்தவ மற்றும் யூதர்களின் திருநூலாகிய திருவிவிலியத்தில் (பழைய ஏற்பாடு) இடம்பெறுகின்ற ஒரு நூல் ஆகும்.

இறைவாக்கினர் ஒசேயா. படத்தில் காணும் சொற்றொடர்: "எகிப்திலிருந்து என் மகனை அழைத்து வந்தேன்" (ஒசேயா 11:1). ஓவியர்: தூச்சியோ தி போனின்செஞ்ஞா. வரையப்பட்ட காலம்: 1308-1311. காப்பிடம்: சீயேனா, இத்தாலியா.

பெயர்

ஒசேயா என்னும் நூல் மூல மொழியாகிய எபிரேயத்தில் הוֹשֵׁעַ (Hoshea, Hôšēăʻ) என்னும் பெயர் கொண்டது. "கடவுளே மீட்பர்" என்பது அதன் பொருள். கிரேக்க மொழிபெயர்ப்பில் இந்நூலின் பெயர் Ὠσηέ (Ōsēe) என்று வரும். இறைவாக்கினர் ஒசேயா இந்நூலின் முக்கிய கதாபாத்திரம் ஆவார்.

உள்ளடக்கம்

இறைவாக்கினர் ஒசேயா வடநாடான இசுரயேலில் ஆமோசுக்குச் சற்றுப் பின்னர் வாழ்ந்தவர்; சமாரியா வீழ்ச்சியுற்ற கி.மு. 722க்கு முன் இறைவாக்கு உரைத்தவர்; இசுரயேலின் சிலைவழிபாட்டைக் கடிந்து கொண்டவர்; அவர்களது கீழ்ப்படியாமையைக் கண்டித்தவர்.

ஒசேயா கோமேர் என்ற பெண்ணை மணந்து கொண்டார். அவள் அவருக்கு நம்பிக்கைத் துரோகம் செய்து, அவரைவிட்டு விலகிச் சென்றாள். அத்தகையவளோடு அவர் கொண்டிருந்த மணஉறவைப் பின்னணியாகக் கொண்டு ஒசேயா இறைமக்களின் உண்மையற்ற தன்மையை, கீழ்ப்படியாமையை, நம்பிக்கைத் துரோகத்தை எடுத்தியம்பினார்.

கடவுளை விட்டு விலகிச் சென்ற அவர்களுக்கு இறைவன் தண்டனை வழங்குவார்; ஆயினும் இறைவனின் பேரன்பு இறுதிவரை நிலைத்திருக்கும்; அம்மக்களை அவர் பக்கம் ஈர்த்துக்கொள்ளும்; அதன்மூலம், முறிந்த உறவு மலரும். இதுவே ஒசேயா இறைவாக்கினர் பெயரால் அமைந்துள்ள நூலின் செய்தியாகும்.

குறிப்பிடத்தக்க சில பகுதிகள்

ஒசேயா 2:19-21
"இசுரயேல்! முடிவில்லாக் காலத்திற்கும்
உன்னோடு நான் மண ஒப்பந்தம் செய்து கொள்வேன்;
நேர்மையிலும் நீதியிலும் பேரன்பிலும்
உன்னோடு மண ஒப்பந்தம் செய்து கொள்வேன்.
மாறாத அன்புடன் உன்னோடு மண ஒப்பந்தம் செய்து கொள்வேன்;
ஆண்டவராம் என்னை நீயும் அறிந்துகொள்வாய்.
மேலும் அந்நாளின் நான் மறுமொழி அளிப்பேன்" என்கிறார் ஆண்டவர்.

ஒசேயா 6:6
"உண்மையாகவே நான் விரும்புவது பலியை அல்ல,
இரக்கத்தையே விரும்புகின்றேன்;
எரிபலிகளைவிட, கடவுளை அறியும் அறிவையே நான் விரும்புகின்றேன்."

ஒசேயா 11:1-4
"இசுரயேல் குழந்தையாய் இருந்தபோது அவன் மேல் அன்பு கூர்ந்தேன்;
எகிப்திலிருந்து என் மகனை அழைத்து வந்தேன்.
எவ்வளவுக்கு நான் அவர்களை வருந்தி அழைத்தேனே,
அவ்வளவுக்கு என்னை விட்டுப் பிடிவாதமாய் விலகிப் போனார்கள்...
பரிவு என்னும் கட்டுகளால் அவர்களைப் பிணைத்து,
அன்புக் கயிறுகளால் கட்டி நடத்தி வந்தேன்;
அவர்கள் கழுத்தின்மேல் இருந்த நுகத்தை அகற்றினேன்;
அவர்கள் பக்கம் சாய்ந்து உணவு ஊட்டினேன்."

உட்பிரிவுகள்

பொருளடக்கம் அதிகாரங்கள் மற்றும் வசன வரிசை 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை
1. ஒசேயாவின் திருமணமும் இல்வாழ்வும் 1:1 - 3:5 1315 - 1318
2. இசுரயேலின் குற்றங்களும் அவற்றுக்குரிய தண்டனைத் தீர்ப்பும் 4:1 - 13:16 1318 - 1330
3. மன மாற்றத்திற்கு அழைப்பும் வாக்குறுதியும் 14:1-9 1330 - 1331
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.