1 சாமுவேல் (நூல்)

1 சாமுவேல் (1 Samuel) என்பது கிறித்தவ மற்றும் யூதர்களின் திருநூலாகிய திருவிவிலியத்தில் (பழைய ஏற்பாடு) இடம்பெறுகின்ற ஒரு நூல் ஆகும். இதைத் தொடர்ந்து வரும் 2 சாமுவேல் இந்நூல் கூறும் வரலாற்றின் தொடர்ச்சியாக உள்ளது.

தாவீது கோலியாத்தின் தலையைக் கொய்தல் (1 சாமு 17:41-54). ஓவியர்: கார்லோ டோல்சி (1616-1686). காப்பகம்: பாஸ்டன்.

நூல் பெயரும் உள்ளடக்கமும்

"1 & 2 சாமுவேல்" என்னும் நூல்களில் இசுரயேல் அரசுரிமையின் தொடக்க வரலாறு காணப்படுகிறது. இவ்விரு நூல்களின் தொகுப்பு எபிரேய மூல மொழியில் "Sefer Sh'muel" (= சாமுவேலின் நூல்கள்) என்று அழைக்கப்படுகிறது.

நீதித் தலைவர்களின் காலம் அரசுரிமையின் காலமாக மாறியது குறித்த நிகழ்ச்சிகள் "1 சாமுவேல்" என்னும் நூலில் இடம் பெறுகின்றன. மேலும், நீதித் தலைவர்களின் வரிசையில் இறுதியாக வந்தவரான சாமுவேல், இசுரயேலின் முதல் அரசரான சவுல், சிறுபருவத்தே இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டு இசுரயேலின் பேரரசராக உயர்த்தப்பட்ட தாவீது ஆகிய மூவரை மையமாகக் கொண்டு ஏற்பட்ட சமுதாய மாற்றமும் இந்நூலில் இடம்பெறுகிறது.

கடவுளுக்கு உண்மை உள்ளவர்களாய் இருந்தபோது வெற்றியும், அவருக்கு உண்மையற்றவர்களாய் நடக்கும்போது அழிவும் ஏற்படும் என்னும் கருத்து இந்நூலில் தெளிவாக்கப்படுகிறது. ஆண்டவரே இசுரயேலின் உண்மையான அரசர் என்று கருதப்பட்டார். ஆனால், மக்களின் விருப்பத்திற்கு இணங்கி அவர் அவர்களுக்கு ஓர் அரசரைத் தேர்ந்தெடுக்கிறார். ஆயினும் அரசரும் இசுரயேல் மக்களும் கடவுளின் ஆட்சிக்கு உட்பட்டவர்கள் என்பதும், செல்வர் வறியோர் ஆகிய எல்லா மக்களின் உரிமைகளும் கடவுளின் திருச்சட்டத்தின் கீழ் சமமாகக் காக்கப்பட வேண்டும் என்பதும் இந்நூலில் வலியுறுத்தப்படுகின்றன.

நூலின் பிரிவுகள்

பொருளடக்கம் அதிகாரம் - வசனம் பிரிவு 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை
1. இசுரயேலின் தலைவர் சாமுவேல் 1:1 - 7:17 411 - 422
2. சவுல் அரசராதல் 8:1 - 10:27 422 - 426
3. சவுல் ஆட்சியின் முற்பகுதி 11:1 - 15:35 426 - 435
4. தாவீதும் சவுலும் 16:1 - 30:11 436 - 462
5. சவுல், அவர்தம் புதல்வர்கள் ஆகியோரின் இறப்பு 31:1-13 462

மேலும் காண்க

விக்கிமூலத்தில் சாமுவேல் - முதல் நூல்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.