எரேமியா (நூல்)

எரேமியா (Jeremaiah) என்பது கிறித்தவ மற்றும் யூதர்களின் திருநூலாகிய திருவிவிலியத்தில் (பழைய ஏற்பாடு) இடம்பெறுகின்ற ஒரு நூல் ஆகும்.

எரேமியா இறைவாக்கினர். இடம்: புனித மரியா நினைவுத்தூண், கொலோன், செருமனி.

பெயர்

எரேமியா என்னும் நூல் மூல மொழியாகிய எபிரேயத்தில் יִרְמְיָה, Yirmĭyahu (பொருள்: யாவே உயர்த்துகிறார்) என்று அழைக்கப்படுகிறது. எரேமியா என்னும் இறைவாக்கினர் பெயரால் இந்நூல் அழைக்கப்படுகிறது.

பண்புகள்

எரேமியா என்ற இறைவாக்கினர் கி.மு. 7ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 6ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்தார். இந்நெடிய பணிக்காலத்தில் இசுரயேல் மக்களுக்கு நிகழவிருந்த தண்டனை பற்றி முன்னெச்சரிக்கை விடுத்தார். பாபிலோனிய மன்னனால் எருசலெம் திருக்கோவிலும் அழிவுற்றதையும் யூதா அரசனும் நாட்டினரும் நாடுகடத்தப்பட்டதையும் தம் கண்ணால் கண்டார். ஆயினும் அம்மக்கள் பபிலோனிய அடிமைத்தனத்தினின்று மீளவிருப்பதையும் நாடு புத்துயிர் பெறவிருப்பதையும் முன்னறிவித்தார்.

எரேமியா மென்மையான அன்புள்ளம் படைத்தவர். ஆயினும் மக்களுக்கெதிராகத் தண்டனைத் தீர்ப்பு உரைக்குமாறு அவர் இறைவனால் பணிக்கப்பட்டார். கடவுள் தந்த இவ்வழைப்பிற்காகத் "துன்புறும் மனிதன்" ஆன இவரைப் பற்றிய உணர்ச்சிகரமான பல பகுதிகள் இந்நூலில் காணக்கிடக்கின்றன. இந்நூலின் சில சிறப்பான பகுதிகளில், "இதயத்தில் எழுதப்பட்ட சட்டத்தைக் கொண்ட புதியதோர் இறைக்குலம் தோன்றவிருக்கிறது" என்னும் நம்பிக்கைப் பேரொளி சுடர்விடுகின்றது.

குறிப்பிடத்தக்க ஒரு சிறு பகுதி

எரேமியா 31:33-34


"அந்நாள்களுக்குப் பிறகு, இசுரயேல் வீட்டாரோடு நான் செய்யவிருக்கும் உடன்படிக்கை இதுவே:
என் சட்டத்தை அவர்கள் உள்ளத்தில் பதிப்பேன்; அதை அவர்களது இதயத்தில் எழுதிவைப்பேன்.
நான் அவர்களின் கடவுளாய் இருப்பேன்; அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள், என்கிறார் ஆண்டவர்.
இனிமேல் எவரும் 'ஆண்டவரை அறிந்துகொள்ளும்' எனத் தமக்கு அடுத்திருப்பவருக்கோ சகோதரருக்கோ கற்றுத்தர மாட்டார்.
ஏனெனில் அவர்களுள் பெரியோர் முதல் சிறியோர் வரை அனைவரும் என்னை அறிந்துகொள்வர், என்கிறார் ஆண்டவர்.
அவர்களது தீச்செயலை நான் மன்னித்துவிடுவேன்; அவர்களுடைய பாவங்களை இனிமேல் நினைவு கூரமாட்டேன்."

உட்பிரிவுகள்

பொருளடக்கம் அதிகாரங்கள் மற்றும் வசன வரிசை 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை
1. எரேமியாவின் அழைப்பு 1:1-19 1099 - 1100
2. யூதா, எருசலேமுக்கு எதிரான இறைவாக்குகள் 2:1 - 25:38 1100 - 1143
3. நல்வாழ்வு பற்றிய இறைவாக்குகள் 26:1 - 35:19 1143 - 1163
4. எரேமியாவின் துன்பங்கள் 36:1 - 45:5 1163 - 1177
5. வேற்றினத்தார்க்கு எதிரான இறைவாக்குகள் 46:1 - 51:64 1177 - 1194
6. பிற்சேர்க்கை: எருசலேமின் வீழ்ச்சி 52:1-34 1194 - 1196

மேலும் காண்க

விக்கிமூலத்தில் எரேமியா நூல்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.