சீராக்கின் ஞானம் (நூல்)

சீராக்கின் ஞானம் (Book of Sirach) என்னும் நூல் பழைய ஏற்பாட்டுப் பகுதியாகிய இணைத் திருமுறைத் தொகுப்பைச் சேர்ந்த ஏழு நூல்களுள் ஒன்றாகும்[1]. இந்நூல்கள் கத்தோலிக்க திருச்சபையாலும் மரபுவழாத் திருச்சபையாலும் பிற விவிலிய நூல்களைப் போன்று இறைஏவுதலால் எழுதப்பட்டவையாக ஏற்கப்பட்டுள்ளன.

சீராவின் மகனான ஏசு (பென் சீரா). ஓவியர்: இளைய யேர்க் ப்ராய். ஆண்டு: 1545-1549. காப்பிடம்: செருமனி.

பெயர்

சீராக்கின் ஞானம் என்னும் இந்நூல் கிரேக்க மூல மொழியில் Sophía Seirách (Σοφία Σειράχ) எனவும் இலத்தீனில் Siracides (Liber Iesu Filii Sirach, அல்லது Ecclesiasticus) என்றும் பெயர் பெற்றுள்ளது. எபிரேயத்தில் இந்நூல் Hokhmah Ben Sira (חכמת בן סירא = சீராக்கின் ஞானம்) என்று அமையும். இது ஏழு இணைத் திருமுறை விவிலிய நூல்களுள் ஒன்று ஆகும். விவிலியத்தின் பகுதியாக இந்நூல் கி.பி. 397இல் கார்த்தேசு (Carthage) நகரில் நடந்த சங்கத்திலும்[2], பின்னர் திரெந்து சங்கத்திலும் (கி.பி. 1546) [3] அதிகாரப்பூர்வமாக ஏற்கப்பட்டது. இந்நூலின் மூல பாடம் (செப்துவசிந்தா) [4] என்னும் கிரேக்க விவிலியத்தில் உள்ளது.

உள்ளடக்கம்

செலூக்கியர் ஆட்சியின்போது கிரேக்க மொழி, பண்பாடு, வழிபாட்டுமுறை முதலியன யூதர்கள்மீது திணிக்கப்பட்டன. யூதர் பலரும் இவற்றை விரும்பி ஏற்கத் தொடங்கினர். இக்கட்டத்தில் (ஏறத்தாழ கி.மு. 180) சீராக்கின் மகனும் எருசலேமில் வாழ்ந்த மறைநூலறிஞருமான ஏசு, தம்மவரை யூத மறையில் உறுதிப்படுத்தி ஊக்குவிக்க எண்ணினார்.

உண்மையான ஞானம் இசுரயேலில்தான் உள்ளது; திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதில்தான் அது அடங்கும் என்பதை வலியுறுத்தி இந்நூலை எழுதினார். எனவே இந்நூல் எபிரேயத்தில் "சீராவின் மகனான ஏசுவின் ஞானம்" அல்லது "பென் சீரா" என வழங்குகிறது.

எபிரேய மொழியில் எழுதப்பெற்ற இந்நூலை, பாலசுத்தீனத்துக்கு வெளியே கிரேக்கச் சூழலில் வாழ்ந்த யூதர்களின் நலன் கருதி, ஏசுவின் பேரன் (ஏறத்தாழ கி.மு. 132) கிரேக்கத்தில் மொழிபெயர்த்து, அதற்கு ஒரு முன்னுரையும் வரைந்தார். தொடக்கத் திருச்சபையில் "திருப்பாடல்கள்" நூலுக்கு அடுத்தபடி இந்நூல் திருவழிபாட்டிலும் மறைக்கல்வியிலும் மிகுதியாகப் பயன்பட்ட காரணத்தால், இது "சபை நூல்" (Ecclesiasticus) என்றும் பெயர் பெற்றது.

இந்நூலின் எபிரேய பாடம் முழுதும் தொலைந்துவிட, இதன் மொழிபெயர்ப்பான கிரேக்க பாடமே நமக்கு மூல பாடமாகப் பயன்பட்டுவருகிறது. எனினும், எபிரேய பாடத்தின் பெரும் பகுதி தொல்லியல் ஆராய்ச்சியின் பயனாக இன்று நமக்குக் கிடைத்துள்ளதால், கிரேக்க பாடத்தை நன்கு புரிந்துகொள்ள இது பெரிதும் துணை புரிகிறது.

ஞானம் பற்றிய கருத்துக் குவியலைக் கொண்ட முதல் பகுதி, அன்றாட வாழ்வில் ஞானத்தைக் கடைப்பிடிக்கும் முறை பற்றிப் பேசுகிறது. இரண்டாவது பகுதி இசுரயேலின் மீட்பு வரலாற்றில் இடம்பெற்ற தலைவர்களைப் புகழ்வதோடு, அவர்களைப் பின்பற்ற அழைப்பு விடுக்கிறது.

நூலிலிருந்து சில பகுதிகள்

சீராக்கின் ஞானம் 1:1-4
"ஞானமெல்லாம் ஆண்டவரிடமிருந்தே வருகின்றது;
அது என்றும் அவரோடு இருக்கின்றது.
கடல் மணலையோ மழைத் துளியையோ
முடிவில்லாக் காலத்தையோ
யாரே கணக்கிடுவர்?
வான்வெளியின் உயரத்தையோ
நிலவுலகின் அகலத்தையோ
ஆழ்கடலையோ ஞானத்தையோ
யாரே தேடிக் காண்பர்?
எல்லாவற்றுக்கும் முன்னர்
ஞானமே உண்டாக்கப்பட்டது;
கூர்மதி கொண்ட அறிவுத்திறன்
என்றென்றும் உள்ளது."

சீராக்கின் ஞானம் 4:1-5
"குழந்தாய்,
ஏழைகளின் வயிற்றில் அடிக்காதே;
கையேந்தி நிற்போரைக் காத்திருக்க வைக்காதே.
பசித்திருப்போரை வாட்டி வதைக்காதே;
வறுமையில் உழல்வோரை எரிச்சலூட்டாதே...
உன்னிடம் உதவி வேண்டுவோரிடமிருந்து
உன் கண்களைத் திருப்பிக் கொள்ளாதே;
உன்னைச் சபித்திட யாருக்கும் வாய்ப்பு அளிக்காதே."

சீராக்கின் ஞானம் 6:5-16
"இன்சொல் நண்பர் தொகையைப் பெருக்கும்;
பண்பான பேச்சு உன் மதிப்பை உயர்த்தும்.
அனைவரோடும் நட்புடன் பழகு;
ஆனால் ஆயிரத்தில் ஒருவரே உனக்கு ஆலோசகராய் இருக்கட்டும்.
ஆய்ந்து நட்புக்கொள்; நண்பரையும் விரைவில் நம்பிவிடாதே.
தன்னலம் தேடும் நண்பர்களும் உண்டு;
அவர்கள் உன் நெருக்கடியான வேளையில் உன்னோடு இருக்கமாட்டார்கள்.
பகைவர்களாக மாறும் நண்பர்களும் உண்டு;
அவர்கள் உங்கள் பிணக்கை மற்றவர்களுக்கு வெளிப்படுத்தி,
உனக்கு இழிவைக் கொண்டு வருவார்கள்...
நம்பிக்கைக்குரிய நண்பர்கள் நலம் அளிக்கும் மருந்து போன்றவர்கள்;
ஆண்டவருக்கு அஞ்சுவோரே இத்தகைய நண்பர்களைக் கண்டடைவர்."

உட்பிரிவுகள்

பொருளடக்கம் நூல் அதிகாரங்கள் மற்றும் வசன வரிசை 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை
1. முகவுரை (1-14 வசனங்கள்) 103
2. ஞானம் வழங்கும் நன்னெறி 1:1 - 43:33 103 - 173
3. மூதாதையர் புகழ்ச்சி 44:1 - 50:29 173 - 185
4. பிற்சேர்க்கை 51:1-30 186 - 187

ஆதாரங்கள்

  1. சீராக்கின் ஞானம்
  2. கார்த்தேசு சங்கம்
  3. திரெந்து பொதுச் சங்கம்
  4. செப்துவசிந்தா
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.