முதலாம் அலெக்சாண்டர் (திருத்தந்தை)
திருத்தந்தை புனித முதலாம் அலெக்சாண்டர் (Pope Saint Alexander I) என்பவர் உரோமை ஆயராகவும் திருத்தந்தையாகவும் கி.பி. 106இலிருந்து கி.பி. 115 வரை பணிபுரிந்தார். "திருத்தந்தை ஆண்டுக் குறிப்பேடு" (2008) தரும் தகவல்படி, அலெக்சாண்டர் 108-109 காலத்தில், அல்லது 116-119 காலத்தில் ஆட்சிசெய்தார். அவர் உரோமை மன்னன் ட்ரேஜன் அல்லது ஹேட்ரியன் காலத்தில் மறைச்சாட்சியாக இறந்தார் என்று சிலர் கருதினாலும் அது பற்றி உறுதியான தகவல் இல்லை[1].
- அலெக்சாண்டர் என்னும் பெயர் (பண்டைக் கிரேக்கம்: Αλέξανδρος, Aléxandros) கிரேக்க மொழியில் "பாதுகாப்பவர்" என்னும் பொருள்படும்.
புனித முதலாம் அலெக்சாண்டர் Saint Alexander I | |
---|---|
6ஆம் திருத்தந்தை | |
![]() | |
ஆட்சி துவக்கம் | கிபி சுமார்106 |
ஆட்சி முடிவு | கிபி சுமார்115 |
முன்னிருந்தவர் | புனித எவரிஸ்துஸ் |
பின்வந்தவர் | முதலாம் சிக்ஸ்துஸ் |
பிற தகவல்கள் | |
இயற்பெயர் | அலெக்சாண்டர் |
பிறப்பு | தகவல் இல்லை உரோமை, இத்தாலியா |
இறப்பு | கிபி சுமார் 115 உரோமை, இத்தாலியா |
அலெக்சாண்டர் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள் |
திருத்தந்தையின் பணிகள்
"திருத்தந்தையர் நூல்" (Liber Pontificalis) என்னும் ஏட்டின்படி, திருப்பலியில் வருகின்ற "இயேசு தாம் இறப்பதற்கு முந்தின நாள் அப்பத்தை எடுத்து, நன்றிகூறி..." என்று வருகின்ற உரைக்கூற்றைத் திருத்தந்தை அலெக்சாண்டர் ஆக்கினார். ஆயினும், இது நடந்ததற்கான வரலாற்று ஆதாரம் இல்லை என்று கத்தோலிக்க அறிஞரும் பிற கிறித்தவ சபைகளைச் சார்ந்த அறிஞரும் கருதுகின்றனர்.
இன்னொரு மரபுப்படி, திருத்தந்தை முதலாம் அலெக்சாண்டர் உப்புக் கலந்த தண்ணீரை மந்திரித்து, கிறித்தவ இல்லங்களைத் தீய சக்திகளிடமிருந்து பாதுகாக்க அத்தண்ணீரைத் தெளிக்கும் பழக்கத்தைத் தொடங்கிவைத்தார். அதுபோலவே, திருப்பலியின்போது இரசத்தில் சிறிது நீர் கலக்கும் பழக்கத்தையும் அவர் தொடங்கினார். இதற்கும் போதிய வரலாற்று ஆதாரம் இல்லை என்று அறிஞர் கருதுகின்றனர். இருப்பினும், கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் திருச்சபை நிர்வாகத்திலும், திருச்சடங்குகளை வடிவமைப்பதிலும் முக்கிய பங்களித்திருந்திருப்பார் என்பது உறுதியே.
கிறித்தவ மறையைப் பரப்புதல்
மற்றொரு மரபுப்படி, உரோமை மன்னன் ஹேட்ரியன் காலத்தில் முதலாம் அலெக்சாண்டர் உரோமை ஆளுநராகிய ஹெர்மஸ் என்பவரையும் அவர்தம் குலத்தவர் 1500 பேரையும் அதிசயமான விதத்தில் கிறித்தவ மறையைத் தழுவச் செய்தார். இவ்வாறு கிறித்தவத்தைத் தழுவியவர்களுள் நாயுஸ் நகர் புனித குயிரீனஸ் (Saint Quirinus of Neuss) என்பவரும் அவருடைய மகள் புனித பல்பீனா என்பவரும் அடங்குவர். இந்தக் குயிரீனஸ் என்பவர் அலெக்சாண்டரின் சிறைக்காப்பாளராக இருந்தாராம்.
திருத்தந்தை அலெக்சாண்டர் குழந்தை இயேசுவைக் காட்சியில் கண்டதாகவும் கூறப்படுகிறது.
திருச்சபையின் பொது நாள்காட்டியில் அலெக்சாண்டர்
உரோமைத் திருப்பலி நூலின் சில பதிப்புகளில் மே மாதம் 3ஆம் நாள் விழாக் கொண்டாடப்படுகிற புனித அலெக்சாண்டர் திருத்தந்தை முதலாம் அலெக்சாண்டரே என்றுள்ளது. ஆனால், திருத்தந்தை ஐந்தாம் பயஸ் 1570இல் வெளியிட்ட திரிதெந்தீன் திருப்பலி நூலில் இச்செய்தி இல்லை.
மே 3ஆம் நாள் விழாக்கொண்டாடப்பட்ட மறைச்சாட்சியர் அலெக்சாண்டர், எவேன்சியுஸ், மற்றும் தெயோதுலுஸ் என்பவர்கள் பற்றி அவர்கள் கொல்லப்பட்டு, உரோமையில் நொமெந்தானா சாலையில் ஏழாம் கல் தொலையில் அடக்கம் செய்யப்பட்டனர் என்பது தவிர வேறு செய்திகள் தெரியாததால், அங்கு குறிக்கப்படுகின்ற அலெக்சாண்டர் திருத்தந்தை முதலாம் அலெக்சாண்டராக இருப்பார் என்னும் மரபு எழுந்தது.
இந்த மரபுக்கான போதிய வரலாற்றுச் சான்று இல்லாததால் 1960இல் திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான் வெளியிட்ட திருச்சபை பொது நாள்காட்டியில், மே 3ஆம் நாள் விழாக்கொண்டாடப்படுகின்ற அலெக்சாண்டர் திருத்தந்தை முதலாம் அலெக்சாண்டர் என்று குறிப்பிடப்படவில்லை.
இறப்புக்குப் பின்
திருத்தந்தை முதலாம் அலெக்சாண்டரின் அடக்கம் செய்யப்பட்ட உடல் செருமனி நாட்டின் பவேரியா மாநிலத்திலுள்ள ஃப்ரீசிங் என்னும் நகருக்குக் கொண்டுசெல்லப்பட்டதாக ஒரு மரபு உள்ளது.
ஆதாரங்கள்
விக்கிமூலம்: இணைப்பு
முதலாம் அலெக்சாண்டர் - எழுத்துப் படையல்கள்
கத்தோலிக்க திருச்சபை பட்டங்கள் | ||
---|---|---|
முன்னர் எவரிஸ்துஸ் |
உரோமை ஆயர் திருத்தந்தை 106–115 |
பின்னர் முதலாம் சிக்ஸ்துஸ் |