திருச்சபைத் தந்தையர்

திருச்சபைத் தந்தையர் என்போர், திருத்தூதர்களுக்கு அடுத்த நிலையில் தொடக்க திருச்சபையின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றிய கிறிஸ்தவர்கள் ஆவர். இவர்கள் பெரும்பாலும் தொடக்க திருச்சபையின் ஆயர்களாகவும், வழிகாட்டிகளாகவும் இருந்தவர்கள் ஆவர்.

திருத்தூதுவ தந்தையர்

திருத்தூதர்களோடு தொடர்புடைய அல்லது அவர்களது சீடர்களாக இருந்த தொடக்க திருச்சபையின் வழிகாட்டிகள் திருத்தூதுவ தந்தையர் என்று அழைக்கப்படுகின்றனர்.

ரோம் புனித கிளமென்ட்

ரோம் புனித கிளமென்ட் (-கி.பி.97), திருத்தூதர் பேதுருவின் சீடர்களுள் ஒருவர் ஆவார். இவர் புனித பேதுருவிடமிருந்து திருப்பொழிவு பெற்று உரோமையின் ஆயரான இவர், கத்தோலிக்க திருச்சபையின் நான்காவது திருத்தந்தை ஆவார். சுமார் கி.பி.95ல், இவர் கொரிந்தியருக்கு எழுதிய திருமுகம், கிறிஸ்தவ விசுவாசத்தை தெளிவாக எடுத்துரைக்கிறது. உரோமைப் பேரரசன் ட்ராஜன் காலத்தில் தம் கிறிஸ்தவ நம்பிக்கையை முன்னிட்டு, கிளமென்ட் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கும் இவர் பிற சிறைக் கைதிகளுக்குக் கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவித்தார். இறுதியாக இவர் ஒரு நங்கூரத்தில் கட்டப்பட்டு, கடலில் ஆழ்த்தி மறைசாட்சியாக கொல்லப்பட்டார்.

அந்தியோக்கு புனித இஞ்ஞாசியார்

அந்தியோக்கு புனித இஞ்ஞாசியார் (-கி.பி.108/115), திருத்தூதர் யோவானின் சீடர்களுள் ஒருவர் ஆவார். அந்தியோக்கியா நகரின் மூன்றாம் ஆயரான இவர், கிறிஸ்துவின் மீதான விசுவாசத்திற்காக கைது செய்யப்பட்டார். இவரைக் கொல்ல உரோமைக்கு இட்டு சென்ற வழியில் இவர் பல கடிதங்களை எழுதியுள்ளார். இக்கடிதங்களின் மூலம் தொடக்க கால கிறிஸ்தவர்களின் விசுவாசம் மற்றும் நம்பிக்கையினைப் பற்றி அறிய முடிகின்றது. இவர் சிங்கங்களுக்கு இரையாக்கப்பட்டு, மறைசாட்சியாக இறந்தார்.

சுமைர்னா புனித பொலிகார்ப்

சுமைர்னா புனித பொலிகார்ப் (கி.பி.69-155), திருத்தூதர் யோவானின் சீடர்களுள் ஒருவர். கிறிஸ்துவின் மீதான விசுவாசத்தில் கிறிஸ்தவர்கள் நிலைத்திருக்க இவர் மிகவும் உழைத்தார். சுமைர்னா ஆயரான இவர், உரோமைப் பேரரசன் மார்க்கூஸ் அவ்ரேலியுஸ் ஆட்சியின் ஆறாம் ஆண்டில் எழுந்த கிறிஸ்தவர்களுக்கு எதிரான கலவரத்தில் பிடிபட்டார். கிறிஸ்துவைப் பழித்து பேசினால் விடுதலை என்ற ஆசை வார்த்தைகளுக்கு இவர் இணங்கவில்லை. இறுதியாக, பொலிகார்ப்பைத் தீச்சூளையில் இட்டு எரிக்க முயன்றனர். நெருப்பு இவரைத் தீண்டாததால், ஈட்டியால் குத்துண்டு மறைசாட்சியாக உயிர் துறந்தார்

பின்வந்த தந்தையர்

திருத்தூதர்கள் காலத்துக்கு பின்வந்த கிறிஸ்தவ வழிகாட்டிகள் இவர்கள்.

புனித அத்தனாசியுஸ்

புனித அத்தனாசியுஸ் அல்லது அத்தனாசியார் (கி.பி.295-373), எகிப்து நாட்டில் அலெக்சாந்திரியாவில் பிறந்தார். இவர் தமது சொந்த ஊரிலேயே ஆயராகப் பணிபுரிந்தார். இவரது காலத்தில் ஆரியுஸ் என்னும் கிறிஸ்தவத் துறவி, இயேசுவின் இறைத் தன்மையை மறுத்து தவறான போதனை (பேதகம்) ஒன்றை வெளியிட்டார். அத்தனாசியுஸ், "கிறஸ்து இறைத் தன்மையும் மனிதத் தன்மையும் கொண்டவர்" என்ற உண்மையை திருச்சபையின் கருத்துக்கு இசைய உறுதியுடன் போதித்து விசுவாசத்தை பாதுகாத்தார்.

புனித பெரிய பேசில்

புனித பெரிய பேசில் அல்லது பசிலியார் (கி.பி.330-379), கப்பதோசியாவைச் சேர்ந்த துறவியாவார். கெசாரியாவில் பிறந்த இவர், தனது வாழ்நாளில் எகிப்திய பாலைநிலத்தின் வனத்துறவிகளை தரிசித்தார். கி.பி. 358ல் அனட்டோலியாவில் இருந்த துறவற மடத்தில் சேர்ந்தார். ‘சமூக வாழ்வு, உழைப்பு மற்றும் செபம்’ என்ற துறவற விதியை ஏற்படுத்தினார். பின்னாளில், ஒரு துறவற சபையையும் ஏற்படுத்தினார். 370ஆம் ஆண்டு, இவர் செசாரியாவின் ஆயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மிலன் புனித அம்புரோஸ்

மிலன் புனித அம்புரோஸ் (கி.பி.340-397), பிரான்ஸ் நாட்டில் ஓர் உயர் அதிகாரியின் மகனாகப் பிறந்தார். உரோமையில் கல்வி பயின்று லிகூரியா மாநிலத்தில் ஆளுநரானார். புனித இவர் திருமுழுக்கு பெற ஆயத்த நிலையில் இருந்தபோதே மிலன் நகர மக்கள் இவரைத் தம் ஆயராகத் தேர்ந்தெடுத்தார்கள். புனித அம்புரோஸ் தனது ஆளுகையின்போது ஆரியுஸ் பேதகத்தை மேலை நாடுகளினின்று அகற்றினார். இவர் திருச்சபை சார்ந்த பல நூல்களை எழுதியுள்ளார்; பாடல்கள் பலவற்றையும் இயற்றியுள்ளார்; ‘திருப்பண்ணிசையின் தந்தை’ எனவும் போற்றப்படுகிறார். புனித அகஸ்டீன் மனந்திரும்ப உதவியவர் இவரே.

புனித ஜெரோம்

புனித ஜெரோம் அல்லது எரோணிமு (கி.பி.347-419), தல்மேசியாவில் பிறந்து உரோமையில் கல்வி பயின்ற போது மனந்திரும்பினார். கி.பி. 377ல் குருவாகி கீழை நாட்டு மொழிகளைப் பயின்றார். இவர் பெத்லகேமுக்குச் சென்று, விவிலியம் முழுவதையும் முதல் முறையாகத் இலத்தீனில் மொழிபெயர்த்தார். அதற்கு எளிமையான விளக்க உரையும் எழுதினார். இவர் செய்த மொழிபெயர்ப்புப் பிரதி ‘உல்காத்தா’ என்று பெயர் பெறுகிறது.

ஹிப்போ புனித அகஸ்டீன்

ஹிப்போ புனித அகஸ்டீன் (கி.பி.354-430), ஆப்பிரிக்காவில் தகாஸ்தே என்னும் ஊரில் பிறந்தார். இளம் வயதில் தீய வாழ்க்கையிலும் உலக மகிமையிலும் பேரார்வம் கொண்டார். இவர் தன் 29ஆம் வயதில் இத்தாலிக்குச் சென்று மிலான் நகரின் கலாசாலையில் பணிபுரிந்தார். இவரது தாயார் புனித மோனிக்கம்மாளின் செபத்தாலும் புனித அம்புரோசின் அறிவுரைகளாலும், மனந்திரும்பி திருமுழுக்கு பெற்றார். பின்னர் இவர் குருப்பட்டம் பெற்று, கி.பி. 395ல் ஹிப்போ நகரின் ஆயரானார். இவர் எழுதிய ‘வாழ்க்கை அறிக்கை’ உட்பட பல்வேறு நூல்களில் இறையருளைப் பற்றித் தெளிவாக எழுதியுள்ளார். எனவே இவர் ‘அருளின் அறிஞர்’ என அழைக்கப்படுகிறார். பெலாஜியுஸ் என்பவரின் பேதகத்தைக் கண்டித்து, "மனிதன் மீட்புபெற இறையருள் தேவை" என்று அகஸ்டீன் எடுத்துரைத்தார்.

அலெக்சாந்திரியா புனித சிரில்

அலெக்சாந்திரியா புனித சிரில் (கி.பி.376-444), புனித அத்தனாசியுசுக்குப் பின் அலெக்சாந்திரியா நகரத்தின் ஆயரானார். இவரது காலத்தில் நெஸ்தோரியுஸ் என்ற ஆயர், இயேசுவின் மனிதத் தன்மையையும் மரியாள் கடவுளின் தாய் என்பதையும் மறுத்து பேதகம் ஒன்றை வெளியிட்டார். அதைக் கண்டிக்கக் கூட்டப்பட்ட எபேசு சங்கத்தில் புனித சிரில் முனைந்து செயல்பட்டார். "கிறிஸ்து இறைத் தன்மையும் மனிதத் தன்மையும் கொண்ட ஓர் ஆள்; எனவே, மரியாள் கடவுளின் தாய்" என்ற உண்மையை நிலைநாட்ட சிரில் பல துன்பங்களை ஏற்க வேண்டியிருந்தது.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.