கிறிஸ்தியல்

கிறிஸ்தியல் என்பது கிறித்தவ இறையியலின் ஒரு பிரிவு; இயேசு கிறிஸ்துவின் தன்மை மற்றும் இயல்புகள் பற்றி ஆராய்கின்றது. இறைமகன் இயேசுவிற்கும் தந்தையாம் கடவுளுக்கும் உள்ள தொடர்பும் உறவும் கிறிஸ்தியலின் மையப்பொருளாக அமைகிறது. விவிலியத்தைப் பொறுத்தவரை யோவான் நற்செய்தியும், எபிரேயருக்கு எழுதிய திருமுகமும் சிறந்த கிறிஸ்தியல் விளக்க நூல்களாக அமைந்துள்ளன.

யோவான் நற்செய்தி

கிறிஸ்துவைப் பற்றி யோவான் நற்செய்தியில் பின்வரும் முக்கிய விளக்கங்கள் தரப்படுகின்றன.

தந்தையும் மகனும்

இறைத்தந்தை, இறைமகன் மற்றும் மனிதருக்கு இடையே உள்ள உறவுநிலை பற்றி இயேசு பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

"தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார். உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார். அவர்மீது நம்பிக்கை கொள்வோர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவதில்லை; ஆனால் நம்பிக்கை கொள்ளாதோர் ஏற்கனவே தீர்ப்புப் பெற்றுவிட்டனர். ஏனெனில் அவர்கள் கடவுளின் ஒரே மகனிடம் நம்பிக்கை கொள்ளவில்லை."[1]

"நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால் நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும். நீங்கள் மிகுந்த கனி தந்து என் சீடராய் இருப்பதே என் தந்தைக்கு மாட்சி அளிக்கிறது. என் தந்தை என் மீது அன்பு கொண்டுள்ளது போல நானும் உங்கள்மீது அன்பு கொண்டுள்ளேன். என் அன்பில் நிலைத்திருங்கள். நான் என் தந்தையின் கட்டளைகளைக் கடைப்பிடித்து அவரது அன்பில் நிலைத்திருப்பது போல நீங்களும் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள்."[2]

ஆட்டுக்குட்டியும் ஆயரும்

மறுநாள் இயேசு தம்மிடம் வருவதைக் கண்ட யோவான், "இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி! ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர். எனக்குப்பின் வரும் இவர் என்னைவிட முன்னிடம் பெற்றவர்; ஏனெனில் எனக்கு முன்பே இருந்தார் என்று நான் இவரைப்பற்றியே சொன்னேன். இஸ்ரயேல் மக்களுக்கு இவரை வெளிப்படுத்தும் பொருட்டே நான் வந்துள்ளேன்; தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தும் வருகிறேன் ' என்றார்.[3]

இயேசு கூறியது: "நல்ல ஆயன் நானே. தந்தை என்னை அறிந்திருக்கிறார்; நானும் தந்தையை அறிந்திருக்கிறேன். அதுபோல நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன. அவைகளுக்காக எனது உயிரைக் கொடுக்கிறேன். இக்கொட்டிலைச் சேரா வேறு ஆடுகளும் எனக்கு உள்ளன. நான் அவற்றையும் நடத்திச் செல்லவேண்டும். அவையும் எனது குரலுக்குச் செவி சாய்க்கும். அப்போது ஒரே மந்தையும் ஒரே ஆயரும் என்னும் நிலை ஏற்படும். தந்தை என்மீது அன்பு செலுத்துகிறார். ஏனெனில் நான் என் உயிரைக் கொடுக்கிறேன்; அதை மீண்டும் பெற்றுக்கொள்ளவே கொடுக்கிறேன். என் உயிரை என்னிடமிருந்து யாரும் பறித்துக் கொள்வதில்லை. நானாகவே அதைக் கொடுக்கிறேன். உயிரைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு; அதை மீண்டும் பெற்றுக் கொள்ளவும் அதிகாரம் உண்டு. என் தந்தையின் கட்டளைப்படியே நான் இப்படிச் செய்கிறேன்."[4]

வாழ்வும் வழியும்

இயேசு, தானே உலக மக்களுக்கு வாழ்வும் வழியும் என்பதைப் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

"விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: மானிடமகனுடைய சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடையமாட்டீர்கள். எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார். நானும் அவரை இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன். எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம். எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன். வாழும் தந்தை என்னை அனுப்பினார். நானும் அவரால் வாழ்கிறேன். அதுபோல் என்னை உண்போரும் என்னால் வாழ்வர்."[5]

"'வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை."[6]

"உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்."[7]

எபிரேயர் திருமுகம்

எபிரேயருக்கு எழுதிய திருமுகத்தில் பின்வரும் விளக்கங்கள் இடம்பெறுகின்றன.

இறைமகனும் வானதூதரும்

இறைமகனாகிய இயேசு வானதூதரைவிட மேலானவர் என்பது பின்வருமாறு விளக்கப்படுகிறது:

"கடவுளுடைய மாட்சிமையின் சுடரொளியாகவும், அவருடைய இயல்பின் அச்சுப் பதிவாகவும் விளங்கும் இவர், தம் வல்லமைமிக்க சொல்லால் எல்லாவற்றையும் தாங்கி நடத்துகிறார். மக்களைப் பாவங்களிலிருந்து தூய்மைப்படுத்தியபின், விண்ணகத்தில் இவர் பெருமைமிக்க கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார். இவ்வாறு இறைமகன் வானதூதரைவிடச் சிறந்ததொரு பெயரை உரிமைப்பேறாகப் பெற்றார். அந்நிலைக்கு ஏற்ப அவர்களைவிட இவர் மேன்மை அடைந்தார். கடவுள் தம் முதற்பேறான இவரை உலகிற்கு அனுப்பியபோது, கடவுளின் தூதர் அனைவரும் இவரை வழிபடுவார்களாக என்றார்."[8]

இயேசுவும் மோசேயும்

யூதர்களால் பெரிதும் மதிக்கப்படுகின்ற இறைவாக்கினர் மோசேயைவிட இயேசு பெரியவர் என்பதை இப்பகுதி விளக்குகிறது.

"கடவுளின் குடும்பத்தினர் அனைவரிடையேயும் மோசே நம்பிக்கைக்குரியவராய் இருந்தார். அவ்வாறே இயேசுவும் தம்மை நியமித்த கடவுளுக்கு நம்பிக்கைக்குரியவராக இருந்தார். ஒரு வீட்டைக் கட்டி எழுப்புகிறவருக்கு அவ்வீட்டைவிட அதிக மதிப்பு உண்டு. அதுபோல, இயேசுவும் மோசேயைவிட அதிக மேன்மை பெறத் தகுதி உடையவராகிறார். ஏனெனில், ஒவ்வொரு வீட்டையும் கட்டி எழுப்ப ஒருவர் இருப்பது போல, எல்லாவற்றையும் கட்டி எழுப்புகிறவர் ஒருவர் இருக்கிறார்: அவர் கடவுளே. ஊழியன் என்னும் முறையில் மோசே கடவுளின் குடும்பத்தார் அனைவரிடையேயும் நம்பிக்கைக்குரியவராய் இருந்தார். கடவுள் பின்னர் அறிவிக்கவிருந்தவற்றுக்குச் சான்று பகர்வதே அவரது ஊழியமாயிருந்தது. ஆனால், கிறிஸ்து மகன் என்னும் முறையில் கடவுளின் குடும்பத்தார்மேல் அதிகாரம் பெற்றுள்ளார்."[9]

குருத்துவமும் பலியும்

இயேசுவின் குருத்துவத்தையும் பலியையும் பற்றிய விளக்கங்கள் பின்வருமாறு:

"வானங்களைக் கடந்து சென்ற இறைமகனாகிய இயேசுவை நாம் தனிப்பெரும் தலைமைக் குருவாகக் கொண்டுள்ளதால் நாம் அறிக்கையிடுவதை விடாது பற்றிக்கொள்வோமாக! ஏனெனில், நம் தலைமைக் குரு நம்முடைய வலுவின்மையைக் கண்டு இரக்கம் காட்ட இயலாதவர் அல்ல: மாறாக, எல்லா வகையிலும் நம்மைப்போலச் சோதிக்கப்பட்டவர்; எனினும் பாவம் செய்யாதவர். எனவே, நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற வேளையில் உதவக் கூடிய அருளைக் கண்டடையவும், அருள் நிறைந்த இறை அரியணையைத் துணிவுடன் அணுகிச் செல்வோமாக."[10]

"கிறிஸ்து பலரின் பாவங்களைப் போக்கும் பொருட்டு, ஒரேமுறை தம்மைத்தாமே பலியாகக் கொடுத்தார்."[11] "இயேசு கிறிஸ்து ஒரே ஒரு முறை தம் உடலைப் பலியாகச் செலுத்தியதின் மூலம் நாம் தூயவராக்கப்பட்டிருக்கிறோம். இவர் ஒரே பலியைப் பாவங்களுக்காக என்றென்றைக்கும் எனச் செலுத்திவிட்டு, கடவுளின் வலப்பக்கத்தில் அமர்ந்துள்ளார்."[12]

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.