இரு திருத்தந்தையர்களின் ஆட்சிக்கு இடைப்பட்ட காலம்

இரு திருத்தந்தையர்களின் ஆட்சிக்கு இடைப்பட்ட காலம் என்பது கத்தோலிக்க திருச்சபையின் தலைமையிடத்தில் ஒருவருக்குப் பின் ஒருவர் பதவி ஏற்பது தொடர்பான ஒரு கருத்து ஆகும். இரு திருத்தந்தையர்களின் ஆட்சிக்கு இடைப்பட்ட காலத்தினை காலியான அரியணை அல்லது வெறுமையான பதவியிடம் எனப் பொருள்படும் இலத்தீன் சொல்லான சேதே வெகாந்தே (Sede vacante) என்று கத்தோலிக்க திருச்சபையின் சட்டத் தொகுப்பு (Canon Law) குறிப்பிடுகின்றது. இது ஆயர்களின் ஆட்சிக்கு இடைப்பட்ட காலத்தினையும் குறிக்கும்.

ரோம் மறைமாநிலம் தவிர பிற மறைமாநிலங்களில்

ஒரு மறைமாநில ஆயர் பணி இடமாற்றம் பெற்றாலோ, ஓய்வு பெற்றாலோ அல்லது இயற்கை எய்தினாலோ, மற்றோர் ஆயர் நியமிக்கப்படும் வரை அது காலியான அரியணையின் காலமாகக் கொள்ளப்படும்.

மறைமாவட்ட ஆட்சிப்பீடம் காலியாகும் போது, ஏற்கனவே இணை ஆயர் (coadjutor bishop) நியமிக்கப்பட்டிருந்தால் அவர் உடனே தாம் நியமிக்கப்பட்ட மறைமாவட்டத்தின் ஆயராகிறார்; அதற்கு அவர் சட்டமுறைமைப்படி அதன் பொறுப்பை ஏற்றிருக்க வேண்டும்.[1]

ஒரு மறைமாவட்ட ஆட்சிப்பீடம் ஆயரின்றி உள்ளது என்ற அறிவிப்பைப் பெற்றுக்கொண்ட எட்டு நாள்களுக்குள், மறைமாவட்ட ஆலோசகர் குழாமினால் (the college of consultors) ஒரு மறைமாவட்ட நிர்வாகி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்; அவர் மறைமாவட்டத்தை இடைப்பட்ட காலத்தில் ஆள்வார்.[2] மறைமாநில நிர்வாகி 35 அகவையைத் தாண்டிய ஒரு குருவாகவோ, ஆயராகவோ இருத்தல் வேண்டும்.

மறைமாவட்ட நிர்வாகி, ஏதாவது ஒரு காரணத்தின் பொருட்டு, குறிப்பிடப்பட்டுள்ள காலத்திற்குள் சட்டமுறைமைப்படி தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றால், அவரின் நியமனம் உயர் மறைமாவட்ட ஆயருக்கு உரியது; உயர் மறைமாவட்ட ஆட்சிப்பீடமே ஆயரின்றி இருந்தால் அல்லது உயர் மறைமாவட்ட ஆட்சிப்பீடமும் சார்புநிலை ஆட்சிப்பீடமும் ஆயரின்றி இருந்தால் மறைமாவட்ட நிர்வாகியின் நியமனம் பதவி உயர்வால் மூத்த சார்புநிலை ஆயருக்கு உரியது.[3]

மறைமாவட்ட ஆட்சிப்பீடம் ஆயரின்றி இருக்கும்போது மறைமாவட்டத்தை மறைமாவட்ட நிர்வாகியின் நியமனத்திற்கு முன் ஆளுகின்ற ஒருவர், ஆயர் பொதுப் பதில்குருவுக்குச் (தலைமை குரு/vicar general) சட்டம் வழங்கும் அதிகாரத்தையும் கொண்டுள்ளார். மறைமாவட்ட நிர்வாகி காரியங்களின் இயல்பினால் அல்லது சட்டத்தினாலேயே விலக்கப்பட்டவை நீங்கலாக, ஒரு மறைமாவட்ட ஆயரின் கடமைகளால் பிணைக்கப்பட்டுள்ளார்; அதிகாரத்தையும் கொண்டுள்ளார்.[4]

ரோம் மறைமாநிலத்தில்

திருத்தந்தையின் மறைவாலோ, அல்லது பணித்துறப்பாலோ ஆட்சிபீடம் காலியாகும் போது ரோம் மறைமாநிலத்தின் ஆட்சிப் பீடம் காலியானதாக கொள்வர். இந்த காலத்தில் திருச்சபையை கருதினால்மார்கள் ஆள்வர். ஆனால், அவர்கள் தாங்கள் முன்னர் வகித்த பதவிகள் அனைத்தையும் இழப்பர்.

ரோம் நகரில் உள்ள கருதினால்மார்கள், அகில உலகில் உள்ள மற்ற கருதினால்களின் வருகைக்காக 15 நாட்கள் காத்திருப்பர். பின்னர் புதிய திருத்தந்தையை தேர்ந்தெடுக்கும் பணியில் ஈடுபடுவர்.

19ஆம் நூற்றாண்டுக்கு பின் நிகழ்ந்த திருப்பீட காலியான அரியணை காலங்கள்

காலியான அரியணையின் காலத்தில் திருப்பீடத்தின் சின்னம்
முன்னிருந்த திருத்தந்தைபின்வந்த திருத்தந்தைதுவக்கம்முடிவுகால அளவு
ஆறாம் பயஸ்ஏழாம் பயஸ்29 ஆகஸ்ட் 179914 மார்ச் 1800207 நாட்கள்
ஏழாம் பயஸ்பன்னிரண்டாம் லியோ20 ஆகஸ்ட் 182328 செப்டம்பர் 182339 நாட்கள்
பன்னிரண்டாம் லியோஎட்டாம் பயஸ்10 பெப்ரவரி 182931 மார்ச் 182949 நாட்கள்
எட்டாம் பயஸ்பதினாறாம் கிரகோரி30 நவம்பர் 18302 பெப்ரவரி 183163 நாட்கள்
பதினாறாம் கிரகோரிஒன்பதாம் பயஸ்1 ஜூன் 184616 ஜூன் 184615 நாட்கள்
ஒன்பதாம் பயஸ்பதின்மூன்றாம் லியோ7 பெப்ரவரி 187820 பெப்ரவரி 187813 நாட்கள்
பதின்மூன்றாம் லியோபத்தாம் பயஸ்20 ஜூலை 19034 ஆகஸ்ட் 190315 நாட்கள்
பத்தாம் பயஸ்பதினைந்தாம் பெனடிக்ட்20 ஆகஸ்ட் 19143 செப்டம்பர் 191414 நாட்கள்
பதினைந்தாம் பெனடிக்ட்பதினொன்றாம் பயஸ்22 ஜனவரி 19226 பெப்ரவரி 192215 நாட்கள்
பதினொன்றாம் பயஸ்பன்னிரண்டாம் பயஸ்10 பெப்ரவரி 19392 மார்ச் 193920 நாட்கள்
பன்னிரண்டாம் பயஸ்இருபத்திமூன்றாம் யோவான்9 அக்டோபர் 195828 அக்டோபர் 195819 நாட்கள்
இருபத்திமூன்றாம் யோவான்ஆறாம் பவுல்3 ஜூன் 196321 ஜூன் 196318 நாட்கள்
ஆறாம் பவுல்முதலாம் யோவான் பவுல்6 ஆகஸ்ட் 197826 ஆகஸ்ட் 197820 நாட்கள்
முதலாம் யோவான் பவுல்இரண்டாம் யோவான் பவுல்28 செப்டம்பர் 197816 அக்டோபர் 197818 நாட்கள்
இரண்டாம் யோவான் பவுல்பதினாறாம் பெனடிக்ட்2 ஏப்ரல் 200519 ஏப்ரல் 200517 நாட்கள்
பதினாறாம் பெனடிக்ட்பிரான்சிசு28 பெப்ரவரி 201313 மார்ச் 201313 நாட்கள்

ஆதாரங்கள்

  1. திருச்சபை சட்டம் 409, பிரிவு 1.
  2. திருச்சபை சட்டம் 421, பிரிவு 1.
  3. திருச்சபை சட்டம் 421, பிரிவு 2 மற்றும் 425, பிரிவு 3.
  4. திருச்சபை சட்டம் 426-427.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.