சதுசேயர்

சதுசேயர் (எபிரேயம்: צְדוּקִים Ṣĕdûqîm) என்போர் யூத சமய உட்பிரிவில் ஒன்றின் உருப்பினர் ஆவார். இவர்கள் யூதேயாவில் இரண்டாம் கோவில் காலம் தொடங்கி அதன் கிபி 70இல் அதன் அழிவு வரை இருந்தனர். இவர்களை ஜொசிஃபஸ் யூத சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் மேல் தட்டு மக்களாக குறிக்கின்றார்.[1] இவர்கள் யூத கோயிலினை பராமரிப்பது உள்ளிட்ட பல்வேறு அரசியல், சமூக, சமய பொறுப்புகளை வகித்தனர். பரிசேயர் மற்றும் ஈசேயர் ஆகிய குழுக்களோடு இவர்கள் முரண்பாடு கொண்டிருந்தனர். கி.பி70இல் இரண்டாம் கோவிலின் அழிவுக்குப்பின்பு இவர்களின் குழு இல்லாமல் போனது. பிற்காலத்தில் வந்த காரைதே யூதப்பிரிவினர் இவர்களின் வழித்தோன்றல் என்பர்.

நம்பிக்கைகள்

இவர்கள் பரிசேயரைப்போலல்லாமல் செவிவழி சட்டங்களை (Oral Law) ஏற்கவில்லை. தோராவை மட்டுமே சட்டத்தின் அடிப்படையாகக் கொண்டனர்.[1] எழுதப்பட்ட சட்டம் மற்றும் அதில் இருந்த குருத்துவத்தின் சித்தரிப்பு ஆகியவை யூத சமுதாயத்தில் சதுசேயர் மேலாதிக்கம் செலுத்த வழிகோலியது.

ஜொசிஃபளின் படி இவர்களின் நம்பிக்கைகள்:

  • ஊழ் என ஒன்று இல்லை
  • கடவுள் தீமை செய்யமாட்டார்
  • மனிதருக்கு நன்மை தீமையினை வேறுபடுத்தும் ஆற்றல் உண்டு
  • ஆன்மா அழிவுடையது; ஆதலால் மரணத்தின் பின் வாழ்வு இல்லை
  • இறப்புக்குப்பின்பு செய்த நன்மைக்கு பலனோ அல்லது தீமைக்கு தண்டனையோ இல்லை[2]

பணிகள்

சமயம்

கோவிலின் பராமரிப்பு இவர்களின் முக்கிய சமயப்பணியாக இருந்தது. தோராவில் இவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த குறிக்கத்தக்க இடம் இவர்களின் சமூக நிலைக்கு வலுவூட்டியது. பண்டைய இஸ்ரேலின் முதன்மை வழிபாடு முறையான பலி செலுத்தும் பணியினை இவர்கள் நிறைவேற்றினர். இது ஆண்டின் மூன்று எருசலேம் திருப்பயணத்தையும் உள்ளடக்கும். எல்லா குருக்களும் சதுசேயர் அல்லர் என்பது குறிக்கத்தக்கது. சிலர் பரிசேயராகவும் வேரு சிலர் எக்குழுவையும் சாராதாராகவும் இருந்தனர் என்பது குறுக்கத்தக்கது.[3]

அரசியல்

சதுசேயர் பல அரசு அலுவல்களை மேற்பார்வையிட்டார்.[4] இவர்கள்

  • உள்நாட்டு அரசினை நிர்வகித்தனர்
  • வெளிநாட்டில் நாட்டின் பதில் ஆளாக செயல்பட்டனர்
  • யூத தலைமைச் சங்கத்தில் பங்கேற்றனர்
  • உள்நாடு மற்றும் வெளிநாட்டில் வாழும் யூதர்களிடையே வரி சேகரித்தனர்
  • இராணுவத்தினை உருவாக்கி அதனை வழிநடத்தினர்
  • யூதர்களுக்கும் உரோமையர்களுக்கும் இடயே பாலமாக இருந்தனர்
  • உள்நாட்டு குறைகளை தீர்க்க முயன்றனர்.

மேற்கோள்கள்

  1. Josephus: PACE: AJ, 13.10.6 (Whiston)
  2. Josephus Jewish War 2.8.14; cf. Antiquities 8.14-15.
  3. Cohen 155
  4. Wellhausen, 45
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.