திருவெளிப்பாட்டு பெண்

திருவெளிப்பாட்டு பெண் அல்லது திருவெளிப்பாட்டு கன்னி என்பது இயேசுவின் தாய் மரியாவைப் பற்றிய கருத்துருக்களில் ஒன்றாகும். புதிய ஏற்பாட்டு நூல்களில் ஒன்றான திருவெளிப்பாடு நூலின் 12ஆம் அதிகாரத்தில் விவரிக்கப்படும் பெண் கன்னி மரியாவைச் சுட்டிக்காட்டுவதாகக் கருதுவதன் அடிப்படையில் இது அமைந்துள்ளது.

கன்னி மரியாவை திருவெளிப்பாட்டு பெண்ணாக சித்தரிக்கும் ஓவியம்

விவிலிய வசனங்கள்

திருவெளிப்பாடு 11:19-12:1-17[1] பகுதியில் பின்வரும் காட்சி விவரிக்கப்படுகிறது:

11:19 விண்ணகத்தில் கடவுளின் கோவில் திறக்கப்பட்டது. அந்தக் கோவிலில் உடன்படிக்கைப் பேழை காணப்பட்டது. மின்னலும் பேரிரைச்சலும் இடிமுழக்கமும் நிலநடுக்கமும் கனத்த கல்மழையும் உண்டாயின.

12:1-6 வானில் பெரியதோர் அடையாளம் தோன்றியது: பெண் ஒருவர் காணப்பட்டார்: அவர் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தார்; நிலா அவருடைய காலடியில் இருந்தது; அவர் பன்னிரு விண்மீன்களைத் தலைமீது சூடியிருந்தார். அவர் கருவுற்றிருந்தார்; பேறுகால வேதனைப்பட்டுக் கடும் துயருடன் கதறினார். வானில் வேறோர் அடையாளமும் தோன்றியது; இதோ நெருப்புமயமான பெரிய அரக்கப் பாம்பு ஒன்று காணப்பட்டது. அதற்கு ஏழு தலைகளும் பத்துக் கொம்புகளும் இருந்தன. அதன் தலைகளில் ஏழு மணி முடிகள் இருந்தன. அது தன் வாலால் விண்மீன்களின் மூன்றில் ஒரு பகுதியை நிலத்தின்மீது இழுத்துப் போட்டது. பேறுகால வேதனையிலிருந்த அப்பெண் பிள்ளை பெற்றவுடன் அதை விழுங்கிவிடுமாறு அரக்கப் பாம்பு அவர்முன் நின்று கொண்டிருந்தது. எல்லா நாடுகளையும் இருப்புக்கோல் கொண்டு நடத்தவிருந்த ஓர் ஆண் குழந்தையை அவர் பெற்றெடுத்தார். அக்குழந்தையோ கடவுளிடம் அவரது அரியணை இருந்த இடத்துக்குப் பறித்துச் செல்லப்பெற்றது. அப்பெண் பாலைநிலத்துக்கு ஓடிப்போனார்: அங்கு ஆயிரத்து இருநூற்று அறுபது நாள் அவரைப் பேணுமாறு கடவுள் அவருக்கென ஓர் இடத்தை ஏற்பாடு செய்திருந்தார்.

12:7-10 பின்னர் விண்ணகத்தில் போர் மூண்டது. மிக்கேலும் அவருடைய தூதர்களும் அரக்கப் பாம்போடு போர் தொடுத்தார்கள்: அரக்கப் பாம்பும் அதன் தூதர்களும் அவர்களை எதிர்த்துப் போரிட்டார்கள். அரக்கப் பாம்பு தோல்வியுற்றது. விண்ணகத்தில் அதற்கும் அதன் தூதர்களுக்கும் இடமே இல்லாது போயிற்று. அப்பெரிய அரக்கப் பாம்பு வெளியே தள்ளப்பட்டது. அலகை என்றும் சாத்தான் என்றும் அழைக்கப் பெற்ற அதுவே தொடக்கத்தில் தோன்றிய பாம்பு. உலகு முழுவதையும் ஏமாற்றிய அது மண்ணுலகுக்குத் தள்ளப்பட்டது: அதன் தூதர்களும் அதனுடன் வெளியே தள்ளப்பட்டார்கள். பின்பு விண்ணகத்தில் ஒலித்த பெரியதொரு குரலைக் கேட்டேன். அது சொன்னது: இதோ, மீட்பு, வல்லமை, நம் கடவுளின் ஆட்சி, அவருடைய மெசியாவின் அதிகாரம் ஆகிய அனைத்தும் வந்துவிட்டன. நம் சகோதரர் சகோதரிகள் மீது குற்றம் சுமத்தியவன், நம் கடவுள் திருமுன் அல்லும் பகலும் அவர்கள்மீது குற்றம் சாட்டியவன் வெளியே தள்ளப்படான்.

12:11-12 ஆட்டுக்குட்டி சிந்திய இரத்தத்தாலும் தாங்கள் பகர்ந்த சான்றாலும் அவர்கள் அவனை வென்றார்கள். அவர்கள் தங்கள் உயிர்மீது ஆசை வைக்கவில்லை: இறக்கவும் தயங்கவில்லை. இதன்பொருட்டு விண்ணுலகே, அதில் குடியிருப்போரே, மகிழ்ந்து கொண்டாடுங்கள். மண்ணுலகே, கடலே, ஐயோ! உங்களுக்குக் கேடு! தனக்குச் சிறிது காலமே எஞ்சியிருக்கிறது என்பதை அலகை அறிந்துள்ளது: அதனால் கடுஞ் சீற்றத்துடன் உங்களிடம் வந்துள்ளது.

12:13-17 தான் மண்ணுலகுக்குத் தள்ளப்பட்டதைக் கண்ட அரக்கப் பாம்பு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த அப்பெண்ணைத் துரத்திச் சென்றது. ஆனால், அப்பாம்பிடமிருந்து தப்பித்துப் பாலைநிலத்தில் அவருக்கெனக் குறிக்கபட்டிருந்த இடத்துக்குப் பறந்து செல்லுமாறு, பெரும் கழுகின் இரு சிறகுகள் அவருக்கு அளிக்கப்பட்டன. அங்கு அவர் மூன்றரை ஆண்டுக் காலம் பேணப்படுவார். அப்பெண்ணை வெள்ளம் அடித்துச் செல்லும்பொருட்டு, அவர் பின்னால் அப்பாம்பு தன் வாயிலிருந்து ஆறுபோலத் தண்ணீர் பாய்ந்தோடச் செய்தது. ஆனால் நிலம் அப்பெண்ணுக்குத் துணை நின்றது. அது தன் வாயைத் திறந்து, அரக்கப்பாம்பின் வாயிலிருந்து பாய்ந்த வெள்ளத்தைக் குடித்துவிட்டது. இதனால் அரக்கப்பாம்பு அப்பெண்மீது சினங் கொண்டு, அவருடைய எஞ்சிய பிள்ளைகளோடு போர் தொடுக்கப் புறப்பட்டுச் சென்றது. அவர்கள் கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடித்து இயேசுவுக்குச் சான்று பகர்ந்தவர்கள்.

வசனங்களின் விளக்கம்

திருவெளிப்பாடு 12ஆம் அதிகாரத்தில் கூறப்படும் பெண் பற்றி விவிலிய அறிஞர்கள் இரண்டு விதமான விளக்கங்களைத் தருகின்றனர். இந்தக் காட்சி இயேசு கிறித்துவின் தாயான மரியாவைச் சித்தரிப்பதாக ஒரு தரப்பினரும், கிறித்தவர்களின் கூட்டமாகிய திருச்சபையைக் குறிப்பதாக மற்றொரு தரப்பினரும் குறிப்பிடுகின்றனர். இறையியல் கண்ணோட்டத்தில் இவை இரண்டுமே சரியெனக் கருதப்படுகின்றன.

அன்னை மரியா

தொடக்கக் காலம் முதலே திருவெளிப்பாட்டில் சித்தரிக்கப்படும் பெண்ணை கன்னி மரியாவுக்கு ஒப்பிடுவது வழக்கமாக இருந்தது. "எல்லா நாடுகளையும் இருப்புக்கோல் கொண்டு நடத்தவிருந்த ஓர் ஆண் குழந்தையை அப்பெண் பெற்றெடுத்தார்"[2] என்ற வார்த்தைகள், இயேசுவின் தாயைக் குறிப்பதாக அமைந்துள்ளன. ஏனெனில், கன்னி மரியாவின் மகனாக பிறந்த இயேசுவையே உலகாளும் அரசராக விவிலியம் சித்தரிக்கிறது. "அவருக்கெனக் குறிக்கபட்டிருந்த இடத்துக்குப் பறந்து செல்லுமாறு, பெரும் கழுகின் இரு சிறகுகள் அவருக்கு அளிக்கப்பட்டன"[3] என்ற வசனம், மரியாவின் விண்ணேற்பை குறிப்பதாக பழங்கால கிறித்தவர்கள் கருதினர். மேலும், "அவர் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தார்; நிலா அவருடைய காலடியில் இருந்தது; அவர் பன்னிரு விண்மீன்களைத் தலைமீது சூடியிருந்தார்"[4] என்ற வருணனை மரியாவின் விண்ணக மாட்சியை விவரிப்பதாகக் கருதப்படுகிறது.

திருச்சபை

அதே நேரத்தில், திருவெளிப்பாட்டில் காணப்படும் பெண் திருச்சபைக்கும் ஒப்பிடப்படுகிறார். இங்கு திருச்சபை என்பது கிறித்தவர்களை மட்டும் குறிக்காமல், கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் என்ற பொருளில் இஸ்ரயேல் மக்களையும் உள்ளடக்கியதாக உள்ளது. இஸ்ரயேல் மக்களிடம் இருந்தே இறைமகன் இயேசு தோன்றினார். பெண்ணின் தலைமீது காணப்பட்ட விண்மீன்கள் திருத்தூதர்களை சுட்டிக்காட்டுவதாகவும், கதிரவன் திருச்சபையின் மாட்சியைச் சுட்டுவதாகவும், நிலவு திருச்சபையின் உயர்நிலையைக் காட்டுவதாகவும் கருதப்படுகிறது. "அரக்கப்பாம்பு அப்பெண்மீது சினங் கொண்டு, அவருடைய எஞ்சிய பிள்ளைகளோடு போர் தொடுக்கப் புறப்பட்டுச் சென்றது"[5] என்ற வசனத்தில், 'அரக்கப்பாம்பு' என்பது அலகையையும், 'எஞ்சிய பிள்ளைகள்' என்பது தொடக்கக் காலத்தில் துன்புற்ற கிறித்தவர்களையும் சுட்டிக்காட்டுகிறன.

மரியாவின் காட்சி

1947 ஏப்ரல் 12 ஆம் தேதி ரோம் நகரின் குகை ஒன்றில், கத்தோலிக்க நம்பிக்கையை இழந்தவரான புரூனோ கொர்னச்சியொலா என்பவருக்கும், அவரது இரண்டு குழந்தைகளுக்கும் காட்சி அளித்த அன்னை மரியா, தன்னை திருவெளிப்பாட்டு கன்னி என்று வெளிப்படுத்தினார்.[6] தமிழகத்தின் வேளாங்கண்ணியில் காட்சி அளித்த அன்னை மரியாவின் உருவம், நிலவைக் காலடியில் மிதித்து, கதிரவனை ஆடையாக அணிந்து, தலையில் விண்மீன்களைச் சூட்டிய திருவெளிப்பாட்டு பெண்ணை அடையாளப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

ஆதாரங்கள்

  1. திருவெளிப்பாடு 12
  2. திருவெளிப்பாடு 12:5
  3. திருவெளிப்பாடு 12:14
  4. திருவெளிப்பாடு 12:1
  5. திருவெளிப்பாடு 12:17
  6. திருவெளிப்பாட்டு கன்னி
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.