மண்ணக மீட்பரின் மாண்புயர் அன்னையே!

மண்ணக மீட்பரின் மாண்புயர் அன்னையே! (பழைய வழக்கில்: இரட்சகருடைய பரிசுத்த மாதாவே!; Ecclesiastical Latin: [ˈalma redɛmpˈtoris ˈmatɛr]; ஆங்கிலம்:Loving Mother of our Savior) என்பது தூய கன்னி மரியாவைக் குறித்து கத்தோலிக்க திருச்சபையில் திருப்புகழ்மாலையின் இரவு மன்றாட்டில் பாடப்படும் நான்கு பாடல்களுள் ஒன்றாகும். புனிதர்களான இரனேயு, ஃபுல்ஜென்டுஸ் மற்றும் எபிபேனியுஸ் ஆகியோரின் எழுத்துகளிலிருந்து இப்பாடல் உருபெற்றது.[1] முக்காலத்தில் இது திருவருகைக் கால முதல் ஞாயிறில் துவங்கி இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்தல் விழா (பெப்ரவரி 2) இரவு மன்றாட்டு முடிய பயன்படுத்தப்பட்டுகின்றது.

தூய கன்னி மரியா
ஓவியர்: ராபியேல் சான்சியோ

பாடல் வரிகள்

மண்ணக மீட்பரின் மாண்புயர் அன்னையே
விண்ணகம் செல்லத் திறந்த வாயிலே
தண் கடல் மீதொளிர் விண்மின் நீரே
வீழ்ச்சி நின்றெழ முயன் றிடும் மக்களை
ஆட்சி செய்து அவர்க்குதவிடுவீர்.
இயற்கை வியப்புற இறைவனை ஈன்றீர்
ஈன்ற பின்னரும் கன்னியாய் நின்றீர்
வானவன் கபிரியேல் வாழ்த்துரை ஏற்றீர்
ஈனப் பாவிகள் எமக்கு இரங்குவீர். ஆமென்

பழைய வழக்கு

புதுவையில் உள்ள மிஷன் அச்சகத்தில் 1937ஆம் ஆண்டு அச்சிடப்பட்டு வெளியிடப்பட்ட ஞான சமுத்திரம் என்னும் நூலில் இருந்து இப்பாடலில் உரை கீழே தரப்பட்டுள்ளது

இரட்சகருடைய பரிசுத்த மாதாவே! ஏகும் வழியான பரகதி வாசலே, சமுத்திரத்தின் தாரகையே, பாவத்தில் வீழ்தவர் எழுந்திருக்கப் பரிதவிக்கையில் உமது வேண்டுதலால் உதவியருளும். உலகத்தியல்பு அதிசயிக்க உம்மைப்படத்தவரைப் பெற்ற தாயே, பெறுமுன்னும் பெற்றபின்னும் கன்னிகையே, தேவ தூதருடையமங்கள வாய் மொழிக்கேட்டுப்பாவிகள் பேரில் இரக்கமாயிரும்.

திருவருகைக் கால முதல் ஞாயிறு துவங்கி கிறிஸ்து பிறப்பு முடிய  :

முதல் - ஆண்டவருடைய தூதர் மரியாவுக்குத் தூதுரைத்தார்.
துணை - மரியா தூய ஆவியாரால் கருவுற்றார்.
மன்றாடுவோமாக: இறைவா! / உம் திருமகன் மனிதர் ஆனதை / உம்முடைய வானதூதர் வழியாக / நாங்கள் அறிந்திருக்கிறோம். / அவருடைய பாடுகளினாலும் இறப்பினாலும் / நாங்கள் உயிர்ப்பின் மாட்சி பெற / உமது அருளைப் பொழிவீராக./ எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக / உம்மை மன்றாடுகிறோம்./ ஆமென்.

கிறிஸ்து பிறப்பு துவங்கி இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்தல் விழா (பெப்ரவரி 2) முடிய :

முதல் - திருப்பேறு பெற்றபின்னும் சிதைவில்லாத கன்னிகையே,
துணை - சர்வேசுரனுடைய தாயாரே, எங்களுக்காக மன்றாடும்.
மன்றாடுவோமாக: சர்வேசுரா சுவாமி! பாக்கியவதியான அர்ச். மரியாளுடைய கன்னிமை குன்றாத திருக்கர்ப்பத்தினாலே மனுக்குலத்துக்கு நித்திய இரட்சணையின் சம்பாவனையைத் தந்தருளினீரே, எங்கள் சீவ காரணரான சேசுகிறீஸ்துவை எங்களுக்குத் தந்தருளின அந்த தேவதாயார் எங்களுக்காக தேவரீரைக் கேட்கும் மன்றாட்டுகளின் பலனை எங்கள் அவசரங்களிலே நாங்கள் கண்டுகொள்ள தேவரீரை வேண்டிக்கொள்ளுகிறோம்- ஆமென்.

மேற்கோள்கள்

  1. The Tradition of Catholic Prayer by Christian Raab, Harry Hagan 2007 ISBN 0-8146-3184-3 page 234
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.