தவத்திருப்பாடல்கள்

தவத்திருப்பாடல்கள் அல்லது ஏழு தவச்சங்கீதங்கள், என்பவை கி.பி 6ம் நூற்றாண்டு முதல் கிறித்தவர்களால் பயன்படுத்தப்பட்டுவந்த விவிலியத்தின் திருப்பாடல்கள் நூலில் உள்ள 6, 32, 38, 51, 102, 130 மற்றும் 143 (செப்துவசிந்தா எண்ணிக்கையில் 6, 31, 37, 50, 101, 129, மற்றும் 142) ஆகிய பாடல்களைக்குறிக்கும். இப்பாடல்கள் தன் பாவத்துக்காய் மனம் வருந்தும் ஒருவர் பாடும் பாடல்களாய் அமைந்துள்ளன. இவறை 5ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஹிப்போவின் அகஸ்டீன் தவத்திருப்பாடல்கள் என அழைத்துள்ளார். இதில் 51ஆம் திருப்பாடல் ஆதி திருச்சபையில் காலை வேண்டலில் பயன்படுத்தப்பட்டது ஆகும். பழங்காலத்தில் புதிய துறவிகள் இப்பாடலை காலை வேண்டலில் வாசிப்பது வழக்கம்.[1]

  • திருப்பாடல் 6 - ஆண்டவரே, என்மீது சினங்கொண்டு என்னைக் கண்டியாதேயும் எனத்துவங்கும் இப்பாடல் இக்கட்டுக் காலத்தில் உதவுமாறு வேண்டல் ஆகும்
  • திருப்பாடல் 32 - எவரது குற்றம் மன்னிக்கப்பட்டதோ ... அவர் பேறு பெற்றவர் எனத்துவங்கும் பாவ அறிக்கையும் மன்னிப்பினையும் குறிக்கும் இப்பாடல் தாவீதின் அறப்பாடல் ஆகும்.
  • திருப்பாடல் 38 - ஆண்டவரே, என்மீது சினங்கொண்டு என்னைக் கண்டியாதேயும்; எனத்துவங்கும் இப்பாடல் துன்புற்றவரின் மன்றாட்டாக தாவீது நினைவு கூர்தலுக்காகப் பாடியது.
  • திருப்பாடல் 51 - கடவுளே! உமது பேரன்புகேற்ப எனக்கு இரங்கும் எனத்துவங்கும் இப்பாடல் தாவீது பத்சேபாவிடம் முறைதவறி நடந்த பின் இறைவாக்கினர் நாத்தான் அவரிடம் வந்தபோது அவர் பாவ மன்னிப்புக்காக மன்றாடிய பாடல் ஆகும்.
  • திருப்பாடல் 102 - ஆண்டவரே! என் மன்றாட்டைக் கேட்டருளும்! என் அபயக்குரல் உம்மிடம் வருவதாக! என்னும் இப்பாடல் துன்புறும் ஒருவர் மனம் தளர்ந்து ஆண்டவரை நோக்கி தம் உள்ளக் குமுறலை வெளிப்படுத்தும் மன்றாட்டாக அமைந்துள்ளது
  • திருப்பாடல் 130 - ஆண்டவரே! ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் நான் உம்மை நோக்கி மன்றாடுகிறேன்; என்னும் சீயோன் மலைத் திருப்பயணப் பாடல்
  • திருப்பாடல் 143 - ஆண்டவரே! என்மன்றாட்டைக் கேட்டருளும்; நீர் நம்பிக்கைக்கு உரியவராய் இருப்பதால், உமது இரக்கத்திற்காக நான் எழுப்பும் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்; எனத்துவங்கும் இப்பாடல் தாவீது உதவிக்காக மன்றாடியப் பாடல் ஆகும்.

மேற்கோள்கள்

  1. Ordinations, Alleluia Press, 1962. See also the Pontificalia Romanum.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.