திருப்பாடல் 51

திருப்பாடல் 51 (செப்துவசிந்தா எண்ணிக்கையில்: திருப்பாடல் 50), என்பது விவிலியத்தின் திருப்பாடல்கள் நூலில் இடம்பெறும் பாடலாகும். கடவுளே! உமது பேரன்புகேற்ப எனக்கு இரங்கும் எனத்தொடங்கும் இப்பாடலானது தவத்திருப்பாடல்களுல் ஒன்றாகும். இலத்தீனில் இதன் துவக்கவரியான Miserere Mei என்னும் பெயரால் இது அதிகம் அறியப்படுகின்றது. இது தாழ்ச்சி மற்றும் மனமாற்றத்தின் அடையாளமாக பல வழிபாட்டிமுறைகளில் பயன்படுத்தப்படுகின்றது.

கிறித்தவ கோவில்களின் வாயிலருகே இருக்கும் புனித நீர்த்தொட்டியில் திருப்பாடல் 51:7 பொறிக்கப்படுவது வழக்கமாகும்

பாடல்

விவிலியத்தில் இப்பாடல் இடம்பெரும் இடத்தில் முன்னுரையாக பின்வரும் வரிகள் இருக்கும்:

பாடகர் தலைவர்க்கு; தாவீதின் புகழ்ப்பா; தாவீது பத்சேபாவிடம் முறைதவறி நடந்த பின் இறைவாக்கினர் நாத்தான் அவரிடம் வந்தபோது அவர் பாடியது) (2 சாமு 12:1-8)

தமிழ் விவிலிய பொது மொழிபெயர்ப்பில் இப்பாடல்:

1 கடவுளே! உமது பேரன்புகேற்ப எனக்கு இரங்கும்; உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும்.
2 என் தீவினை முற்றிலும் நீங்கும் படி என்னைக் கழுவியருளும்; என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும்;
3 ஏனெனில், என் குற்றங்களை நான் உணர்கின்றேன்; என் பாவம் எப்போதும் என் மனக் கண்முன் நிற்கின்றது.
4 உமக்கு எதிராக நான் பாவம் செய்தேன்; உம் பார்வையில் தீயது செய்தேன்; எனவே, உம் தீர்ப்பினால் உம் நீதியை வெளிப்படுத்தியுள்ளீர்; உம் தண்டனைத் தீர்ப்பில் நீர் மாசற்றவராய் விளங்குகின்றீர்.
5 இதோ! தீவினையோடு என் வாழ்வைத் தொடங்கினேன்; பாவத்தோடே என் அன்னை என்னைக் கருத்தாங்கினாள்.
6 இதோ! நீர் விரும்புவது உள்ளத்து உண்மையையே; மெய்ஞானத்தால் என் மனத்தை நிரப்பும்.
7 ஈசோப்பினால் என்னைக் கழுவியருளும்; நான் தூய்மையாவேன்; என்னைக் கழுவியருளும்; உறைபனியிலும் வெண்மையாவேன்.
8 மகிழ்வொலியும் களிப்போசையும் நான் கேட்கும்படி செய்யும்; நீர் நொறுக்கிய என் எலும்புகள் களிகூர்வனவாக!
9 என் பாவங்களைப் பாராதபடி உம்முகத்தை மறைத்துக்கொள்ளும்; என் பாவக்கறைகளை எல்லாம் துடைத்தருளும்.
10 கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்; உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை என்னுள்ளே உருவாக்கியருளும்.
11 உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்; உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும்.
12 உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும்; தன்னார்வ மனம் தந்து என்னைத் தாங்கியருளும்.
13 அப்பொழுது, குற்றம் செய்தோர்க்கு உம் வழிகளைக் கற்பிப்பேன்; பாவிகள் உம்மை நோக்கித் திரும்புவர்.
14 கடவுளே! எனது மீட்பின் கடவுளே! இரத்தப் பழியினின்று என்னை விடுவித்தருளும்; அப்பொழுது, என் நா உமது நீதியை முன்னிட்டுப் பாடும்.
15 என் தலைவரே! என் இதழ்களைத் திறந்தருளும்; அப்பொழுது, என் வாய் உமக்குப் புகழ் சாற்றிடும்.
16 ஏனெனில், பலியினால் உம்மை மகிழ்விக்க முடியாது; நான் எரிபலி செலுத்தினாலும் நீர் அதில் நாட்டங்கொள்வதில்லை.
17 கடவுளுக்கேற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே; கடவுளே! நொறுங்கிய, குற்றமுணர்ந்த உளத்தை நீர் அவமதிப்பதில்லை.
18 சீயோனுக்கு இன்முகம் காட்டி நன்மை செய்யும்; எருசலேமின் மதில்களை மீண்டும் கட்டுவீராக!
19 அப்பொழுது, எரிபலி, முழு எரிபலியெனும் முறையான பலிகளை விரும்புவீர்; மேலும், இளங்காளைகள் உமது பீடத்தில் பலியாகச் செலுத்தப்படும்.

கிறித்தவத்தில்

கத்தோலிக்க திருச்சபை ஒப்புரவு அருட்சாதனத்தில் பரிகாரமாக குருவால் அளிக்கப்படலாம். இதன் 7ஆம் வரி புனித நீரினை அர்ச்சிக்கும் குருவால் பாடப்படுவது வழக்கம். இப்பாடலின் 17ஆம் வசணம் திருப்புகழ்மாலையின் வருகைப்பாடலாகவும் வெள்ளிக்கிழமைகளின் காலை செபத்திலும் பயன்படுத்தப்படுகின்றது. இது திருநீற்றுப் புதனன்று திருப்பலியில் பயன்படுத்தப்படுகின்றது.

இசையமைப்பு

இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்துக்கு முன் கத்தோலிக்க திருச்சபையில் அதிகம் பயன்படுத்தப்பட்ட பாடலான இதற்கு பலஸ்த்ரீனா, கார்லோ கேசுவால்தோ,[1] ஆன்டோனியோ விவால்டி, யோகான் செபாஸ்தியன் பாக் முதலிய பலர் இசையமைத்துள்ளனர்.

மேற்கோள்கள்

  1. Caldwell, Grove
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.