பலன்கள் (கத்தோலிக்க திருச்சபை)

கத்தோலிக்க திருச்சபையில் பலன்கள் அல்லது பாவத்தண்டனைக் குறைப்பு (Indulgence) என்பது ஒப்புரவு அருளடையாளம் மூலமாக இறைவன் முன்னிலையில் ஏற்கனவே குற்றப்பொறுப்பு மன்னிக்கப்பட்ட பாவத்துக்குரிய இம்மைத் தண்டனையின் பொறுத்தலாகும். கத்தோலிக்க திருச்சபையானது இதுகுறித்து கிறிஸ்து மற்றும் தூயவர்களுடைய நற்பேறுபலன்கள் கருவூலத்தை[1] அதிகாரப்பூர்வமாகப் பகிர்ந்தளித்துப் பயன்படுத்துகிறதாகக் கொள்கின்றது.[2][3] இவை பகுதி பலன்களாகவோ (partial indulgence) அல்லது நிறைவுப்பலன்களாகவோ (plenary indulgence) வழங்கப்படுகின்றன.[4]

உரோமை இலாத்தரன் யோவான் முதன்மைப் பேராலயத்தில் பொறிக்கப்படுள்ள பலன்கள் குறித்த அறிக்கை

ஒருவர் பாவத்தண்டனைக் குறைப்புகளைப் பெறத் தகுதி உள்ளவராக இருப்பதற்கு, அவர் திமுழுக்குப் பெற்றவராகவும், திருச்சபையின் உறவுஒன்றிப்பிலிருந்து நீக்கப்படாதவராகவும், விதிக்கப்பட்ட செயல்களைச் செய்து முடிக்கும் வேளையிலாவது அருள் நிலையில் உள்ளவராகவும் இருத்தல்வேண்டும். ஆயினும், பாவத்தண்டனைக் குறைப்புகளைப் பெறத் தகுதியுள்ளவர் அவற்றைப் பெறுவதற்கு, குறைந்த அளவு அவற்றைப் பெறவேண்டும் என்ற எண்ணம் கொண்டவராக இருக்கவேண்டும். சலுகையின் நிபந்தனைகளுக்கேற்ப, விதிக்கப்பட்டுள்ள செயல்களை உரிய நேரத்திலும் உரிய முறையிலும் செய்து முடிக்கவேண்டும். மேலும் ஒப்புரவு அருட்சாதனம் பெற்று, திருத்தந்தையின் கருத்துகளுக்காக வேண்டுதல் வேண்டும்.[5] பொதுவாக ஒரு கர்த்தர் கற்பித்த செபம், ஒரு மங்கள வார்த்தை செபம் மற்றும் ஒரு திரித்துவப்புகழ் செய்வது வழக்கம்.[2][6]

இத்தகைய பலன்களை அறிவிக்க திருத்தந்தைக்கோ அல்லது அவரால் அதிகாரம் அளிக்கப்பட்டவருக்கோ மட்டுமே உரிமை உண்டு.

மேற்கோள்கள்

  1. Wetterau, Bruce. World history. New York: Henry Holt and company. 1994.
  2. William Kent, "Indulgences", in Catholic Encyclopedia (New York 1910)
  3. Code of Canon Law, canon 992
  4. Indulgentiarum doctrina, Norm 1
  5. Indulgentiarum doctrina, chapter 5 and norm 5
  6. "Myths about Indulgences". Catholic Answers.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.