அசிசி பிரான்சிசுவின் செபம்

அசிசி பிரான்சிசுவின் செபம் (Prayer of St. Francis) என்பது ஒரு கிறித்தவ இறைவேண்டலாகும். இது 13ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புனித அசிசியின் பிரான்சிசுவால் இயற்றப்பட்டது என்று எண்ணப்பட்டாலும் இன்று வழக்கத்திலுள்ள வடிவத்தில் முதன் முதலில் 1912இல் பிரஞ்சு மொழியில், பிரான்சிலிருந்து வெளியான லா க்ளோஷேட் (La Clochette) என்னும் ஆன்மீக இதழில் வெளிவந்தது. இந்த இறைவேண்டலில் அடங்கியுள்ள ஆழ்ந்த கருத்துகள் அசிசி நகர் பிரான்சிசுவின் சிந்தனையோடும் ஆன்மிக அணுகுமுறையோடும் முற்றிலும் இசைந்துள்ளன என்று ஆய்வாளர்கள் நிறுவியுள்ளனர்.

அசிசி பிரான்சிசுவின் இறைவேண்டல் எழுந்த வரலாறு

முதலாம் உலகப் போரின் போது இந்த இறைவேண்டல் "(உலக) அமைதிக்கான செபம்" என்னும் பெயரில் மக்களிடையே வழங்கலாயிற்று. அதற்குத் தூண்டுதலாக அமைந்தது திருத்தந்தை பதினைந்தாம் பெனடிக்டின் ஆணையின் படி, வத்திக்கான் நகரிலிருந்து வெளியாகின்ற "ஒஸ்ஸெர்வாத்தோரே ரொமானோ" (L'Osservatore Romano) என்னும் இதழின் 1916, சனவரி 20 பதிப்பில் இந்த இறைவேண்டலின் இத்தாலிய மொழிபெயர்ப்பு வெளியானது தான்.

"ஒஸ்ஸெர்வாத்தோரே ரொமானோ" இதழில் வெளியான இறைவேண்டலை, பிரஞ்சு மொழி இதழான "லா க்ருவா" (La Croix) என்னும் இதழ் 1916, சனவரி 28ஆம் நாள் வெளியிட்டது.

இவ்வாறு "(உலக) அமைதிக்கான செபம்" மக்களிடையே இன்னும் விரிவாகப் பரவலாயிற்று.

1936இல் இந்த இறைவேண்டல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, ஐக்கிய அமெரிக்க நாடுகளில் வழக்கத்தில் வந்தது. அப்போது அதற்கு "புனித அசிசி பிரான்சிசுவின் செபம்" என்னும் பெயர் கொடுக்கப்பட்டது.

இரண்டாம் உலகப் போரின் போதும் அதன் பின்பும் அமெரிக்காவில் கர்தினால் ஸ்பெல்மான், பாராளுமன்ற மேலவை உறுப்பினர் ஆல்பெர்ட் வால் ஹாக்ஸ் ஆகியோர் இந்த இறைவேண்டலின் பல்லாயிரக் கணக்கான பிரதிகளை மக்களுக்கு விநியோகம் செய்தனர்[1].

அசிசி பிரான்சிசுவின் இறைவேண்டல் - தமிழில்

இச்செபத்தின் தமிழ் வடிவம் பின்வருமாறு:

இறைவா, என்னை உமது அமைதியின் கருவியாக்கும்;
எங்கு பகைமை நிறைந்துள்ளதோ அங்கு அன்பையும்
எங்கு கயமை நிறைந்துள்ளதோ அங்கு மன்னிப்பையும்
எங்கு ஐயம் நிறைந்துள்ளதோ அங்கு விசுவாசத்தையும்
எங்கு அவநம்பிக்கை நிறைந்துள்ளதோ அங்கு நம்பிக்கையையும்
எங்கு இருள் சூழ்ந்துள்ளதோ அங்கு ஒளியையும்
எங்கு மனக்கவலை உள்ளதோ அங்கு அகமகிழ்வையும்
விதைத்திட அருள்புரியும்.
என் இறைவா,
ஆறுதல் பெறுவதைவிட ஆறுதல் அளிக்கவும்
புரிந்து கொள்ளப் படுவதைவிட பிறரை புரிந்து கொள்ளவும்
அன்பு செய்யப்படுவதைவிட பிறரை அன்பு செய்யவும் வரமருள்வாய்.
ஏனெனில்,
கொடுப்பதில் யாம் பெறுவோம்;
மன்னிப்பதில் மன்னிக்கப்பெறுவோம்;
இறப்பதில் நித்திய வாழ்வடைவோம்.
ஆமென்.

பொதுப் பயன்பாடு

அன்னை தெரேசா தான் துவங்கிய பிறர் அன்பின் பணியாளர் சபையின் காலை செபத்தில் இதனை ஒரு பகுதியாக இணைத்தார். 1979-ஆம் ஆண்டு நோபல் அமைதிப் பரிசு பெற்றபோது இச்செபம் வாசிக்கப்பட கேட்டுக்கொண்டார். 1979ஆம் ஆண்டில் மார்கரெட் தாட்சர் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமராக தேர்வான போது, இச்செபத்தின் தழுவிய வடிவத்தை செய்தியாளர்களிடம் வாசித்தார். 1984-ஆம் ஆண்டு நோபல் அமைதிப் பரிசு பெற்ற பேராயர் டெசுமான்ட் டுட்டு, இச்செபம் தனது பக்தி முயற்சிகளில் முக்கிய இடம் பெற்றதாக கூறியுள்ளார்.

அன்னை தெரேசா 1985ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுப் பேரவைக் கூட்டத்தில் உரையாற்றியபோது அங்கு இந்த இறைவேண்டலின் தழுவிய வடிவத்தை வாசித்தார்.

அக்டோபர் 1995ஆம் ஆண்டு திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர், ஐக்கிய நாடுகள் அவையில் உரையாற்ற நியூ யோர்க் மாநிலம் வந்தபோது, அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் பில் கிளின்டன் இச்செபத்திலிருந்து ஒரு பகுதியை தனது வரவேற்புரையில் கையாண்டார்.

2007-இல் நான்சி பெலோசி அமெரிக்கக் கீழவையின் தலைவியான போது இச்செபத்தை பயன்படுத்தினார்.[2]

வழிபாட்டில் பயன்பாடு

கிறித்தவ வழிபாட்டின்போது இந்த இறைவேண்டல், குறிப்பாக கத்தோலிக்க திருச்சபை நிகழ்வுகளில் வெவ்வேறு தழுவல்களில் பாடப்படுகின்றது. அத்தகைய இசைப் பாடல்களின் ஒரு வடிவம் கீழே தரப்படுகிறது[3]:

அமைதியின் தூதனாய் என்னையே மாற்றுமே
அன்பனே இறைவனே, என்னிலே வாருமே.
பகைமை உள்ள இடத்தில் பாசத்தை வளர்க்கவும்,
வேதனை நிறைந்த மனதில் மன்னிப்பு வழங்கவும்,
கலக்கம் அடையும் வாழ்வில் நம்பிக்கை ஊட்டவும்
அமைதியின் தூதனாய் என்னை மாற்றுமே.
தளர்ச்சி ஓங்கும்பொழுது மனத்திடம் தழைக்கவும்,
இருளே சூழும் வேளை ஒளியை ஏற்றவும்,
துயரம் வாட்டும் நேரம் உதயம் காணவும்
அமைதியின் தூதனாய் என்னை மாற்றுமே.
ஆறுதல் அன்பை அளித்து புரிதலை வளர்க்கவும்,
கொடுப்பதில் நிறைவைக் கண்டு மன்னித்து வாழவும்,
தன்னலம் ஒழித்து புதிய உலகம் படைக்கவும்
அமைதியின் தூதனாய் என்னை மாற்றுமே.

ஆதாரங்கள்

  1. Cf. Christian Renoux, La prière pour la paix attribuée à saint François, une énigme à résoudre, Paris, Editions franciscaines, Paris, 2001, p. 92-95
  2. யூடியூபில் நிகழ்படம்
  3. http://www.bibleintamil.com/songs/16respo/u_16responsorial.htm

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.