செக்கரியாவின் பாடல்

செக்கரியாவின் பாடல் என்பது விவிலியத்தின் லூக்கா நற்செய்தி 1:68-79இல் உள்ள பாடலாகும். இப்பாடலை திருமுழுக்கு யோவானின் பிறப்பின்போது அவரின் தந்தை செக்கரியா பாடியதாக விவிலியம் குறிக்கின்றது.[1] கத்தோலிக்க திருச்சபையில் இப்பாடல் திருப்புகழ்மாலையின் காலைப் புகழில் பயன்படுத்தப்படுகின்றது. இது நூர்சியாவின் பெனடிக்ட்டால் முதன் முதலில் இவ்வாறு பயன்படுத்தப்பட்டது.[2] இப்பாடல் ஆங்கிலிக்கம் மற்றும் லூதரனிய சபைகளின் காலை மன்றாட்டிலும் இடம்பெறுகின்றது.

செக்கரியா அவரது மகன், அவன் பெயர் எழுதுகிறார்.
(ஃப்ரெஸ்கோ, கெப்பல்லா, சாண்டா மரியா குறுநாவல், புளோரன்ஸ்)

உரை

இஸ்ரயேலின் கடவுளாகிய
ஆண்டவரைப் போற்றுவோம்.
ஏனெனில் அவர் தம் மக்களைத்
தேடிவந்து விடுவித்தருளினார்.
தம் தூய இறைவாக்கினர் வாயினால்
தொடக்க முதல் அவர் மொழிந்தபடியே
அவர் தம் ஊழியராகிய தாவீதின் குடும்பத்தில்
வல்லமை உடைய மீட்பர் ஒருவர்
நமக்காகத் தோன்றச் செய்தார்;
நம் பகைவரிடமிருந்தும்
நம்மை வெறுப்போர் அனைவரின் பிடியிலிருந்தும்
நம்மை மீட்பார்.
அவர் நம் மூதாதையருக்கு இரக்கம் காட்டி,
தமது தூய உடன்படிக்கையையும்,
நம் தந்தையாகிய ஆபிரகாமுக்கு
அவர் இட்ட ஆணையையும்
நிறைவேற்ற நினைவு கூர்ந்தார்.
இவ்வாறு நாம் பகைவரின் பிடியிலிருந்து
விடுவிக்கப்பட்டுத்
தூய்மையோடும் நேர்மையோடும்
வாழ்நாளெல்லாம் அச்சமின்றி
அவர் திருமுன் பணிசெய்யுமாறு வழிவகுத்தார்.
குழந்தாய்,
நீ உன்னத கடவுளின் இறைவாக்கினர் எனப்படுவாய்;
ஏனெனில் பாவ மன்னிப்பால் வரும் மீட்பை
அவர்தம் மக்களுக்கு அறிவித்து
ஆண்டவருக்கான வழியைச் செம்மைப்படுத்த
அவர் முன்னே செல்வாய்.
இருளிலும் இறப்பின் பிடியிலும் இருப்போர்க்கு
ஒளி தரவும்,
நம்முடைய கால்களை அமைதி வழியில் நடக்கச் செய்யவும்
நம் கடவுளின் பரிவுள்ளத்தாலும் இரக்கத்தாலும்
விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடிவருகிறது.


மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.