திருவெளிப்பாடு (நூல்)

திருவெளிப்பாடு அல்லது யோவானுக்கு அருளப்பெற்ற திருவெளிப்பாடு (Book of Revelation) என்னும் நூல் கிறித்தவ விவிலியத்தின் இரண்டாம் பகுதியாகிய புதிய ஏற்பாட்டில் இருபத்து ஏழாவது நூலாக அமைந்துள்ளது [1]. இதுவே புதிய ஏற்பாட்டின் கடைசி நூலும் ஆகும். மூல மொழியாகிய கிரேக்கத்தில் இந்நூலின் பெயர் Apokalupsis Ioannou (Ἀποκάλυψις Ἰωάννου) எனவும் இலத்தீன் மொழிபெயர்ப்பில் Apocalypsis Ioannis எனவும் உள்ளது.

இறந்து உயிர்பெற்றெழுந்த இயேசுவை விண்ணகத்தோர் ஆட்டுக்குட்டி உருவகத்தில் வழிபடுதல் (திவெ 5). ஓவியர்: ஹூபெர்ட் வான் ஐக் (1366-1426). காப்பிடம்: கெண்ட் நகர் பேராலயம், பெல்சியம்.

பழைய புராடஸ்தாந்து மொழிபெயர்ப்பில் இந்நூல் வெளிப்படுத்தின விசேஷம் என்னும் பெயர்கொண்டிருந்தது.

திருவெளிப்பாடு நூல்: அறிமுகம்

புதிய ஏற்பாட்டின் இறுதி நூலாகிய திருவெளிப்பாடு வேறுபட்டட ஓர் இலக்கிய வகையைச் சார்ந்தது. இதில் அடையாளங்கள் மிகுதியாக உள்ளன. இத்தகு திருவெளிப்பாட்டு இலக்கிய வகை கி.மு. 2ஆம் நூற்றாண்டையொட்டித் தோன்றி வளர்ந்ததாகத் தெரிகிறது. யூதர்கள் பிற இனத்தாரால் துன்புறுத்தப்பட்ட காலத்தில் நம்பிக்கையும் ஊக்கமும் ஆறுதலும் ஊட்டுவதற்காகவும் அக்கால நிகழ்ச்சிகளை ஒரு குறிப்பிட்ட பார்வையில் புரிந்துகொள்ள உதவுவதற்காகவும் திருவெளிப்பாட்டு வகை நூல்கள் உருவாயின. தானியேல் நூல் இத்தன்மை கொண்டது[2].

திருவெளிப்பாடு நூலின் ஆசிரியர்

இந்நூலின் ஆசிரியர் தம்மை யோவான் எனக் குறிப்பிடுகிறார் (திவெ 1:1, 4, 9; 22:8). தாம் ஒரு திருத்தூதர் என்றோ இயேசுவின் சீடர் என்றோ அவர் தம்மைப் பற்றிக் கூறிக் கொள்ளவில்லை. மொழிநடை, இலக்கணம், இறையியல் கருத்துகள் ஆகியவற்றை ஆராய்ந்து பார்த்தால் இது நான்காம் நற்செய்தியை எழுதிய ஆசிரியரால் எழுதப்பட்டிருக்க இயலாது என்பது புலனாகும்.

தொடக்கக் காலத்திலிருந்தே கிறிஸ்தவ எழுத்தாளர்கள் இந்நூலின் ஆசிரியர் திருத்தூதர் யோவானே என்று கூறிவந்திருப்பது உண்மை எனினும், அகச்சான்று அடிப்படையில் பார்க்கும்போது இந்நூலாசிரியர் யோவான் என்னும் பெயருடைய தொடக்க கால மூப்ப்ர் ஒருவராய் இருந்திருக்க வேண்டும் என்று சொல்வதே முறையாகத் தெரிகிறது.

திருவெளிப்பாடு நூல் எழுதப்பட்ட சூழலும் நோக்கமும்

இந்நூல் எழுதப்பட்ட காலத்தில் கிறிஸ்தவர்கள் கொடிய துன்பங்களுக்கு இலக்காயினர். அது உரோமைப் பேரரசன் நீரோவின் காலம் (கி.பி. 54-68) எனச் சிலர் கூறுகின்றனர். ஆனால் பேரரசன் தொமீசியன் காலமாக (கி.பி. 89-96) இருக்கும் எனக் கூறுவதே ஏற்புடையதாகத் தெரிகிறது. உரோமை அதிகாரிகள் அரச வணக்கத்தைப் பரப்பிய நேரத்தில் உரோமைப் பேரரசர் சீசரைத் தெய்வமாக வணங்க மறுத்த கிறிஸ்தவர்கள் வெறுப்புக்கும் இகழ்ச்சிக்கும் இன்னலுக்கும் உள்ளானார்கள். இந்நிலையில்தான் இதன் ஆசிரியர் பத்மூ தீவிலிருந்து இதனை எழுதியிருக்க வேண்டும்.

திருவெளிப்பாடு நூலின் உள்ளடக்கம்

அரசனைத் தெய்வமாக வழிபடும் வழக்கத்தை வாசகர்கள் துணிச்சலோடு எதிர்க்க வேண்டும். கடவுளுக்கும் சாத்தானுக்கும் இடையிலான இறுதிப் போர் விரைவில் வர இருக்கிறது. சாத்தான் கிறிஸ்துவின் சீடர்களுக்கு எதிராகத் துன்பங்களை மிகுதிப்படுத்துவான். ஆனால், கிறிஸ்தவர்கள் சாவுவரை உறுதியோடு இருக்க வேண்டும். அவர்களுக்கு அழிவு வராது என்பது உறுதி. கிறிஸ்து இயேசு வரும்போது அவர்கள் வெற்றி பெறுவார்கள். அப்போது கொடியவர்கள் என்றென்றைக்கும் அழிக்கப்படுவார்கள். கடவுளின் மக்களோ நிலைவாழ்வு பெறுவார்கள்.

திருவெளிப்பாடு நூலில் அடங்கியுள்ள அடையாளங்கள்

மேற்சொல்லப்பட்ட கருத்தை நேரடியாகச் சொல்வது ஆபத்தாக முடியும். எனவே இந்நூலில் பற்பல அடையாளங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன; காட்சிகள் மூலமாகவும் செய்திகள் சொல்லப்படுகின்றன. ஒரு சில அடையாளங்களும் அவற்றிற்கான விளக்கங்களும் கீழே தரப்படுகின்றன:

  • 7 என்னும் எண் 52 முறை இடம்பெறுகிறது. இது முழுமையைக் குறிக்கும் எண். ஒரு வேளை இது கடவுளையும் உலகையும் உள்ளடக்கும் எண்ணாக இருக்கலாம். ஏனெனில், மூன்று என்னும் எண் கடவுளைக் குறிக்கும்; நான்கு என்னும் எண் உலகைக் குறிக்கும். இவ்வாறு அனைத்தையும் உள்ளடக்கிய முழுமையைக் குறிக்கும் எண்ணாக ஏழு கருதப்பட்டிருக்கலாம்.
  • மேலும் 10, 1000 என்னும் எண்களும் முழுமையைக் குறிப்பனவாக உள்ளன.
  • 144 என்னும் எண்ணும், 12000, மற்றும் 1,44,000 என்பவையும் திருச்சபையைக் குறித்து நிற்கின்றன.
  • 7 என்னும் முழுமையில் பாதியான 3½ (மூன்றரை) என்னும் எண்ணைப் பயன்படுத்தி, இன்னும் எத்தனை ஆண்டுகளுக்குத் துன்பங்கள் நிகழும் என்பதை அறுதியிட்டுக் கூற முடியாது என ஆசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.

கிறிஸ்தவர்கள் தங்களுக்கு எதிராகச் செயல்பட்ட உரோமை ஆட்சியாளர்களின் கைகளில் அனுபவிக்கின்ற துன்பத்திற்குச் சின்னமாய் இருப்பவை கீழ்வருவன:

  • ஏழு முத்திரைகள் (திவெ அதி 7,8), ஏழு எக்காளங்கள் (திவெ அதி 8, 9), ஏழு கிண்ணங்கள் (திவெ அதி 16).

துன்புறுத்துவோருக்குச் சின்னங்களாய் இருப்பவை:

  • விலங்கு (திவெ அதி 13), விலைமகள் (திவெ அதி 17), பாபிலோன் (திவெ அதி 18).

இங்கு பாபிலோன் எதிரிகளின் அரசனான உரோமையைக் குறித்து நிற்கிறது.

இயேசு கிறிஸ்துவுக்குக் கீழ்வரும் சின்னங்கள் பயன்படுத்தப்படுகின்றன:

  • குரு (திவெ 1:12-16);
  • சிங்கம் (திவெ 5:5);
  • ஆட்டுக்குட்டி (திவெ 5:6);
  • குழந்தை (திவெ 12:5);
  • மணமகன் (திவெ 12:12);
  • விண்மீன் (திவெ 21:13; 22:16).

கதிரவனை ஆடையாக உடுத்திய பெண் (திவெ 12:1-16) புதிய இஸ்ரயேலாகிய திருச்சபையைக் குறித்து நிற்கிறார்.

திருவெளிப்பாடு நூலிலிருந்து சில பகுதிகள்

திருவெளிப்பாடு 21:1-7

பின்பு நான் புதியதொரு விண்ணகத்தையும் புதியதொரு மண்ணகத்தையும் கண்டேன்.
முன்பு இருந்த விண்ணகமும் மண்ணகமும் மறைந்துவிட்டன.
கடலும் இல்லாமற் போயிற்று.
அப்பொழுது புதிய எருசலேம் என்னும் திருநகர் கடவுளிடமிருந்து விண்ணகத்தை விட்டு இறங்கிவரக் கண்டேன்.
தன் மணமகனுக்காகத் தன்னையே அணி செய்து கொண்ட மணமகளைப்போல் அது ஆயத்தமாய் இருந்தது.
பின்பு விண்ணகத்திலிருந்து எழுந்த பெரும் குரல் ஒன்றைக் கேட்டேன்.
அது, 'இதோ! கடவுளின் உறைவிடம் மனிதர் நடுவே உள்ளது.
அவர் அவர்கள் நடுவே குடியிருப்பார்.
அவர்கள் அவருக்கு மக்களாய் இருப்பார்கள்.
கடவுள்தாமே அவர்களோடு இருப்பார்;
அவரே அவர்களுடைய கடவுளாய் இருப்பார்.
அவர்களுடைய கண்ணீர் அனைத்தையும் அவர் துடைத்து விடுவார்.
இனிமேல் சாவு இராது. துயரம் இராது, அழுகை இராது, துன்பம் இராது;
முன்பு இருந்தவையெல்லாம் மறைந்து விட்டன' என்றது.
அப்பொழுது அரியணையில் வீற்றிருந்தவர்,
'இதோ! நான் அனைத்தையும் புதியது ஆக்குகிறேன்' என்று கூறினார்.
மேலும், 'இவ்வாக்குகள் நம்பத்தக்கவை, உண்மையுள்ளவை' என எழுது' என்றார்.
பின்னர் அவர் என்னிடம் கூறியது:
'எல்லாம் நிறைவேறிவிட்டது;
அகரமும் னகரமும் நானே;
தொடக்கமும் முடிவும் நானே.
தாகமாய் இருப்போருக்கு வாழ்வு அளிக்கும் நீரூற்றிலிருந்து
நான் இலவசமாய்க் குடிக்கக் கொடுப்பேன்.
வெற்றி பெறுவோர் இவற்றை உரிமைப்பேறாகப் பெறுவர்.
நான் அவர்களுக்குக் கடவுளாய் இருப்பேன்; அவர்கள் எனக்கு மக்களாய் இருப்பார்கள்.'"

திருவெளிப்பாடு 22:1-5

"பின்பு அந்த வானதூதர் வாழ்வு அளிக்கும் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்த
ஓர் ஆற்றை எனக்குக் காட்டினார்.
அது பளிங்குபோல் ஒளிர்ந்தது.
அது கடவுளும் ஆட்டுக்குட்டியும் வீற்றிருந்த அரியணையிலிருந்து புறப்பட்டு,
நகரின் தெரு நடுவே பாய்ந்தோடியது.
ஆற்றின் இரு மருங்கும் வாழ்வுதரும் மரம் இருந்தன.
மாதத்திற்கு ஒருமுறையாக அது ஆண்டுதோறும் பன்னிரு முறை கனி தரும்.
அதன் இலைகள் மக்களினங்களைக் குணப்படுத்தக் கூடியவை.
சாபத்துக்கு உள்ளானது எதுவும் நகரில் இராது.
கடவுளும் ஆட்டுக்குட்டியும் வீற்றிருக்கும் அரியணை அங்கு இருக்கும்.
கடவுளின் பணியாளர்கள் அவரை வழிபடுவார்கள்;
அவரது முகத்தைக் காண்பார்கள்.
அவரது பெயர் அவர்களுடைய நெற்றியில் எழுதப்பட்டிருக்கும்.
இனி இரவே இராது.
விளக்கின் ஒளியோ கதிரவனின் ஒளியோ அவர்களுக்குத் தேவைப்படாது.
ஏனெனில் கடவுளாகிய ஆண்டவர் அவர்கள் மீது ஒளி வீசுவார்;
அவர்கள் என்றென்றும் ஆட்சிபுரிவார்கள்."

திருவெளிப்பாடு நூலின் உட்பிரிவுகள்

பொருளடக்கம் - பகுதிப் பிரிவு அதிகாரம் - வசனம் பிரிவு 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை
1. முன்னுரை (நூன்முகம்) 1:1-3 470
2. ஆசியாவிலுள்ள திருச்சபைகளுக்குக்

கடிதம்

1:4 - 3:22 470 - 474
3. ஏழு முத்திரைகளுள்ள

சுருளேடு

4:1 - 8:1 474 - 478
4. ஏழு எக்காளங்கள் 8:2 - 11:19 478 - 482
5. அரக்கப் பாம்பும்

இரு விலங்குகளும்

12:1 - 13:18 482 -484
6. காட்சிகள் 14:1 - 15:8 484 - 486
7. ஏழு கிண்ணங்கள் 16:1-21 486 - 488
8. பாபிலோனின் அழிவும்

எதிரிகளின் தோல்வியும்

17:1 - 20:15 488 - 494
9. புதிய விண்ணகமும்

புதிய மண்ணகமும்

21:1 - 22:15 494 - 496
10. முடிவுரை 22:16-21 496

ஆதாரங்கள்

  1. திருவெளிப்பாடு நூல்
  2. கத்தோலிக்க கலைக் களஞ்சியம் - திருவெளிப்பாடு
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.