யூதா திருமுகம்

யூதா அல்லது யூதா எழுதிய திருமுகம் (Letter [Epistle] of Jude) என்னும் நூல் கிறித்தவ விவிலியத்தின் இரண்டாம் பகுதியாகிய புதிய ஏற்பாட்டில் இருபத்து ஆறாவது நூலாக அமைந்துள்ளது [1]. மூல மொழியாகிய கிரேக்கத்தில் இந்நூலின் பெயர் Iouda (Ἰούδα) எனவும் இலத்தீன் மொழிபெயர்ப்பில் Epistula Judae எனவும் உள்ளது.

யூதா திருமுகத்திலிருந்து ஒரு பகுதியை (வச 9) உள்ளடக்கிய பழங்காலக் கிரேக்கக் கையெழுத்துச் சுவடி. மூலம்: சீனாய் சுவடி. காலம்: கி.பி. 350.

இத்திருமுகம் அனைத்துக் கிறிஸ்தவர்களுக்கும் எழுதப்பட்டுள்ளது[2]. இது காலத்தால் மிகவும் பிந்தியது; பேதுரு எழுதிய இரண்டாம் திருமுகத்தோடு மிகவும் தொடர்புடையது. இத்திருமுகத்தின் சில வசனங்கள் (13,14,15) ஏனோக்கு நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன.

யூதா திருமுகத்தின் ஆசிரியர்

இத்திருமுகத்தின் ஆசிரியர் தம்மை, "இயேசு கிறிஸ்துவின் பணியாளனும் யாக்கோபின் சகோதரனுமாகிய யூதா" எனக் குறிப்பிடுகிறார். எனினும் இவர் திருத்தூதருள் ஒருவரான யூதாவாக இருக்க மிகுதியான வாய்ப்பு இல்லை. ஏனெனில் இத்திருமுகத்தில் திருத்தூதர்கள் கடந்த காலத்தவராகக் குறிப்பிடப்படுகின்றனர் (வச 17-18); நம்பிக்கை (விசுவாசம்) உண்மைகளின் தொகுப்பாகக் காட்டப்படுகிறது. கி.பி. இரண்டாம் நூற்றாண்டோடு தொடர்புடைய ஞான உணர்வுக் கொள்கைகள் கண்டிக்கப்படுகின்றன; இத்திருமுகம் நல்ல கிரேக்க மொழி நடையில் அமைந்துள்ளது.

"இவருடைய சகோதரர் யாக்கோபு, யோசேப்பு, சீமோன் யூதா அல்லவா?" (மத் 13:15) என்னும் நற்செய்தி நூல்களின் கூற்று அடிப்படையில் இத்திருமுக ஆசிரியர் நற்செய்தி நூல்களில் கூறப்படும் இயேசுவின் சகோதரருள் ஒருவராக இருக்கலாம் என்று ஒரு சிலர் கருதுகின்றனர். எனினும் மேலே கூறிய காரணங்களை முன்னிட்டு இக்கருத்தையும் ஏற்றுக் கொள்வது கடினம்.

யூதா திருமுகம் எழுதப்பட்டதன் நோக்கம்

சில சபைகளில் போலிப் போதகர்களின் தவறான போதனைகளால் ஆபத்து ஏற்பட்டிருக்கலாம். அவர்களிடமிருந்து வாசகர்களைக் காத்துக் கொள்ள ஆசிரியர் இத்திருமுகத்தை எழுதியிருக்க வேண்டும்.

யூதா திருமுகத்தின் உள்ளடக்கம்

போலிப் போதகர்கள் பற்றிப் பேசும் திருமுக ஆசிரியர், அவர்களுக்குக் கடவுளின் தண்டனை வரப் போகிறது என்கிறார்; யூத மரபின் அடிப்படையில் இதை விளக்குகிறார் (வச 1-16). தம் வாசகர்கள் திருத்தூதர்களின் போதனைகளை உண்மையாய்க் கடைப்பிடிக்குமாறு ஆசிரியர் அறிவுரை கூறுகிறார்; அத்துடன் கிறிஸ்தவ அன்பின் கடமைகளைப் பொறுப்புடன் ஆற்றவும் பணிக்கிறார் (வச 17-23).

யூதா திருமுகத்திலிருந்து ஒரு பகுதி

யூதா 20-22


"அன்பானவர்களே, தூய்மை மிகு விசுவாசத்தை அடிப்படையாகக் கொண்டு
உங்கள் வாழ்வைக் கட்டி எழுப்புங்கள்;
தூய ஆவியின் துணையுடன் வேண்டுதல் செய்யுங்கள்.
கடவுளது அன்பில் நிலைத்திருங்கள்.
என்றுமுள்ள நிலைவாழ்வைப் பெற
நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இரக்கத்தை எதிர்பார்த்திருங்கள்.
நம்பத் தயங்குவோருக்கு இரக்கம் காட்டுங்கள்."

யூதா திருமுகத்தின் உட்பிரிவுகள்

பொருளடக்கம் - பகுதிப் பிரிவு வசனங்கள் பிரிவு 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை
1. முன்னுரை (வாழ்த்து) வச 1-2 466
2. போலிப் போதகர்கள் வச 3-16 466 - 467
3. விசுவாசத்தைக் காக்குமாறு

எச்சரிக்கையும் அறிவுரையும்

வச 17-23 467
4. முடிவுரை வச 24-25 467

ஆதாரங்கள்

  1. யூதா எழுதிய திருமுகம்
  2. கத்தோலிக்க கலைக் களஞ்சியம் - யூதா திருமுகம்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.