இரண்டாம் கோவில்

இரண்டாம் கோவில் (யூதம்) (Second Temple) என்பது எருசலேம் நகரில் "கோவில் மலை" (Temple Mount) என்னும் இடத்தில் கி.மு. 516இலிருந்து கி.பி. 70 வரை நிலைபெற்றிருந்த யூத வழிபாட்டிடம் ஆகும்.[1]

யூத சமயத்தின் இரண்டாம் கோவிலைப் புதுப்பித்து, விரிவாக்கி ஏரோது மன்னன் கட்டிய கோவிலின் மாதிரி உரு. காப்பிடம்: இசுரயேல் காட்சியகம்.

இக்கோவில் கட்டப்படுவதற்கு முன், அது இருந்த இடத்தில் முதல் கோவில் என்று யூதர்களால் அழைக்கப்பட்ட் சாலமோனின் கோவில் இருந்தது. அந்த முதல் கோவில் கி.மு. 586ஆம் ஆண்டில் இரண்டாம் நெபுகத்னேசார் என்னும் பாபிலோனிய மன்னரால் அழிக்கப்பட்டு, யூத மக்கள் இனம் நாடுகடத்தப்பட்டது.

முதல் கோவிலும் இரண்டாம் கோவிலும் யூதர்களின் சமய வாழ்வில் பெருமுக்கியத்துவம் வாய்ந்தன.

கோவில் கட்டப்பட்ட வரலாற்றுச் சுருக்கம்

கி.மு. 538ஆம் ஆண்டு பெர்சிய மன்னர் சைரசு (CYRUS the Great )என்பவர் பாபிலோனியரை முறியடித்தார். பாபிலோனியரின் ஆட்சியின் கீழ் நாடுகடத்தப்பட்டிருந்த யூதர்கள் தம் நாடு திரும்பலாம் என்றும், அழிக்கப்பட்ட எருசலேம் கோவிலை மீண்டும் கட்டலாம் என்றும் சைரசு ஆணை பிறப்பித்தார்.[2]

70 ஆண்டுகள் பாபிலோனிய அடிமைத்தனத்தின் கீழ் இருந்து சொந்த நாடு திரும்பிய யூதர்கள், சாலமோனின் கோவில் என்ற முதல் கோவில் இருந்த அதே இடத்தில் புதியதொரு கோவில் கட்டத் தொடங்கினர் (காண்க: எஸ்ரா 1:1-4; 2 குறிப்பேடு 36:22-23; தானியேல் 9:1- 2).

யூதர்கள் பாபிலோனியாவுக்கு நாடுகடத்தப்பட்ட காலத்தில் எருசலேமில் தங்கியிருந்தவர்கள் புதிய கோவில் கட்டுவதற்குத் தடையிட்டதைத் தொடர்ந்து கோவில் வேலை சிறிது காலம் (16 Years) நிறுத்தப்பட்டது.

மீண்டும் கோவில் கட்டட வேலை கி.மு. சுமார் 521இல், பாரசீக மன்னன் இரண்டாம் டாரியுஸ் என்பவரின் ஆட்சிக் காலத்தில் தொடர்ந்தது. அம்மன்னனின் 16ஆம் ஆட்சியாண்டில் கோவில் வேலை நிறைவுற்றது (கி.மு. 518/517). அடுத்த ஆண்டு கோவில் அர்ப்பணம் நிகழ்ந்தது.

கி.மு. 19ஆம் ஆண்டளவில் பெரிய ஏரோது மன்னன் எருசலேம் கோவிலைப் புதுப்பித்து விரிவுபடுத்தினார். எனவே அக்கோவிலுக்கு "ஏரோதின் கோவில்" (Herod's Temple) என்னும் பெயர் ஏற்பட்டது.

உரோமையர்களின் ஆட்சிக்காலத்தில் டைட்டஸ் என்னும் தளபதி யூத கலகத்தை அடக்க நீரோவால் அனுப்பப்பட்டார். டைட்டஸ் எருசலேமை முற்றுகையிட்டு, அந்நகரையும் அங்கிருந்த கோவிலையும் கி.பி. 70இல் தரைமட்டமாக்கினார். இன்று கோவிலின் மேற்குச் சுவரின் அடிப்பகுதி மட்டுமே எஞ்சியிருக்கிறது.[3]

இரண்டாம் கோவில் கட்டப்படுதல்

2.43x1 மீட்டர் அளவிலான கல்லில் எபிரேய மொழியில் "எக்காளம் ஊதும் இடத்திற்கு" என்னும் சொற்றொடர் உள்ளது. கோவில் மலையின் தெற்கு அடிவாரத்தில் பெஞ்சமின் மாசார் என்பவரால் கண்டெடுக்கப்பட்ட இக்கல் இரண்டாம் கோவிலின் பகுதியாக இருக்கக்கூடும்.

ஆதாரங்கள்

  1. இரண்டாம் கோவில்
  2. Samuelson, Norbert Max. Revelation and the God of Israel, Cambridge University Press, 2002. pg. 226. ISBN 052181202X
  3. Porter, J.R. The Illustrated Guide to the Bible, Oxford University Press US, 1998. pg. 91. ISBN 0195214625

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.