காஞ்சிபுரம் புண்ணியகோடீசுவரர் கோயில்

காஞ்சிபுரம் புண்ணியகோடீசுவரர் கோயில் (புண்ணியகோடீசம்) என்று அறியப்படும் இது காஞ்சிபுரத்திலுள்ள சிவன் கோயில்களில் ஒன்றாகும். மேலும் திருமால், மற்றும் கசேந்திரன் எனும் யானையும் வழிப்பட்டதாக கூறப்படும் இக்கோயில் பற்றிய குறிப்புகள் காஞ்சிப் புராணத்தில் தனிப்படலமாகச் சொல்லப்பட்டு காணப்படுகிறது.[1]

காஞ்சிபுரம் புண்ணியகோடீசம்.
பெயர்
பெயர்:காஞ்சிபுரம் புண்ணியகோடீசம்.
அமைவிடம்
ஊர்:காஞ்சிபுரம்
மாவட்டம்:காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு: இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:புண்ணியகோடீசுவரர்.

இறைவர், வழிபட்டோர்

  • இறைவர்: புண்ணியகோடீசுவரர்
  • வழிபட்டோர்: திருமால், கஜேந்திரன் யானை.

தல வரலாறு

இத்தலத்திலுள்ள தீர்த்தத்தில் (குளத்தில்) நீராடி இவ்விறைவனை வழிபட்டால், வழிபட்ட புண்ணிய பலன் பன்மடங்கு பெருகுமென்று சொல்லப்படுகிறது. ஆதலினால் இக்கோயில் புண்ணியகோடீசம் எனப்பட்டது.

திருமால் மேகவடிவில் இவ்விறைவனை தாங்கி வழிபட்டமையால், அவருக்கு பணிசெய்த கஜேந்திரன் யானையை, இறைவன் முதலையின் பிடியிலிருந்து மீட்டார், அவ்யானையோடு திருமால் காஞ்சிக்கு வருகைத்தந்து இவ்விறைவனை வழிபட்டார். மனமகிழ்ந்த இறைவன் திருமால் முன் தோன்றி அவருக்கு வேண்டிய வரங்களை கொடுத்தருளினார். அவ்வரங்களால் திருமால் "வரதன்" (வரதராசபெருமாள்) என்னும் நாமத்தையும், அவர் தங்கிய இடம் யானையின் பெயரால் (அத்தி-யானை) அத்திகிரி என்னும் பெரும்பெயர் பெற்று சிறப்புற்றதாக இத்தல வரலாறு காணப்படுகிறது.[2]

தல விளக்கம்

புண்ணியகோடீசர், தல விளக்கத்தின்படி, திருமால் பிரமனையும் பதினான்கு உலகங்களையும் படைக்க விரும்பித் தனக்குப் பொற்றாமரைப் பொய்கையினின்றும் மலர் பறித்துதவிய கசேந்திரன் என்னும் யானை ஆதிமூலம் என்றலறப் பற்றிய முதலையைச் சக்கரத்தால் பிளந்து அவ்வியானையைக் காத்து அதன் பூத்தொண்டினைக் கொண்டு சிவபிரானை அருச்சித்து ஆங்குச் செய்யப்படும் புண்ணியம் ஒன்று கோடியாகவும் ‘வரதா வரதா’ என இறைவனைப் பலமுறை எதிரெழுந்தருள்கையில் போற்றி, வரதராசன் என்னும் திருப்பெயர் தனக்கு உண்டாகவும் வரம் அருளப்பெற்ற திருத்தலம். சின்ன காஞ்சிபுரம் அமுதுபடித் தெருவின் பின்னுள்ளது இது.[3]

அமைவிடம்

தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரத்தில் விஷ்ணுகாஞ்சி என்றழைக்கப்படும், சிறிய காஞ்சிபுரத்தின் கிழக்கு பிராந்திய செட்டிதெருவின் கடைக்கோடியிலுள்ள, வரதராசபெருமாள் கோயிலின் சற்றுமுன்னர் தென்திசையில் சதாவரம் செல்லும் சாலையில் இக்கோயில் அமைந்துள்ளது. மேலும் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்துநிலையத்திலிருந்து செங்கல்பட்டு செல்லும் சாலையில் சுமார் 3 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[4]

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.