திருச்செங்கோடு

திருச்செங்கோடு (ஆங்கிலம்:Tiruchengode), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். மக்கள்தொகையில் இதுவே இம்மாவட்டத்தின் பெரிய நகரம் ஆகும். இங்குள்ள மலை செந்நிறத்தில் உள்ளதால் இவ்விடம் திருச்செங்கோடு எனப்பெயர் பெற்றது.

திருச்செங்கோடு
  நகரம்  
திருச்செங்கோடு
இருப்பிடம்: திருச்செங்கோடு
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 11°23′N 77°54′E
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் நாமக்கல்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் கே. மேக்ராஜ், இ. ஆ. ப.
ஆணையர் எம். இளங்கோவன்
மக்கள் தொகை

அடர்த்தி

80,177 (2001)

3,182/km2 (8,241/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 25.2 சதுர கிலோமீட்டர்கள் (9.7 sq mi)
இணையதளம் www.municipality.tn.gov.in/tiruchengode

வரலாறு

பழங்காலத்தில் இந்நகர் திருக்கொடிமாடச் சென்குன்றனூர் எனவும், திருச்செங்கோட்டாங்குடி எனவும் பெயர் பெற்றது. சம்பந்தரின் தேவாரப்பாடலிலும் அவ்வாறே கூறப்பட்டுள்ளது [3]. இது இடைக்கால வரலாற்றில் கீழ்க்கரைப் பூந்துறைநாடு என்னும் நாட்டுப் பிரிவில் அடங்கியிருந்தது. [4] இது கொங்கு மண்டல சதகம் பாடல் 28-ல் செங்கோடை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. திருவள்ளுவமாலை பாடல்களில் ஒன்றைப் பாடிய புலவர் மதுரைத் தமிழாசிரியர் செங்குன்றூர் கிழார் இந்த ஊரில் பிறந்தவர் என்று அந்தப் பாடல் குறிப்பிடுகிறது. [5] [6]

இது கொங்கு நாட்டிலுள்ள ஏழு சிவ தலங்களில் ஒன்றாகும். இது கொங்கு நாட்டைச்சேர்ந்த கீழ்கரை பூந்துறை நாட்டை சார்ந்தது ஆகும். காவிரியின் மேற்குப்புறம் உள்ளது. மேல்கரை பூந்துறை நாடாகும், காவிரியின் கிழக்குப்புறம் உள்ளது கீழ்பூந்துறை நாடாகும். சிலப்பதிகாரத்தில் இந்நகர் நெடுவேல் குன்று என கூறப்பட்டுள்ளது. மலை மீதுள்ள முருகனை அருணகிரிநாதர் தன் திருப்புகழில் பாடியுள்ளார்[7]. கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம் முதலியவைகளில் இவ்விடம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நகருக்கு தெய்வத்திருமலை, நாகமலை, உரசகிரி, நாககிரி எனப் பல பெயர்களும் உள்ளது.

திருஞானசம்பந்தர் அருளிய தேவாரப் பாடல் "வெந்தவெண் ணீறணிந்து" முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. அதன் முதல் செய்யுள்:

வெந்த வெண்ணீறு அணிந்து விரிநூல் திகழ்மார்பில் நல்ல

பந்து அணவும் விரலாள் ஒருபாகம் அமர்ந்து அருளிக்
கொந்து அணவும் பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
அந்தணனைத் தொழுவார் அவலம் அறுப்பாரே.

கோயில்

செந்நிறத்தில் அமைந்த மலையின் உச்சியில் கிழக்கு நோக்கி செங்கோட்டு வேலவர் சன்னதி உள்ளது. மேற்கு நோக்கி அர்த்தநாரீஸ்வரர் எனப்படும் மாதொரு பாகர் சன்னதி அமைந்துள்ளது. மாதொரு பாகர் லிங்க வடிவில் அல்லாமல் 6 அடி முழு திருமேனியுடன் காட்சியளிக்கிறார். பாதி புடவை - பாதி வேட்டி அலங்காரத்துடன் மூலவர் (சிவன்) காட்சி தருகிறார். முழு வடிவமும் வெள்ளைப் பாசாணத்தால் ஆனது.

இம்மலைக்கோயில் சிவனுக்குரியதாக சொல்லப்பட்டாலும் இங்கு திருமாலுக்கும் கோயில் உள்ளது. இங்குள்ள ஆதிகேசவ பெருமாள் சன்னிதி, நம்மாழ்வாரால் மங்களா சாசனம் செய்யப்பட்டதாகும்.

இம்மலை மீது ஏற 1250 படிக்கட்டுகள் கொண்ட பாதை உள்ளது. தற்போது மலை மீது ஏற சாலை வசதி செய்யப்பட்டுள்ளதால் வாகனங்கள் மூலம் இதனை அடையலாம். படிக்கட்டுகள் வழியே மலைக்குச் செல்லும் வழியில் பாறையில் செதுக்கப்பட்டுள்ள நாகர் சன்னிதி மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு முதலில் அமைந்தது முருகனுக்கான கோயில் ஆகும். அதையொட்டியே இந்நகரின் பெயர் அமைந்துள்ளதை கவனிக்கலாம்.

திருச்செங்கோடு மலைமீதுள்ள மாதொரு பாகர் கோயில்

அமைவிடம்

திருச்செங்கோடு ஈரோடிலிருந்து 18 கிமீ தொலைவிலும் சேலத்திலிருந்து 45 கிமீ தொலைவிலும் நாமக்கலிருந்து 32 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.

தொழில்

திருச்செங்கோடு ஆழ்துளை கிணறு வெட்டும் ரிக் எனப்படும் வண்டிகள் நிறைந்த இடமாகும். ஆழ்துளை கிணறு வெட்டும் வண்டியை சார்ந்த தொழில்கள் இங்கு அதிகம். இங்கு விசைத்தறிக் கூடங்கள், சைசிங்க் ஆலைகள், நூற்பு ஆலைகள், லாரி கூடு கட்டும் தொழில், விவசாயம் ஆகியவை அதிகளவில் உள்ளன.

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 80,177 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[8] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். திருச்செங்கோடு மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 65% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விடக் கூடியது. திருச்செங்கோடு மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

2011 உள்ளாட்சி தேர்தல்

2011ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவின் பொன். சரஸ்வதி வெற்றி பெற்று நகரவை தலைமைப்பதவியை கைப்பற்றினார்.

வேட்பாளர்கட்சிபெற்ற வாக்குகள்
சரவணசுந்தரம் ச.சுயேச்சை9269
சரஸ்வதி. பொன்அதிமுக22874
தங்கவேலு. செ.காங்கிரசு684
நடேசன். இராதிமுக11656
நாகராஜன். சி.பாஜக621
மணி. ரா.மதிமுக335
மனோகரன். த.தேமுதிக4003
முருகன். ந.சுயேச்சை397
லோகநாதன். தி.ரா.பாமக457

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. http://www.shaivam.org/siddhanta/sp/spt_p_cengunrur.htm
  4. கொங்கு மண்டல சதகம், பாடல் 13, பக்கம் 12, முனைவர் ந ஆனந்தி உரை
  5. கொங்கு மண்டல சதகம், முனைவர் ந. ஆனந்தி உரை, பக்கம் 28, 29
  6.  நிலவுலகத்தில் பலகலை தேர்ந்த நிபுணருளே
    புலவர் திருவள்ளுவரென நேயம் பொருந்த உரை
    குலவும் மதுரைத் தமிழாசிரியர் செங்குன்றூர்கிழார்
    வலிமை உறவரும் செங்கோடையும் கொங்கு மண்டலமே. 28

  7. http://www.shivatemples.com/knaadut/thiruchengode.
  8. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.