மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் என்பது வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள கோயில் நகரமான மதுரையின் மத்தியில் அமைந்துள்ள சிவாலயமாகும். இச்சிவாலயத்தின் மூலவர் சுந்தரேசுவரர் மற்றும் அம்பிகை மீனாட்சியம்மன். இக்கோயிலை மதுரை மீனாட்சியம்மன் கோயில் என்றும் அழைக்கின்றனர். இக்கோயிலே தமிழகத்தில் உள்ள 366 மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்களின் மூலக் கோயிலாக உள்ளது. இத்தலத்தில் முதல் பூசை அம்பிகை மீனாட்சிக்கே செய்யப்படுகிறது.
தேவாரம் பாடல் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் | |
---|---|
![]() | |
புவியியல் ஆள்கூற்று: | 9.919444°N 78.119444°E |
பெயர் | |
புராண பெயர்(கள்): | திருவாலவாய்[1], சிவராஜ தானி, பூலோக கயிலாயம், கடம்ப வனம், நான்மாடக் கூடல், சிவ நகரம், துவாதசாந்தத் தலம், சமட்டி வித்தியாபுரம், கன்னியாபுரம் |
பெயர்: | மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | மதுரை |
மாவட்டம்: | மதுரை |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | சுந்தரேஸ்வரர் (சோமசுந்தரர், சொக்கலிங்கநாதர், சொக்கேசர், ஆலவாய் அண்ணல், சொக்கநாதர்) |
தாயார்: | மீனாட்சி (அங்கயற்கண்ணி, தடாதகை பிராட்டி, பச்சைதேவி, மரகதவல்லி, தடாதகை, அபிசேகவல்லி, அபிராமவல்லி, கயற்கண்குமாரி, கற்பூரவல்லி, குமரித்துறை யவள், கோமகள், சுந்தரவல்லி, பாண்டிப் பிராட்டி, மதுராபுரித் தலைவி, மாணிக்க வல்லி, மும்முலைத்திருவழுதி மகள்) |
தல விருட்சம்: | கடம்ப மரம் |
தீர்த்தம்: | பொற்றாமரைக்குளம், வைகை ஆறு, கிருதமாலை, தெப்பக்குளம், புறத்தொட்டி |
ஆகமம்: | காரண ஆகமம் |
சிறப்பு திருவிழாக்கள்: | சித்திரைத் திருவிழா |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
கோயில்களின் எண்ணிக்கை: | 27 |
வரலாறு | |
தொன்மை: | 2000 முதல் 3000 வருடங்கள் |
வலைதளம்: | http://www.maduraimeenakshi.org |
சிதம்பரம், காசி, திருக்காளத்தி வரிசையில் முக்கியமான 4வது தலமாக திருவாலவாய் உள்ளது.[2] இந்த நகரம் புராண காலத்தில் திருவாலவாய் என்று அழைக்கப்பட்டுள்ளது. இந்த தலத்தின் பெயரைக் கேட்டதுமே பேரின்ப நிலை கிடைக்கும்.[2] அதனால் சிவபெருமானுடைய முக்தி தலங்களுள் ஒன்றாகவும் கருதப்படுகிறது. இத்தலத்தினை சிவன் முக்திபுரம் என்றும் அழைக்கின்றனர்.[2] இத்தலம் முக்கியமான சிவதலமாக மட்டும் இல்லாமல், அம்பிகையின் 51 சக்தி பீடங்களுள் ஒன்றாகும்.[2] இதனை ராஜமாதங்கி சியாமள பீடம் என்று அழைக்கின்றனர்.[2] இத்தலம் 18 சித்தர்களில் ஒருவரான சுந்தரானந்தரின் சித்தர் பீடமாகவும் உள்ளது. விநாயகரின் அறுபடை வீடுகளில் நான்காவது படைவீடாகவும், சிவபெருமான் மீது பாடப்பெற்ற தேவாரப்பாடல் பெற்ற 274 வது சிவாலயமாகவும், 192வது தேவாரத்தலமாகவும் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.
தேவலோகத்தின் அரசனான இந்திரனால் இக்கோயில் கட்டப்பட்டது என்பது நம்பிக்கை. இராமர், லட்சுமணர், வருணன், இந்திரன், தேவர்கள் மற்றும் முனிவர்கள் போன்றவர்களால் இச்சிவாலயம் வழிபடப்பட்டுள்ளது. இத்தலத்தில் தரப்படுகின்ற பிரசாதமான தாழம்பூ குங்குமம் பிரசிபெற்றதாகும்.[2]

சொல்லிலக்கணம்
2500 வருடங்கள் பழமையான மதுரை நகரானது தமிழ் இலக்கிய வரலாற்றிலும், இந்து சமய வரலாற்றிலும் முக்கியத்துவமானது. மதுரை நகரானது திருவாலவாய் ,சிவராஜ தானி, பூலோக கயிலாயம், கடம்ப வனம், நான்மாடக் கூடல், சிவ நகரம், துவாதசாந்தத் தலம், சமட்டி வித்தியாபுரம், கன்னியாபுரம் ஆகிய பெயர்களில் அழைக்கப்பட்டுள்ளது.
மதுரை திருபாற்கடலை கடைந்த போது நாகம் உமிழ்ந்த விஷத்தை இறைவன் அமுததாக மாற்றி மதுரமாக்கினமையால் இத்தலம் மதுரை என்று பெயர் பெற்றதென்பர்.
நான்மாடக்கூடல் மதுரையை அழிக்க வருணன் ஏவிய ஏழு மேகங்களையும் தடுக்கும் பொருட்டு சிவபெருமான் தன் சடையிலிருந்து விடுத்த நான்கு மேகங்களும் நான்கு மாடங்களாகக் கூடி மதுரையைக் காத்ததால் நான்மாடக்கூடல் என்ற பெயரும் மதுரைக்கு உண்டு என்கிறார்கள் சிலர்.
ஆலவாய் சிவபெருமானின் அணிகலன்களில் ஒன்றான பாம்பு வட்டமாக தன் வாலை வாயினால் கவ்விக் கொண்டு இத்தலத்தின் எல்லையைக் காட்டியதால் ஆலவாய் என்ற பெயர் இத்தலத்திற்கு ஏற்பட்டது என்று ஒரு வரலாறு கூறுகிறது.
தலவரலாறு

விருத்திராசூரனை கொன்றமையால் இந்திரனுக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க கடம்பவனத்தில் இருந்த இந்த சிவலிங்கத்தை பூசித்து தனது தோஷத்தை போக்கிக் கொண்டதாகவும் ஒரு வரலாறு கூறுகிறது.

முதன் முதலில் கடம்பவனக் காட்டில் சுயம்பு லிங்கத்தை கண்டறிந்து முதலில் இந்த கோவிலையும், பின் மதுரை நகரத்தையும் அந்த மன்னன் நிர்மாணித்ததாக வரலாறு என்கிறார்கள் சிலர். கடம்பவனமாக இருந்த காட்டை அழித்து அழகிய நகரமாக்கும்படி பாண்டிய நாட்டை ஆட்சி புரிந்து வந்த குலசேகர பாண்டியனின் கனவில் சிவபெருமான் தோன்றிக் கூறியதால் அம்மன்னன் கடம்பவனக் காட்டை அழித்து மதுரை எனும் அழகிய நகரத்தை உருவாக்கினான். சிவபெருமான் தன் சடையிலுள்ள சந்திரனின் அமுதத்தைச் சிந்தி புதிய நகருக்கு ஆசி வழங்கினார் என்று வரலாறு கூறுகிறது. இக்கோயில் அம்மனின் 248 சக்தி பீடங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.
சன்னதிகள்
மூலவர்
இத்தலத்தின் மூலவர் சுந்தரேசுவரர். இவர் சுயம்பு மூர்த்தியாவார். இவரை சோமசுந்தரர், சொக்கலிங்கநாதர், சொக்கேசர், ஆலவாய் அண்ணல், சொக்கநாதர் எனவும் அழைக்கின்றனர். இவரை வழிபட்டு இந்திரன் தன்னுடைய பாவத்தினை தீர்த்திக் கொண்டான். அதனால் சுயம்பு லிங்கத்திற்கு கோயில் எழுப்பினான். மூலவர் விமானம், இந்திர விமானம் என்று அழைக்கப்படுகிறது.[2]
அம்பாள் சன்னதி
இத்தளத்தின் அம்பாள் மீனாட்சியம்மனாவார்.[3] இவரது விக்கிரகம் மரகதக் கல்லால் ஆனது.[3] அம்பாள் மீனாட்சியின் கருவறையானது 32 சிங்கங்களும், 64 சிவ கணங்களும், 8 கல்யானைகளும் தாங்கி நிற்கும் அபூர்வமானதாகும்.[2] இந்த கருவறை விமானத்தை தேவேந்திரன் அமைத்தான். மீன் போன்ற கண்களைப் பெற்றவர் என்பதால் மீனாட்சி என்று பெயர் பெற்றார். தன்னுடைய முட்டைகளை மீன் பார்வையாலேயே தன்மயமாக்குவது போல பக்தர்களை அருட் கண்ணால் நோக்கி அருள்பாலிக்கிறவள்.[3] மீனாட்சியம்மன் திருக்கோலத்தில் கிளியும் இடம்பெற்றள்ளது.[2] பக்தர்களின் கோரிக்கையை அம்பிகைக்கு நினைவூட்ட திரும்ப திரும்ப கிளி சொல்லிக் கொண்டிருப்பத நம்பிக்கையுள்ளது. இந்திரன் சாபவிமோசனத்திற்காக இத்தலத்தினை தேடி வந்தபோது கிளிகளே சிவவழிபாட்டிற்கு உதவி செய்தன.[2]
இவருக்கு பச்சைதேவி, மரகதவல்லி, தடாதகை, அபிசேகவல்லி, அபிராமவல்லி, கயற்கண்குமாரி, கற்பூரவல்லி, குமரித்துறை யவள், கோமகள், சுந்தரவல்லி, பாண்டிப் பிராட்டி, மதுராபுரித் தலைவி, மாணிக்க வல்லி, மும்முலைத்திருவழுதி மகள் போன்ற எண்ணற்றப் பெயர்கள் உள்ளன.[3] மீனாட்சியை அங்கயற்கண்ணி என தமிழில் அழைக்கின்றனர். இவரை தடாதகை பிராட்டி என்றும் அழைப்பதுண்டு. இவர் மதுரையின் அரசியாக இருப்பதால், இவருக்கு நடக்கும் அபிசேகங்களைப் பார்க்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை. மீனாட்சியம்மனை அலங்காரம் செய்த பிறகே பக்தர்கள் பார்க்க முடியும்.[3] இத்தலத்தில் முதல் பூசை அம்பிகை மீனாட்சிக்கே செய்யப்படுகின்றன. அதன்பின்பே மூலவரான சிவபெருமானுக்கு பூசைகள் செய்யப்படும். இதற்கு மீனாட்சியம்மன் பதிவிரதையாக இருந்து எப்போதுமே தன்னுடைய கணவனுக்கு தொண்டு செய்ய எண்ணியுள்ளார். அதனால் கணவரை எழுப்பும் முன்பே மனைவியான அம்பிகை அபிசேகத்தினை முடித்து தயாராகிறாள். இதனால் காலையில் முதல் பூசை மீனாட்சிக்கு செய்யப்படுகிறது.[2]
பிற சன்னதிகள்
கோயிலின் அமைப்பு

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இக்கோயில் எட்டு கோபுரங்களையும் இரண்டு விமானங்களையும் உடையது. இங்குள்ள கருவறை விமானங்கள், இந்திர விமானம் என்று அழைக்கப்படுகிறது. 32 சிங்கங்களும், 64 சிவகணங்களும், 8 வெள்ளை யானைகளும் இந்த கருவறை விமானங்களைத் தாங்குகின்றன.
இத்திருக்கோயில் கிழக்கு மேற்காக 847 அடியும், தெற்கு வடக்காக 792 அடியும் உடையது. இக்கோவிலின் ஆடி வீதிகளில் நான்கு புறமும் ஒன்பது நிலைகளை உடைய நான்கு கோபுரங்கள் மிக உயர்ந்த நிலையில் இருக்கிறது. இவற்றுள் கிழக்குக் கோபுரம் கி.பி. 1216 முதல் 1238 ஆண்டுக்குள்ளும், மேற்குக் கோபுரம் கி.பி. 1323 ஆம் ஆண்டிலும், தெற்கு கோபுரம் கி.பி. 1559 ஆம் ஆண்டிலும், வடக்குக் கோபுரம் கி.பி. 1564 முதல் 1572 ஆம் ஆண்டிலும் கட்டப்பெற்று முடிக்கப்பெறாமல், பின்னர் 1878 ஆம் ஆண்டில் தேவகோட்டை நகரத்தார் சமுதாயத்தைச் சேர்ந்த வயிநாகரம் குடும்பத்தினரால் முடிக்கப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது. இவற்றுள் தெற்குக் கோபுரம் மிக உயரமானதாகும். இதன் உயரம் 160 அடியாக இருக்கிறது.
மீனாட்சி அம்மன் கோபுரம் காளத்தி முதலியாரால் கி.பி. 1570-ல் கட்டப் பெற்று 1963 ஆம் ஆண்டில் சிவகங்கை அரசர் சண்முகத்தால் திருப்பணி செய்யப் பெற்றது. சுவாமி கோபுரம் கி.பி. 1570 ஆம் ஆண்டில் கட்டப் பெற்று திருமலைகுமரர் அறநிலையத்தால் திருப்பணி செய்யப் பெற்றது. இக்கோயிலினுள் ஒரு ஏக்கர் பரப்பளவில் பொற்றாமரைக்குளம் அமைக்கப்பட்டுள்ளது.


கலையழகு மிக்க மண்டபங்கள்
கோயிலின் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் ஒவ்வொரு மண்டபத்திற்கும் வேறுபட்டு அழகிய நுணுக்கங்களைக் கொண்டும் தனித்தனிச் சிறப்புகளையும் உள்ளடக்கியுள்ளன.
- அஷ்டசக்தி மண்டபம்,
- மீனாட்சி நாயக்கர் மண்டபம்,
- முதலி மண்டபம்,
- ஊஞ்சல் மண்டபம்,
- கம்பத்தடி மண்டபம்,
- கிளிக்கூட்டு மண்டபம்
- மங்கையர்க்கரசி மண்டபம்,
- சேர்வைக்காரர் மண்டபம்
- திருகல்யாண கல்யாண மண்டபம்
போன்ற கலையழகு மிக்க மண்டபங்கள் இருக்கின்றன.
அஷ்டசக்தி மண்டபம்
மீனாட்சி அம்மன் சந்நிதியின் முன்பகுதியாக எட்டு சக்தி (அஷ்டசக்தி) மண்டபம் அமைந்துள்ளது. வாயிலில் விநாயகர், முருகன் உருவங்களுக்கு இடையே மீனாட்சி கல்யாணம் கதை வடிவில் காட்சி அளிக்கிறது. உள்ளே மண்டபத்தில் அமைந்துள்ள தூண்களில் எட்டு சக்தியின் வடிவங்கள் அழகுற அமைந்துள்ளன.
கம்பத்தடி மண்டபம்
கம்பத்தடி மண்டபத்திலுள்ள சிற்பங்கள் சிவனின் பல்வேறு வடிவங்களைக் கொண்டுள்ளன. மீனாட்சி திருக்கல்யாணச் சிற்பம் உலகப் புகழ் பெற்றதாகும். கம்பத்தடி மண்டபம் நாயக்க மன்னர் முதலாம் கிருஷ்ணப்பர் காலத்தில் (1564–1572) கட்டப்பட்டுப் பின் நாட்டுக்கோட்டை நகரத்தார்களால் புதுப்பித்துத் திருப்பணி செய்யப்பட்டது (1877). சுவாமி சந்நிதி முன்னுள்ள நந்தி மண்டபம் ஒரே கல்லினாலானது. இது விஜயநகர காலப் பணியாகும்.
அடுத்து உள்ள மீனாட்சி நாயக்கர் மண்டபத்தைத் தாண்டி உள்ளே சென்றால் இத்தலத்தின் இறைவி மீனாட்சி அம்மையின் சந்நிதி இருக்கிறது. கருவறையில் அம்மை இரண்டு திருக்கரங்களுடன் ஒரு கையில் கிளியை ஏந்தி அருட்காட்சி தருகிறார். சுவாமி சந்நிதியில் கருவறையில் இறைவன் சுந்தரேசுவரர் சிவலிங்கத் திருமேனியாக அருட்காட்சி தருகிறார்.
ஆயிரங்கால் மண்டபம்



ஆயிரங்கால் மண்டபம் இக்கோயிலில் சுவாமி சன்னதியின் இடப்புறத்தில் அமைந்தள்ளது. இம்மண்டபம் கோயிலில் உள்ள பிற மண்டபங்களைவிட அளவில் பெரியது. ஆயிரங்கால் மண்டபம், கிருஷ்ண வீரப்ப நாயக்கரது]] திருப்பணியாகும்.[4][5]
மிகச் சிறப்பு பெற்ற இம்மண்டபம் சாலிவாகன ஆண்டு, 1494ஆம் ஆண்டில் மதுரையை அரசாண்ட முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கர் காலத்தில் அவருடைய அமைச்சர் அரியநாத முதலியாரால் அமைக்கப்பட்டது. மண்டப வாயிலின் மேல் விதானத்தில் தமிழ் ஆண்டுகள் அறுபதையும் குறிக்கும் சக்கரம் செதுக்கப்பட்டுள்ளது. இம்மண்டபத்தில் சிற்பங்கள் நிறைந்த 985 தூண்கள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. இத்தூண்களை எந்த கோணத்தில் நின்று பார்த்தாலும் ஒரே வரிசையில் அமைந்திருக்கும் காட்சி வியப்பானது. 15 தூண்கள் இருக்குமிடத்தில் சபாபதி சன்னதி அமைந்துள்ளது. ஆயிரம்கால் மண்டபத்தின் தூண்கள் ஒவ்வொன்றும் அழகாக செதுக்கப்பட்டு, 73 × 76 மீட்டர் நீள, அகலமுள்ள கூரையைத் தாங்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளன. மண்டபத்தில் இன்னிசை ஒலி எழுப்பும் 22 தூண்கள் அமைந்துள்ளன. இம்மண்டபம், கோயில் அருங்காட்சியமாக மாற்றப்பட்டு பல்வேறு காலத்திய சிற்பங்கள், ஓவியங்கள், பரதக்கலை முத்திரைகள், இசைத்தூண்கள் என பல்வேறு சிறப்புப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஆயிரங்கால் மண்டபம் கோயிலின் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டதால், உள்ளே நுழைய நுழைவுக் கட்டணம் மற்றும் புகைப்படக் கருவிகள் கொண்டு புகைப்படம் எடுப்பதற்கு தனியாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
புதுமண்டபம்
கோயிலின் கிழக்குக் கோபுரத்திற்கு எதிரே 124 சிற்பத்தூண்கள் அடங்கிய புது மண்டபம் ஒன்றும் உள்ளது. (இந்த புது மண்டபம் முழுவதும் சிறு வணிகக்கடைகளாக அமைக்கப்பட்டு உள்ளது.)
இசைத் தூண்கள்
மீனாட்சியம்மன் கோயிலின் வடக்கு ஆடி வீதியில் கல்லில் இசைபாடும் 5 இசைத் தூண்கள், ஆயிரம் கால் மண்டபத்தில் இரு இசைத் தூண்கள் ஆக மொத்தம் 7 இசைத் தூண்கள் மீனாட்சி கோவிலில் உள்ளன.
தெருக்களுக்கு தமிழ் மாதப் பெயர்கள்
மதுரை மீனாட்சியம்மன் கோயிலை தாமரை மொட்டைப் போல் வைத்துக் கொண்டால் அதைச் சுற்றியுள்ள தெருக்களை தாமரை இதழ்களாகக் கூறலாம்.
மீனாட்சியம்மன் கோயிலுக்குள் இருக்கும் வீதிகளுக்கு ஆடி வீதி என்று பெயர். அதைத் தாண்டி கோயிலுக்கு வெளியில் சித்திரை வீதிகள், சித்திரை வீதிகளுக்கு அடுத்த வீதிகள் ஆவணி வீதிகள், அதைத் தாண்டி வெளியே வந்தால் மாசி வீதிகள். அதையும் தாண்டி வெளி வீதிகள் என மதுரை நகர் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தத் தெருக்களுக்கு தமிழ் மாதங்களின் பெயர் வைக்கப்பட்டிருப்பதற்கும் ஒரு காரணம் உள்ளது. மன்னர்கள் காலத்தில் குறிப்பிட்ட மாதங்களில் நடைபெறும் விழாக்கள் அந்த மாதங்களின் பெயரிலான தெருக்களில்தான் நடைபெறும்.
சிறப்பு விழாக்கள்

கோயில் 1858 புனரமைப்பின் போது
மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் சித்திரைத் திருவிழா, முடிசூட்டுவிழா, திக்விஜயம், திருக்கல்யாணம், தேரோட்டம், புட்டுத் திருவிழா ஆகியவை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மேலும் இந்தக் கோயிலில் தமிழ் மாதம் ஒவ்வொன்றிலும் சிறப்பு விழாக்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
சித்திரை
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் சித்ரா பௌர்ணமி விழா கொண்டாடப்பட்டாலும், மதுரையில் தான் சித்ரா பௌர்ணமி விழா சிறப்பாக கருதப்படுகிறது. ஒருமுறை விருத்திராசூரன், விஸ்வரூபன் என்ற இருவரை இந்திரன் கொன்றான். அவர்கள் பிறப்பால் அந்தணர்கள் ஆனதால் இந்திரனை பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக் கொண்டது. அதிலிருந்து விடுபட தன் குருவை நாடி உபாயம் கேட்டான். குருபகவான் அவனிடம் பூலோகம் சென்று பல்வேறு சிவஸ்தலங்களில் வழிபட்டால் ஓரிடத்தில் உன் கெடுதல் நீங்கும் என்று கூறினார். அதன்படி இந்திரன் காசி முதலிய பல ஸ்தலங்களில் வழிபட்டு தெற்கு நோக்கி வந்தான். ஓரிடத்தில் கடம்ப மரத்தின் கீழ் சென்றவுடன் தன்னைப் பற்றியிருந்த தோஷம் விலகக் கண்டான். இந்திரன் மகிழ்ச்சியடைய அவன் முன் கடம்ப மரத்தடியில் சிவபெருமான் திருஆலவாய் சோமசுந்தரர் அவனுக்கு காட்சி கொடுத்தார். இந்திரன் சிவபெருமானுக்கு கோவில் கட்ட நினைத்து தேவலோகத்தில் இருந்து ஒரு விமானம் வரவழைத்தான். இத்தலத்து இறைவனுக்கு இந்திரன் விமானம் அமைத்ததால் அதற்கு இந்திர விமானம் என்றும், விண்ணில் இருந்து வந்ததால் விண்ணிழி விமானம் என்றும் சொல்லப்படுகிறது. ஆலயம் எடுத்த இந்திரனிடம் ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி நாளில் என்னை இங்கு வந்து வழிபடுக என்று கட்டளையிட்டார். அதன்படி ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி நாளில் இந்திரன் இங்கு வந்து வழிபடுகிறான் என்று திருவிளையாடல் புராணம் கூறுகிறது. அதனால் தான் சித்ராபௌர்ணமி மதுரையில் சிறப்பாகக் கருதப்படுகிறது.
வைகாசி வைகாசி மாதம் கோடை வசந்தத் திருவிழா. திருவாதிரை நட்சத்திரத்திலே இருந்து பத்து நாட்கள் எண்ணெய்க்காப்பு நடக்கிறது.
ஆனி ஆனி மாதம் மகம் நட்சத்திரத்திலிருந்து ஊஞ்சல் உற்சவம். தினமும் மாலை ஆறு மணியிலே இருந்து இரவு ஒன்பது மணி வரைக்கும் நூறு கால் மண்டபத்திலே ஒரே ஊஞ்சலில் சுந்தரேசுவரரோடு மீனாட்சி அமர்ந்து ஊஞ்சலாட, கோயிலின் ஓதுவார்கள், மாணிக்கவாசகரின் பொன்னூஞ்சல் பாடல்களைப் பாட ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது.
ஆடி ஆடி மாதத்தில் ஆயில்ய நட்சத்திரம் துவங்கி பத்து நாளைக்கு முளைக்கொட்டு உற்சவம் நடைபெறுகிறது. கொடியேற்றம் மீனாட்சிக்கு மட்டுமே நடைபெறும்.
ஆவணி ஆவணி மாதம் மூலத் திருநாள், ஆவணி மூலஉற்சவம் என்றே பெயர் பெற்றது. நான்கு ஆவணி வீதிகளிலும் அம்பாளும், சுந்தரேசுவரரும் வீதி உலா வருவார்கள். கரிக்குருவிக்கு உபதேசம் செய்த படலம், வளையல் விற்ற திருவிளையாடல், பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல், நரியைப் பரியாக்கியது, விறகு விற்றல் போன்ற திருவிளையாடல்கள் நடைபெறும். மூல நட்சத்திரத்தன்று சுந்தரேசுவரருக்குப் பட்டாபிசேகம் நடைபெறுகிறது.
புரட்டாசி புரட்டாசி மாதத்தில் நவராத்திரி கொலு. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் மீனாட்சி அலங்கரிக்கப்படுகிறார்.
ஐப்பசி ஐப்பசி மாதப் பிரதமையிலிருந்து (அமாவாசை நாளிற்கு அடுத்த நாள்) (சஷ்டி) (அமாவாசை நாளிலிருந்து ஆறாவது நாள்) வரையிலும் கோலாட்ட உற்சவம். புது மண்டபத்திலே அம்மன் கொலுவிருந்து, மதுரை இளம்பெண்கள் கூடியிருந்து கோலாட்டமாட, உற்சவம் நடக்கிறது.
கார்த்திகை

ஆண்டு: 1920
கார்த்திகை மாதம் பத்து நாட்கள் தீப உற்சவம். கார்த்திகை தீபதினத்தில் அம்மன் சந்நதியிலும், சுந்தரேசுவரர் சந்நதியிலும் சொக்கப் பனை கொளுத்தப்படுகிறது.
மார்கழி மார்கழி, தனுர் மாத வழக்கப் படி காலையில் சீக்கிரமே நடை திறந்து இரவு ஒன்பது மணிக்கு நடுநிசி முடிந்து விடுகின்றது. தினமும் வெள்ளியம்பல நடராசர் சந்நதியில் மாணிக்கவாசகர் முன்பாக கோயிலின் ஆஸ்தான ஓதுவார்கள் திருவெம்பாவைப் பாடல்களைப் பாடிப்போற்றுவார்கள். அதிகாலை ஐந்தரை மணியில் இருந்தே இது நடக்கும். இதில் பத்து நாட்கள் எண்ணெய்க் காப்பு நடக்கும். இந்தப் பத்து நாட்களும் சுவாமியும், அம்பாளும் புறப்பாடு கிடையாது. மாணிக்கவாசகர் புறப்பாடு மட்டுமே நடைபெறும். பதினோராம் நாள் ரிஷபாரூடராய் அம்பாளோடு சுவாமி ஆடி வீதியில் வலம் வருகிறார்.
தை தை மாதம். தெப்பத் திருநாள் நடக்கும். திருமலை நாயக்கரால் தோண்டப்பட்ட வண்டியூர் தெப்பக் குளத்தில் தெப்பம் கட்டி சுவாமியையும், அம்பாளையும் அதில் எழுந்தருளச் செய்து தெப்போற்சவம் நடைபெறுகிறது.
மாசி மாசி, பங்குனி இந்த இரண்டு மாசத்துக்கும் சேர்த்து மண்டல உற்சவம் நடக்கிறது. நாற்பத்து எட்டு நாட்கள் நடக்கும் இந்த உற்சவம் கொஞ்சம் பெரியது.
பங்குனி பங்குனி உத்திரம், சாரதா நவராத்திரி இரண்டும் சேர்ந்து வரும் திருவிழா. பங்குனி மாதக் கார்த்திகை நட்சத்திரத்திலிருந்து உத்திரம் நட்சத்திரம் வரை அம்பாளும், சுவாமியும் வெள்ளியம்பலத்திலே அமர்ந்து பக்தர்களுக்குக் காட்சி கொடுப்பார்கள். சுவாதி நட்சத்திரத்தன்று இருவரும் மகனின் திருமணக் கோலம் காண திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு எடுத்துச் செல்லப்படுகிறார்கள்.
மேலும், இங்கு தினசரி பூசைகள் செய்யப்படுவதுடன் சிவபெருமானுக்கு உகந்த நாட்களாகக் கருதப்படும் அனைத்து நாட்களிலும் சிறப்புப் பூசைகள் செய்யப்படுகின்றன,
சிறப்புகள்
- சிவபெருமான் நடனமாடியதாகச் சொல்லப்படும் ஐந்து முக்கிய தலங்களில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருத்தலமும் ஒன்று. இது ஐம்பெரும் சபைகளில் வெள்ளி சபை என்று போற்றப்படும் சிறப்புடையதாகும். மற்ற எல்லா இடங்களிலும் இடது காலைத் தூக்கி நடனமாடும் நடராசர், இங்கு வலது காலைத் தூக்கி வைத்து நடனமாடுகிறார்.
- சுவாமி சந்நிதியில் கருவறையில் இறைவன் சுந்தரேசுவரர் சிவலிங்கத் திருமேனியாக அருட்காட்சி தருகிறார். இது கடம்ப மரத்தடியில் தோன்றிய ஒரு சுயம்பு லிங்கமாகும். குலசேகர பாண்டியன் காலத்தில் இதனை திருநாவுக்கரசர் தனது திருத்தாண்டக தேவாரப் பாடலில் குறிப்பிடுகிறார்.
- சுந்தரேசுவரர் , சொக்கநாதர், சோமசுந்தரர் எனும் வேறு பெயர்களிலும் அழைக்கப்படுகிறார்.
- சிவலிங்கம் பிற தலங்களாகிய மேருமலை, வெள்ளிமலை, திருக்கேதாரம், வாரணாசி மற்றும் பல பெருமை பெற்ற தலங்கள் எல்லாவற்றிலும் உள்ள சிவலிங்கங்கள் எல்லாவற்றிற்கும் முன்னே தோன்றியதாகும். எனவே இதற்கு மூலலிங்கம் என்ற பெயரும் உண்டு. இது குறித்து திருநாவுக்கரசர் தனது திருத்தாண்டக தேவாரப் பாடலில் குறிப்பிட்டுள்ளார்.
- இங்குள்ள மீனாட்சி அம்மன் சிலை மரகதக் கல்லால் ஆனது. எனவே மீனாட்சி அம்மனுக்கு மரகதவல்லி என்று இன்னொரு பெயரும் இருக்கிறது. மேலும் அங்கயற்கண்ணி, தடாதகை, கோமளவல்லி, பாண்டியராஜகுமாரி, மாணிக்கவல்லி, சுந்தரவல்லி என்றெல்லாம் அழைக்கப்படுகிறார்.
- ஈசனின் 64 திருவிளையாடல்களும் மதுரையிலேயே நடந்ததாக வரலாறுகள் தெரிவிக்கின்றன. சுவாமி சந்நிதி பிராகாரங்களில் 64 திருவிளையாடல் காட்சிகள் சிற்பங்களாக இருக்கின்றன.
- இக்கோவிலின் தல மரம்: கடம்பம், புனித நீர்: பொற்றாமரைக்குளம் மற்றும் வைகை. பல நூறு வருடங்களுக்கு முன் இங்குள்ள பொற்றாமரைக் குளத்தில் கிடைக்கப்பெற்ற படிக லிங்கம், இன்றும் மதுரை ஆதீனத்தில் வழிபாட்டில் உள்ளது.
- நவக்கிரங்களில் புதனுக்குரியதாக கூறப்படுகிறார் சுந்தரேசுவரர், சொக்கநாதர் என்றும் அறியப்படுகிறார். புதனுக்கான பரிகாரங்களை இக்கோவிலில் உள்ள சிவனுக்கு செய்வது வழக்கமாக இருக்கிறது.
- மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலைச் சுற்றி ஆடி வீதிகளும், அதற்கு வெளியில் சித்திரை, ஆவணி, மாசி என சதுர அமைப்பிலான தமிழ் மாதப் பெயர்களினான தெருக்கள் இருக்கிறது.
- மதுரையிலுள்ள மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் மீனாட்சி அம்மனை வழிபட்ட பின்பே சுந்தரேசுவரரை வழிபடும் வழக்கம் நீண்ட காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
- உலக அதிசயங்களைத் தேர்வு செய்வதற்காக ஒரு இணையதளம் செய்த முயற்சியில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலும் ஒன்றாக இடம் பெற்றிருந்தது.
- இங்குள்ள சிவன் சுந்தரேசுவரர் என அழைக்கப்படுகிறார். தேவாரக் காலத்தில் திருவாலவாய் என அழைக்கப்பட்டது.
- இக்கோயிலின் வெளிப்பகுதியில் கோயிலைச் சுற்றி வருவதற்காக மின்கலத்தில் இயங்கும் வண்டிகள் இயக்கப்படுகின்றன. சுற்றுலாப் பயணிகள் இந்த வண்டிகளின் மூலம் கோயிலைச் சுற்றி வருவதில் மகிழ்ச்சி கொள்கின்றனர்.
பாடல்கள்
திருஞானசம்பந்தர், அப்பர் ஆகியவர்களின் பாடல் பெற்ற பழம்பதி. இத்தலத்தின் சிறப்புக்கள் மாணிக்கவாசகர் தம் திருவாசகத்துள் புகழந்தோதியுள்ளார்.
குமரகுருபரர் இத்தலத்துப் பெருமாட்டி மீனாட்சியம்மை மீது பிள்ளைத் தமிழ், குறம், கலம்பகம் முதலிய பலவகைப் பிரபந்தங்களைப் பாடியுள்ளார்.
குடமுழுக்கு
இருபதாம் நூற்றாண்டில் நடந்த குடமுழுக்குகள்;
- 01 சூலை 1923 (ருத்ரோத்காரி ஆண்டு, ஆனி 17, புதன்கிழமை)
- 28 ஆகஸ்டு 1963 (சோபகிருது ஆண்டு, ஆவணி 12, புதன்கிழமை)
- 26 சூன் 1974 (ஆனந்த ஆண்டு, ஆனி 12, புதன்கிழமை)
- 7 சூலை 1995 (யுவ ஆண்டு, ஆனி 23, வெள்ளிக்கிழமை)
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
- கோயிலின் அதிகாரப்பூர்வமான இணையதளம்
- மதுரை மீனாட்சி அம்மன் கோவில் - Madurai Meenakshi Amman Temple
- மீனாட்சியம்மன் கோயில்; காணொளி
- 1945-ஆம் ஆண்டில் மீனாட்சியம்மன் கோயில்; காணொளி
- தினமலரில் கோவில் பற்றிய தகவல்
- மீனாட்சி அம்மன் கோயில்
- கோவில் குறித்த தகவல்
- ஆயிரங்கால் மண்டபம்
- Hall Of Thousand Pillars
- 700 ஆண்டுகளுக்கு முன்பே ஓசோன் படலம் பற்றி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தகவல்கள்
- "Madurai Meenakshi Temple 360 View" on Dinamalar.com