எழுகடல் தெரு, மதுரை
ஏழுகடல் தெரு, மதுரை (Elukadal Street, Maurai) மதுரை மீனாட்சியம்மன் கோயில் சொக்கநாதர் சுவாமி சன்னதி எதிரில் அமைந்த புதுமண்டபத்திலிருந்து கிழக்கு நோக்கிச் செல்லும் மிகப் பழங்காலத் தெரு ஆகும். எழுகடல் தெரு, புதுமண்டபத்தையும், கீழமாசி வீதியையும் இணைக்கிறது. ஏழுகடல் தெருவில் அமைந்த குளம், விசயநகர ஆட்சியாளரின் மதுரை பாளையக்காரர் சாளுவ நாயக்கரால் கி. பி., 1516இல் கட்டப்பட்டு, ஏழு கடல் (Saptasakaram) எனப் பெயரிடப்பட்டது. மீனாட்சியம்மனின் தாயான காஞ்சனமாலை கோயில் ஏழுகடல் குளக்கரையில் அமைந்துள்ளது.
1990ஆம் ஆண்டில் மதுரை மாநகராட்சி நிர்வாகம், ஏழுகடல் தெருவிலுள்ள குளத்தை மேடாக்கி, வணிக வளாகம் கட்டியது. புதுமண்டபத்தைப் புதுப்பிக்க அங்குள்ள கடைகளை இவ்வணிக வளாகத்திற்கு மாற்ற முயற்சி செய்தும் தோல்வி அடைந்தது.[1] இத்தெருவின் இருபுறங்களில் கிராம மக்களுக்கான துணிக் கடைகளும், 1990-இல் மாநகராட்சி வணிக வளாகத்தில், தமிழக பட்டு நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் பட்டுச் சேலைக் கடைகளும் உள்ளன.
இராய கோபுரம்
மன்னர் திருமலை நாயக்கரால் கட்ட ஆரம்பிக்கப்பட்ட முழுமையடையாத இராயகோபுரம் எழுகடல் தெருவில், புதுமண்டபம் எதிரே அமைந்துள்ளது. தற்போது இந்த இராயகோபுரம் சிதிலமடைந்த நிலையில் பல சிறு வணிகக் கூடங்களால் இராயகோபுரம் மறைக்கப்பட்டுள்ளது.