மதுரை திருவாப்புடையார் கோயில்

திருஆப்பனூர் ஆப்புடையார் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம்மதுரை நகரின் ஒரு பகுதியான செல்லூர் என்ற இடத்தில் அமைந்துள்ளது. மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து தடம் எண் 17, 17A, 17C பேருந்துகளில் ஏறி திருவாப்புடையார் கோவில் நிறுத்தம் என்று கேட்டு இறங்கினால் கோவில் மிக அருகில் உள்ளது. மதுரை நகரின் ஒரு பகுதியான சிம்மக்கல் என்ற இடத்தில் இருந்து வைகை ஆற்றைக் கடந்து சென்றும் இக்கோவிலை எளிதில் அடையலாம். இத்தலத்தில் அர்ச்சகர் உலையிலிட்ட ஆற்று மணலை இறைவன் அன்னமாக மாற்றினார் என்பது தொன்நம்பிக்கை.

தேவாரம் பாடல் பெற்ற
திருஆப்பனூர் ஆப்புடையார் கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):திருஆப்பனூர்
பெயர்:திருஆப்பனூர் ஆப்புடையார் கோயில்
அமைவிடம்
ஊர்:சிம்மக்கல்
மாவட்டம்:மதுரை
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:ஆப்பானூர்க்காரணர்,[1] ரிஷபுரேசர், அன்ன விநோதர்
தாயார்:குரவங்கமழ் குழலம்மை
தீர்த்தம்:இடபதீர்த்தம், வைகை நதி
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:சம்பந்தர்
தொலைபேசி எண்:0452-2530173, 09443676174 [2]

சோழாந்தகன் என்ற பாண்டிய மன்னன் வேட்டையாடச் சென்றபோது திருவாப்புடையாரை(சுயம்புலிங்கத்தை)க் கண்டு முதன்முதலில் தரிசனம் செய்துள்ளான். அவனே குரவங்குமழ் குழலம்மையைப் பிரதிஷ்டை செய்தவன். அப்பாண்டியனது மகன் சுகுணன், திருவாப்புடையாருக்குக் கோயில் கட்டுவித்துள்ளான்.

இத்தல இறைவனார், சிவபக்தர் ஒருவருக்காக மணலை அன்னமாக்கியதால் அன்னவிநோதர் என அழைக்கப்பட்டார்.[3]

ஆப்புடையார் பெயர்க்காரணம்

ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்றல்ல, நான்கு முறை ஆழிப்பேரலையானது (சுனாமி) மதுரைக்கு வந்து சென்றதாகத் திருவிளையாடற் புராணம் குறிப்பிடுகிறது.

சங்க காலத்திலே ஒருமுறை பிரளயம் ஏற்பட்டுள்ளது. அப்போது பொங்கி வந்த ஆழிப்பேரலையானது தமிழகத்தையே அழித்து மேற்கே சென்றுள்ளது. பிரளயத்திற்குமேல் மற்றொரு பிரளயம் உண்டாகியுள்ளது. இதனால் எழுகடலும் பொங்கி எழுந்துள்ளன. அப்போது மதுரையின் வடக்கு எல்லையாக விளங்கும் யானைமலையும், தெற்கு எல்லையாக விளங்கும் திருப்பரங்குன்ற மலையும் தங்களது இடங்களிலிருந்து பெயர்ந்து ஆட்டம் கண்டுள்ளன. கடல் அலையானது பொங்கி எழுந்து வந்து யானைமலையையும் திருப்பரங்குன்ற மலையையும் மூழ்கடித்துள்ளன. மலைகளையெல்லாம் மூழ்கடித்த அந்த அழித்த ஆழிப்பேரலையானது மேற்குத் தொடர்ச்சி மலையையும் தாண்டிச் சென்று அரபிக்கடலில் கலந்துள்ளது.

மலைகள் எல்லாம் ஆடும்படியாக அடுக்கடுக்காகப் பிரளயம் உண்டானபோது பொங்கி எழுந்த கடல் அலையானது ஒரே சேறும் சகதியுமாக இருந்துள்ளது. இந்த அலையில் அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டன. ஆனால், ஒரேயொரு விருட்சம் (மரம்) மட்டும் இவ்வளவு பெரிய பிரளயத்திலும் ஆடாமல் அசையாமல் பூமி உருண்டையின் மேல் ஒரு ஆணியை அடித்து வைத்தது போல், அப்படியே நிலையாக ஆழிப்பேரலையை (சுனாமியை) எதிர்த்து நின்றது.

தண்ணீர் பாய்ந்து ஓடும் ஒரு மணற்பரப்பின் நடுவில் ஒரு குச்சியை நிலையாக நிறுத்தி வைத்தால், நீரோட்டத்தினால் அடித்துவரப்படும் மணல்கள் அந்தக் குச்சிக்குப் பின்புறம் சென்று நீண்டதொரு மேட்டினை உருவாக்கும். அலைகள் மிகுந்த கடற்கரையில் நாம் நின்றால், அலையானது நமது கால்களைத் தாண்டிச் செல்லும் போது, நமது கால்களுக்குப் பின்புறமாக ஒரு நீண்ட மணல்மேட்டினை உருவாக்குவதைக் காணலாம். இதனைச் செயற்கையாகவும் நாம் சோதனை செய்தும் பார்க்கலாம்.

இதுபோன்றே, கடல் அலையால் அரிந்து வரப்பட்ட பொருட்கள் இந்த விருட்சத்தில் மேல் மோதி நிலைகொண்டு விருட்சத்திற்குப் பின்புறமாகச் சென்று, மணலும் சேறும் சகதியும் நிறைந்த ஒரு நீண்ட நெடிய மேட்டினை உருவாக்கிவிட்டது. இந்த மேட்டில் கடலிலிருந்து அடித்துவரப்பட்ட கடல்நீர், மணல், சகதி மற்றும் வரும் வழியில் இருந்த அனைத்து வகையான மரம் செடிகொடுகளும், மற்றும் உயிரினங்களும் படிந்து விட்டன.

இவ்வாறு உண்டான மணல்மேட்டுப் படிமம் பலமைல் தூரத்திற்கு நீண்டு சென்றுள்ளது.

இப்போது பல இலட்சக்கணக்கான ஆண்டுகள் கழிந்து, யுகங்கள் மாறிவிட்டன. இத்தனை ஆண்டுகளில், பூமியின் மேற்பரப்பில் ஏற்பட்ட அழுத்தத்தினாலும் மற்றும் பல இயற்கைக் காரணங்களாலும் இந்தப் படிமமானது அப்படியே பாறைபோல் மாறிவிட்டது. இப்போது இந்த மேடானது, “நாகமலை“ என்று அழைக்கப்படுகிறது. யானைமலையும் திருப்பரங்குன்றமலையும் கடும்பாறைகளாக இருக்க, நாகமலைமட்டும் கடும் பாறையாக இல்லாமல், மணற்குன்றாக இருப்பதை இன்றும் காணலாம். இதே போன்று பழமுதிர்சோலைமலையையும் (அழகர்கோயில்மலை) ஆழிப்பேரலையானது தாங்கியுள்ளதால் அங்கேயும் இதுபோன்ற படிமங்களைக் காணலாம்.

ஆழிப்பேரலையாலும் அசைக்க முடியாமல் பூமியின் மேல் ஆப்புப் (ஆணி அடித்தது) போன்று அசையாமல் நின்ற அந்த விருட்சமானது, காலப்போக்கில் படிமம் ஆகியுள்ளது. இப்போது “ஆப்புடையார்“ என்று அழைக்கப்படுகிறது. மிகப் பெரிய பிரளயத்திலும் அசையாமல் நின்ற திருவாப்புடையார் உள்ள பகுதியானது திருவாப்பனூர் என்று பெயர் பெயரலாயிற்று.

தலவரலாறு நூல்

இத்திருத்தலத்திற்கு கந்தசாமிப் புலவர் இயற்றிய தலபுராணம் உள்ளது.[4]

மேற்கோள்கள்

  1. தேவாரம்.ஆர்க் தளம்
  2. http://www.shaivam.org/siddhanta/sp/spt_p_appanur.htm
  3. தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்;பக்கம் 329
  4. http://www.tamilvu.org/slet/l4100/l4100pd2.jsp?bookid=72&pno=748

இவற்றையும் பார்க்க

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.