சங்கத் தமிழ்க் காட்சிக் கூடம்

சங்கத் தமிழ்க் காட்சிக் கூடம் மதுரையில் பழந்தமிழரின் பெருமைகளையும், சிறப்புகளையும் விளக்கும் வகையில் ரூபாய் 1.45 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட நிரந்தர சங்கத் தமிழ் காட்சிக் கூடத்தை தமிழக முதல்வர் செயலலிதா சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் 8 பிப்ரவரி 2016 அன்று திறந்து வைத்தார்.[1]

இக்காட்சிக் கூடம் உலகத் தமிழ்ச் சங்கத்தின் ஒர் அலகாக செயல்படுகிறது.

அமைவிடம்

சங்கத் தமிழ் காட்சிக் கூடம், மதுரை தல்லாகுளம், காந்தி அருங்காட்சியகம் எதிரில், காந்தி அருங்காட்சியகம் சாலையில், ஐம்பத்து எட்டு செண்ட் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

சிறப்புகள்

சங்கத் தமிழ் காட்சிக் கூடத்தில் புறநானூறு, அகநானூறு, தொல்காப்பியம், திருக்குறள் பாடல்கள்; ஒளவையார், அங்கவை சங்கவை, திருவள்ளுவர், தொல்காப்பியர், சீத்தலை சாத்தனார், இளங்கோவடிகள், கம்பர், முதலிய கவிஞர்கள் மற்றும் சங்க கால கடையேழு வள்ளல்களான அவ்வைக்கு நெல்லிக் கனி அளித்த அதியமான், முல்லைக் கொடிக்கு தேர் தந்த பாரி, நாட்டோர் உவப்ப நடைப் பரிகாரம் நல்கிய நள்ளி, யாழ் மீட்டும் பாணர்களுக்கு நாட்டையே வழங்கிய ஓரி, ஈர நன்மொழிகள் வழங்கிய காரி, நீலநாகம் நல்கிய கலிங்கத்தை ஆலமர் செல்வனுக்கு (குற்றால நாதருக்கு) அணிவித்த ஆய் மற்றும் மயிலுக்கு போர்வை நல்கிய பேகன் போன்றவர்களின் உருவங்களைச் சிற்பங்களாகவும், ஓவியங்களாகவும், காணொலிக் காட்சிகளாகவும் அசைவுப் படங்களாகவும் காட்சிப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

காட்சி கூடத்தின் முன் பக்க சுவரில், பாண்டிய அரசவையில் நக்கீரர் முதலான புலவர்கள் முன்னிலையில், தருமிக்கு பாண்டிய மன்னர் பொற்கிழி வழங்கும் காட்சியை புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டப்பட்டுள்ளது.

காட்சிக் கூடத்தின் நுழைவு வாயிலில் கலித்தொகை பாட்டினை விளக்கும் வகையில் ஏறுதழுவல் ஓவியம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

சங்கத் தமிழ் காட்சிக் கூட வளாகத்தின் வெளிப்புறச் சுற்றுச் சுவர்களில் புறநானூறு, நெடுநல்வாடை, நற்றிணை, கலித்தொகை, சிறுபாணாற்றுப்படை, மலைபடுகடாம் போன்ற சங்க காலப் பாடல்களை விளக்கும் வகையில் வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளது.

படகாட்சியகம்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. மதுரையில் சங்கத் தமிழ் காட்சிக் கூடம்: முதல்வர் ஜெ., திறப்பு

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.