பேகன்

பேகன் கடையெழு வள்ளல்களுள் ஒருவர். பொதினி (பழனி) மலைக்குத் தலைவர். மழை வளம் மிக்க அம்மலையின் காட்டில் மயில்கள் திரிந்து கொண்டிருக்கும். ஒருநாள் அப்படித் திரிந்து கொண்டிருந்த ஒரு மயில் அகவியதைக் கேட்டு, அது குளிரால் நடுங்கி அகவியது என்று நினைத்தார். அவரகத்தே அருள் உணர்ச்சி பெருகவே, தமது போர்வையை அம்மயிலுக்குப் போர்த்தினார். மயில் போர்வையைப் பயன்படுத்திக் கொள்ளுமா? கொள்ளாதா? எனச் சிறிதும் எண்ணிப் பாராமல் இத்தகைய செயல் செய்தார். இதனையே ‘கொடைமடம்’ எனச் சான்றோர் போற்றிக் கூறினர்.

மயிலுக்கு போர்வை கொடுக்கும் பேகன். (சிலையில் இடம் புதுக்கோட்டை சித்தன்னவாசல் அருகில் உள்ள பூங்கா

இவரைப் பற்றிய பாடல்கள்

பரணர் பாடியவை

  • உதவாத இடங்களிலும் பெய்யும் மழை போலப் பேகன் கொடையில் மடையன். ஆனால் படையில் போர் புரியும்போது மடையன் அல்லன்.[1]
  • பேகன் யானைமீது செல்லும் பழக்கம் கொண்டவன். மயில் உடுத்திக்கொள்ளாது, போர்த்திக்கொள்ளாது என்பது அவனுக்குத் தெரியும். தெரிந்திருந்தும் தன் போர்வையை மயிலுக்குப் போர்த்திவிட்டான். "எதுவாகிலும், எந்த அளவினதாயினும் கொடுக்க வேண்டும்" என்று எண்ணிக்கொண்டு கொடுப்பவன். இந்தப் பிறவியில் கொடுத்தால் வரும் பிறவியில் பயன் கிடைக்கும் என்று மறுமை நோக்குவது அன்று அவன் கொடை. பிறர் வறுமையில் வாடக்கூடாது என்று எண்ணிக் கொடுப்பதுதான் அவன் கொடை.[2]
  • கொடைவள்ளல் பேகன் கொண்டல் மலை [3] இது நீரூற்று மிக்க சோலைகளை உடையது. ஈக்கள் மொய்க்கும் தேன் கூடுகள் கொண்டது. தலைவி வாயிலிருந்து வரும் சொற்கள் பேகன் மலை தேன் போல இனித்ததாம்.[4]
  • பரணர் பேகனைக் காண அரண்மனைக்குச் சென்றபோது அவன் மனைவி கண்ணகி நிலைமையைக் கூறினாளாம். "என்னைப் போல ஒருத்தின் இன்பத்தை விரும்பி வாழ்கிறான் என்று ஊரார் கூறுகின்றனர்" என்றாளாம். புலவர் பேகனை வேண்டுகிறார். "நான் கிணை அடித்துக்கொண்டு உன்னைப் பாடி வந்தது எல்லாம் உன் மனைவியின் கண்ணீரைத் துடைக்கவேண்டு என்பதற்காகவே" என்கிறார் பரணர்.[5]

பிறர் பாடியவை

  • கபிலர் கூறுகிறார் - பேகன் குதிரையில் சென்று சினங்கொண்டு போர் புரிபவன். என்றாலும் அவன் கைகள் வள்ளண்மை மிக்கவை. இப்படிப் புகழ்ந்த கபிலர் "உன் மனைவி அழுவதை நிறுத்த வேண்டும்" என்று அவனை வேண்டுகிறார்.[6]
  • பேகன் ஆண்ட நாடு "பெருங்கல் நாடு" எனப் போற்றப்பட்டது. பேகன் ஆவியர் குடிப் பெருமகன். மழை பொழிந்த மலையில் ஆடிய மயிலுக்குத் தன் ஆடையைப் போர்த்திவிட்டவன். இவனுக்குப் பின் ஓய்மான் நாட்டில் நல்லியக்கோடன் வள்ளலாகத் திகழ்ந்தான் என்கிறார் இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார்.[7]
  • பெருஞ்சித்திரனார் குமணனைப் பாடும்போது ஏழு வள்ளல்களுக்குப் பின் இருக்கும் வள்ளல் குமணன் ஒருவனே என்று குறிப்பிடுகிறார். அப்போது முருகக் கடவுள் காக்கும் உயர்ந்த உச்சியை உடைய பெருங்கல் இருக்கும் நாட்டை உடையவன் என்று குறிப்பிடுகிறார்.[8]

மேற்கோள்

  1.  அறு குளத்து உகுத்தும், அகல் வயல் பொழிந்தும்,
    உறும் இடத்து உதவாது உவர் நிலம் ஊட்டியும்,
    வரையா மரபின் மாரிபோல,
    கடாஅ யானைக் கழல் கால் பேகன்
    கொடைமடம் படுதல் அல்லது, 5
    படைமடம் படான், பிறர் படை மயக்குறினே. - புறநானூறு 142

  2.  உடாஅ, போரா ஆகுதல் அறிந்தும், 10
    படாஅம் மஞ்ஞைக்கு ஈத்த எம் கோ,
    கடாஅ யானைக் கலி மான் பேகன்,
    'எத் துணை ஆயினும் ஈத்தல் நன்று' என,
    மறுமை நோக்கின்றோ அன்றே,
    பிறர், வறுமை நோக்கின்று, அவன் கை வண்மையே. 15

  3. கிழக்கில் இருக்கும் பழநி (பொதினி) மலை கொண்டல் மலை. இதன் மேற்கில் இருப்பது கோடை மலை (கோடைக்கானல், கொடைக்கானல்)
  4.  அருவி ஆர்க்கும் அயம் திகழ் சிலம்பின்
    நுண் பல் துவலை புதல்மிசை நனைக்கும் 15
    வண்டு படு நறவின் வண் மகிழ்ப் பேகன்
    கொண்டல் மா மலை நாறி,
    அம் தீம் கிளவி வந்தமாறே. (அகநானூறு 262)

  5.  'யாம் அவன் கிளைஞரேம் அல்லேம்; கேள், இனி: 10
    எம் போல் ஒருத்தி நலன் நயந்து, என்றும்,
    வரூஉம்' என்ப 'வயங்கு புகழ்ப் பேகன்
    ஒல்லென ஒலிக்கும் தேரொடு,
    முல்லை வேலி, நல் ஊரானே.' (புறநானூறு 144)

  6.  'மலை வான் கொள்க!' என, உயர் பலி தூஉய்,
    'மாரி ஆன்று, மழை மேக்கு உயர்க!' எனக்
    கடவுள் பேணிய குறவர் மாக்கள்,
    பெயல் கண்மாறிய உவகையர், சாரல்
    புனத் தினை அயிலும் நாட! சினப் போர்க் 5
    கை வள் ஈகைக் கடு மான் பேக! (புறநானூறு 143)

  7.  வானம் வாய்த்த வள மலைக் கவா அன்
    கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய 85
    அருந் திறல் அணங்கின் ஆவியர் பெருமகன்,
    பெருங் கல் நாடன், பேகனும்; (சிறுபாணாற்றுப்படை)

  8.  அருந் திறல் கடவுள் காக்கும் உயர் சிமை,
    பெருங் கல் நாடன் பேகனும்; (புறநானூறு 158)

வெளிப்பார்வை

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.