ஔவையார்
ஔவையார் நன்கு அறிமுகமான ஒரு பெண் புலவர். ஔவையார் என்னும் பெயர் பூண்ட புலவர்கள் பலர் இருந்தனர். நூலமைதி, தமிழ்நடை, தொடர்புடையோர் முதலானவற்றைக் கருத்தில் கொண்டு வரலாற்று நோக்கில் பார்க்கும்போது அவர்கள் வெவ்வேறு காலத்தில் வாழ்ந்தவர்கள் என்பது புலனாகும்.[1]

காலந்தோறும் ஔவையார்[1]
- ஔவையார், சங்ககாலப் புலவர்
- ஔவையார், அங்கவை சங்கவைக்கு மணம் முடித்து வைத்தவர்
- ஔவையார், அறநூல் புலவர்
- ஔவையார், நூல் புலவர்
- ஔவையார், கதையில் வரும் புலவர்
- ஔவையார், சிற்றிலக்கியப் புலவர்
என்று பாகுபடுத்திக் காணமுடிகிறது. சங்க கால புலவர் அவ்வை அதியமான் காலத்தில் வாழ்ந்தவர், அக்காலத்தில் வாழ்ந்தவரே கபிலர், கபிலரின் நன்பனான பாரியின் மகள்களான அங்கவை , சங்கவை இருவரின் திருமணத்திற்கு முயற்சி மேற்கொண்டவர்கள் அவ்வையும் , கபிலரும் ஆவர்.
அன்றியும் ஔவையார் நூல்கள் பட்டியலில் வரும் பல நூல்கள் பெயரளவிலேயே காணப்படுகின்றன. அவை
- கல்வியொழுக்கம்
- நன்னூற்கோவை
- நான்மணிக்கோவை
- நான்மணி மாலை
- அருந்தமிழ் மாலை
- தரிசனப்பத்து
- பிடக நிகண்டு
ஔவையார் 6 பேர், காலவரிசை[1]
எண் | குறியீடு | காலம் | பாடல் | பாடல் பெற்றோர் | வரலாறு |
---|---|---|---|---|---|
1 | சங்க காலம் | கி.பி. 2-ஆம் நூற்றாண்டுக்கு முன் | அகம், புறம், நற்றிணை, குறுந்தொகை | சேர சோழ பாண்டியர், நாஞ்சில் வள்ளுவன் முதலானோர் | அதியமானுக்கு நெல்லிக்கனி |
2 | இடைக்காலம் | கி.பி. 10-ஆம் நூற்றாண்டுக்கு முன் | - | மூவேந்தர் | அங்கவை சங்கவை மணம் |
3 | சோழர் காலம் | 12-ஆம் நூற்றாண்டு | ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி, மூதுரை, அசதிக்கோவை | சோழர், அசதி | அசதி, விக்கிரம சோழன் , |
4 | சமயப் புலவர் | 14-ஆம் நூற்றாண்டு | ஔவை குறள், விநாயகர் அகவல் | விநாயகர் | அகவல் பாடல்கள் |
5 | பிற்காலம் – 1 | 16, 17-ஆம் நூற்றாண்டு | - | - | தமிழறியும் பெருமான் கதை |
6 | பிற்காலம் – 2 | 17, 18-ஆம் நூற்றாண்டு | பந்தன் அந்தாதி | பந்தன் என்னும் வணிகன் | பந்தன் செய்த சிறப்புகள் |
சங்ககால ஔவையார்
சங்ககால ஔவையார் நம் கற்பனையில் உள்ளவர் போல முதுமைக் கோலத்தவர் அல்லர். இளமை ததும்பும் விறலி [2][3]
இவர் பாடிய 59 பாடல்கள் சங்கநூல்களில் இடம்பெற்றுள்ளன. அகநானூறு [4], குறுந்தொகை [5], நற்றிணை [6], புறநானூறு [7] ஆகிய தொகுப்பு நூல்களில் அவை உள்ளன. சங்கப்புலவர் பாடல்தொகை வரிசையில் இவர் 9 ஆம் இடம் பெற்றுள்ளார். ஔவை சங்க கால புலவர்களிலலே சிறந்தவர்.
அறநூல் புலவர் ஔவையார்
நீதி இலக்கிய காலத்து ஔவையார் எழுதிய ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை போன்றவை உலகுக்கு நற்கருத்தை கூறி மக்களை நலமுடன் வாழ செய்கின்றன.
ஒளவை என்ற சொல்லின் பொருள்
ஔவை அல்லது அவ்வை என்ற சொல் அவ்வா என்ற சொல்லின் திரிபாக இருக்கலாம் என்ற கருத்து பலரிடம் நிலவுகின்றது.
ஒளவை என்பது மூதாட்டி அல்லது தவப்பெண் என்ற கருத்தை உடையது என்று பழந்தமிழ் அகராதி கூறும்.
பிற்காலத்தில் ஒளவை என்ற சொல், ஆண்டு மற்றும் அறிவு என்பவற்றில் முதிர்ச்சி அடைந்தவர்களைக் குறிக்கும் சொல்லாக விளங்கி்ற்றுப் போலும்.[8]
மேற்கோள்கள்
- மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1972, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, முதல் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீடtfhhtufjghgjghbனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014.
- பாண்குடி மகள்
- இழையணிப் பொலிந்த ஏந்து கோட்டு அல்குல்
மடவரல் உண்கண் வாள் நுதல் விறலி- இவ்வாறு தன்னை அதியமான் அழைத்ததாக ஔவையார் தன்னைப்பற்றிக் குறிப்பிடுகிறார். (புறம் 89)
- பாடல் 11, 147, 273, 303
- பாடல் 15, 23, 28, 29, 39, 43, 80, 91, 99, 102, 158, 183, 200, 364, 388
- பாடல் 129, 187, 295, 371, 381, 390, 394
- பாடல் 87 முதல் 104 வரை உள்ள பாடல்களும், 140, 187, 208, 231, 232, 235, 259, 286, 290, 295, 311, 315, 367, 390, 392 ஆகிய பாடல்கள்
- குமாரசுவாமிப்புலவர், இலக்கிய சொல்லகராதி , 1914. பக். 98