ஔவை குறள்

ஔவை குறள் என்னும் நூல் ஔவையார் என்னும் பெண் புலவரால் பாடப்பட்டது. இது அவ்வை குறள் எனவும் வழங்கப்படுகிறது. திருவள்ளுவர் திருக்குறளில் அறம், பொருள், இன்பம் என்னும் மூன்று பால்களில் பாடல்கள் உள்ளன. எனவே வீட்டு நெறியை விளக்க இந்த நூல் பாடப்பட்டது என்பர்.[1]. இதில் மூன்று அதிகாரங்களில் 310 குறடபாக்கள் உள்ளன. இதன் காலம் 14ஆம் நூற்றாண்டு

பகுப்பு முறை

வீட்டுநெறிப்பால்
  1. பிறப்பின் நிலைமை
  2. உடம்பின் பயன்
  3. உள்ளுடம்பின் நிலைமை
  4. நாடி தாரடை
  5. வாயு தாரணை
  6. அங்கி தாரணை
  7. அமுத தாரணை
  8. அர்ச்சனை
  9. உள்ளுணர்தல்
  10. பத்தி உடைமை
திருவருட்பால்
  1. அருள் பெறுதல்
  2. நினைப்பு உறுதல்
  3. தெரிந்து தெளிதல்
  4. கலைஞானம்
  5. உருவொன்றி நிற்றல்
  6. முத்தி காண்டல்
  7. உருபாதீதம் (உருபு அதீதம்)
  8. பிறப்பு அறுத்தல்
  9. தூய ஒளி காண்டல்
  10. சதாசிவம்
தன்பால்
  1. குரு வழி
  2. அங்கியில் பஞ்சு
  3. மெய்யகம்
  4. கண்ணாடி
  5. சூனிய காலமறிதல்
  6. சிவயோக நிலை
  7. ஞான நிலை
  8. ஞானம் பிரியாமை
  9. மெய்ந்நெறி
  10. துரிய தரிசனம்
  11. உயர்ஞான தரிசனம்

நூலிலிருந்து சில பாடல்கள்

செய்தி காட்டப்பட்டுள்ள முறைமை

பாடல்
கருத்து
விளக்கம்

1

ஆதியாய் நின்ற அறிவும் முதலெழுத்து
ஓதிய நூலின் பயன் முதல் குறள்
ஆதியாய் நின்ற ஒன்று அறிவு அறிவாகும். நமக்கு முதலெழுத்தாக உள்ளதும் அதுதான். நூல் ஓதியதன் பயனும் அதுதான்.
திருக்குறளின் முதல் இரண்டு பாடல்களில் உள்ள கருத்துக்களின் உள்ளடக்கப் பாடல் இது.

2

கற்கிலும் கேட்கிலும் ஞானக் கருத்துற
நிற்கில் பரமவை வீடு. கடைசிக் குறள்
கற்றாலும் சரி, கேட்டாலும் சரி, அவற்றில் ஞானக்கருத்து வந்து அதில் நின்றால்தான் வீடுபேறு.

3

உடம்பினைப் பெற்ற பயனாவ(து) எல்லாம்
உடபினில் உத்தமனைக் காண் பால் 1, அதிகாரம் 2, பாடல் 1
உடம்புக்குள்ளே இறைவன் இருக்கிறான். அவனைக் காண்பதே இவ் உடம்பினைப் பெற்ற பயன்.
மலர்மிசை ஏகினான் என்னும் திருக்குறள் கருத்து.

4

முன்னைப் பிறப்பின் முயன்ற தவத்தினால்
பின்னைப் பெரும்உணர்வு தான். பால் 1, அதிகாரம் 9, பாடல் 4
முன்னைப் பிறப்பு என்பது முன்னோர்களின் பிறப்பு. முன்னோர் தவத்தினால் பின்னோர் மெய்யறிவாம் பெருமைக்குரிய உணர்வு எய்துவர்.
பேருணர்வு எனின் அளவில் விரிந்திருக்கும் உணர்வைக் குறிக்கும். இது அட்டாவதானம் போன்ற அறிவு. பெரும்உணர்வு எனில் அது மெய்ஞ்ஞான உணர்வு என்க.

5

எள்ளகத்து எண்ணெய் இருந்ததனை ஒக்குமே
உள்ளகத்து ஈசன் ஒளி பால் 2, அதிகாரம் 5, பாடல் 1
உள்ளுக்குள் ஈசன் ஒளியானது, எள்ளுக்குள் இருக்கும் எண்ணெய் போன்றது.

6

பத்துத் திசையும் பரந்த கடலுலகும்
ஒத்தெங்கும் நிற்கும் சிவம். பால் 2, அதிகாரம் 10, பாடல் 1
சிவமானது இடவிரிவிலும் ஒன்றாக நிற்கிறது.

7

கண்ணாடி தன்னில் ஒளிபோல் உடம்பதனுள்
உண்ணாடி நின்ற ஒளி பால் 3, அதிகாரம் 4, பாடல் 1
கண்ணாடிக்கு முன் நின்றால்தான் நிழல் விழும். அதுபோல இறைவனைப் பார்த்தால்தான் உணரமுடியும்.

கருவிநூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு, 2005
  • ஔவை குறள், ஆறுமுக நாவலர் பரம்பரை நா கதிரைவேற்பிள்ளை பார்வையில் சென்னை இரத்தினநாயகர் அண்டு சன்ஸ் பதிப்பு 1953

அடிக்குறிப்பு

  1. திருவள்ளுவரின் தமக்கை ஔவையார் பாடினார் என்னும் கதை ஒன்று உண்டு
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.