திருக்குறள்
திருக்குறள் எனக் குறிப்பிடப்படுவது புகழ்பெற்ற தமிழ் மொழி இலக்கியமாகும். உலகப்பொதுமறை, பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, முப்பால், உத்தரவேதம், தெய்வநூல் எனப் பல பெயர்களாலும் திருக்குறள் அழைக்கப்படுகிறது.[1] இதனை இயற்றியவர் கி.மு மூன்றாம் நூற்றாண்டுக்கும் கி.மு ஒன்றாம் நூற்றாண்டுக்கும் இடையில் வாழ்ந்தவராக இன்றைய ஆய்வாளர்களால் கருதப்படும் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர் ஆவார்.[2] திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. இஃது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும், இசைவுடனும், நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. எதுவிதத்திலும், திருக்குறளை இயற்றியவர் பற்றியும், அது என்ன நூல் என்பது பற்றியும், ஔவையாரால் இயற்றப்பட்டதாகக் கூறப்படும் நல்வழி என்பதன் இறுதிப்பாட்டுப் பின்வருமாறு கூறுகிறது:
தேவர் குறளும் திரு நான்மறை முடிவும் மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை திருவாசகமும் திருமூலர் சொல்லும் ஒருவாசகம் என்றுணர்
1812 இல் முதன்முதலாக திருக்குறள் அச்சிடப்பட்டது. | |
நூலாசிரியர் | திருவள்ளுவர் |
---|---|
உண்மையான தலைப்பு | முப்பால் |
செயற்பாட்டிலுள்ள தலைப்பு | திருக்குறள் |
நாடு | தமிழ் நாடு, இந்தியா |
மொழி | தமிழ் |
தொடர் | பதினெண் கீழ்க்கணக்கு |
பொருண்மை | நன்னெறி, அறம் |
வகை | செய்யுள் |
வெளியிடப்பட்டது | சங்க காலத்தில் எழுத்தோலை (சுமார் கி.மு 3 – 1 நூற்றாண்டுகள்) |
வெளியிடப்பட்ட திகதி | 1812 (முதலாவது அச்சிடப்பட்டது) |
ஆங்கில வெளியீடு | 1840 |
உரை | திருக்குறள் விக்கிமூலத்தில் |
இதில் 'தேவர் குறள்' எனக் கூறப்பட்டிருப்பது பற்றியும், குறள், திருநான்மறை, ஏனையவைகளும் 'ஒரு வாசகம்' எனக் கூறப்பட்டிருப்பது பற்றியும், தமிழ் வித்தகர்கள் தெளிவான விளக்கத்தைக் கொடுக்காத நிலை தொடர்கிறது.
திருக்குறள் நூலானது திருவள்ளுவனின் தற்சிந்தனை அடிப்படையில் தமிழ் மொழியில் இயற்றப்பட்டது . மேலும், திருக்குறளில் கூறப்பட்டிருப்பவை உலகின் பல்வேறு சமயங்கள் வலியுறுத்துபவையுடன் ஒப்பிடப்பட்டு, அது பல்வேறு சமயங்களுடனும் பொருந்துவதாகப் பல்வேறு சமயத்தாராலும் கருதப்பட்டு வருகிறது.
வரலாறு
திருக்குறள் இயற்றப்பட்ட காலம் இன்னும் சரியாக வரையறுக்கப்படவில்லை. இந்நூல் ஏறக்குறைய 2000 ஆண்டு பழமையானது என்று கணிக்கப்படுகிறது. மறைமலை அடிகள் செய்த ஆராய்ச்சியின் பயனாய், தமிழ்நாட்டில் ஆண்டுகளைக் குறிக்க திருவள்ளுவர் ஆண்டும் பயன்படுத்தப் படுகின்றது. இதன் அடிப்படையில், "திருவள்ளுவர் ஆண்டு" என்பது பொது ஆண்டோடு 31 ஆண்டுகள் கூட்ட வேண்டும்.[3]
பெயர்க்காரணம்
இப்பாடல்கள் அனைத்துமே குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை. அக்காலத்தில் இவ்வகை வெண்பாக்களால் ஆகிய முதல் நூலும் ஒரே நூலும் இதுதான். குறள் வெண்பாக்களால் ஆனமையால் "குறள்' என்றும் அதன் உயர்வு கருதி "திரு" என்ற அடைமொழியுடன் "திருக்குறள்" என்றும் பெயர் பெறுகிறது.
இது உலக மக்கள் அனைவருக்கும், எந்த காலத்திற்கும், பொருந்தும் வகையில் அமைந்தமையால், இது உலகப் பொதுமறை என அழைக்கப்படுகிறது.
எதுவித்திலும், ”குறள்” என்ற தமிழ்ச் சொல்லின் பொருள்கள் எவை என்பதை இன்றுவரை தமிழ் வித்தகர்கள் அறியவில்லை. இதற்குக் காரணம், முன்னைய, இன்றைய தமிழ் வித்தகர்கள் தொல்காப்பியன் உரியிலில் குறிப்பிட்ட ”மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா” எனக் கூறிய சூத்திரத்தையும், அதற்கு நச்சினார்க்கினியர், சேனாவரையர் எழுதியிருந்த உரைகளையும் சரியாக விளங்கி, ஒரு தமிழ்ச் சொல் எப்படிப் பொருள் உணர்த்துகிறது என்பதைச் சரியாக விளங்கிக்கொள்ளவில்லை.
குறளானது ஈரடிகளில் உலகத் தத்துவங்களை சொன்னதால், இது ‘ஈரடி நூல்’ என்றும், அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளைக் கொண்டதால், ‘முப்பால்’ என்றும் அழைக்கப்படுகிறது.
பிற பெயர்கள்
- உத்தரவேதம்
- பொய்யாமொழி
- வாயுரை வாழ்த்து
- தெய்வநூல்
- பொதுமறை
- முப்பால்
- தமிழ் மறை
- ஈரடி நூல்
- வான்மறை
- உலகப்பொதுமறை
நூலின் அமைப்பு

தனிமனிதனுக்கு உரிமையானது இன்பவாழ்வு; அதற்குத் துணையாக உள்ளது பொருளியல் வாழ்வு; அவற்றிற்கெல்லாம் அடிப்படையாக விளங்குவது அறவாழ்வு. மனதே எல்லாவற்றிற்கும் ஆதார நிலைக்கலன்; மனத்துக்கண் மாசிலன் ஆதலே அனைத்து அறம்; அறத்தால் வருவதே இன்பம். அறவழியில் நின்று பொருள் ஈட்டி, அதனைக்கொண்டு இன்பவாழ்வு வாழ வேண்டும். அவ்வாறு உலகமாந்தரும் இன்பமுறச் செய்யவேண்டும். பொருளியலாகிய பொதுவாழ்வுக்கும் இன்ப இயலாகிய தனிவாழ்வுக்கும் அடிப்படை அறம்தான் என்பது இந்நூலின் மொத்தமான நோக்கு.
இந்நூல் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) பிரித்தும், அழகுடன் இணைத்தும், கோர்த்தும் விளக்குகிறது.
நூற் பிரிவுகள்
திருக்குறள் அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று பால்களும் கொண்டமையால் "முப்பால்" எனப் பெயர் பெற்றது. முப்பால்களாகிய இவை ஒவ்வொன்றும் "இயல்" என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட எண்ணிக்கையான அதிகாரங்களைக் கொண்டதாக விளங்குகின்றது. ஒவ்வொரு அதிகாரமும் பத்து பாடல்களைத் தன்னுள் அடக்கியது. ஆனால், குறளின் அதிகாரங்கள் ஏன் 10 குறள்களைக் கொண்டுள்ளன என்பதற்கான விளக்கத்தினை இன்றைய ஆய்வாளர்கள் அறியவில்லை.
அறத்துப்பால்
திருக்குறளின் அறத்துப்பாலில் "பாயிரவியல்" 4 அதிகாரங்களும் பாயிரவியலைத் தொடர்ந்து முதலாவதாக 20 அதிகாரங்களுடன் "இல்லறவியல்" அடுத்து 13 அதிகாரங்கள் கொண்ட துறவறவியல் இறுதியில் "ஊழ்" என்னும் ஒரே அதிகாரம் கொண்ட "ஊழியல்" என வகைபடுத்தப் பட்டுள்ளது. திருக்குறளில் ஒரே ஒரு அதிகாரம் உடைய இயல் "ஊழியல்" மட்டுமே. முதற்பாலாகிய அறத்துப்பாலில் மொத்தம் 38 அதிகாரங்கள்.
பொருட்பால்
அடுத்து வரும் பொருட்பாலில் அரசு இயல், அமைச்சு இயல், ஒழிபு இயல் ஆகிய இயல்கள் இருக்கின்றன. அரசு இயலில் 25 அதிகாரங்கள் உள்ளன. அமைச்சு இயலில் 32 அதிகாரங்களும், ஒழிபு இயலில் 13 அதிகாரங்களுமாக மொத்தம் 70 அதிகாரங்கள் உள்ளன.
காமத்துப்பால்
கடைசிப்பாலாகிய "இன்பத்துப்பால்" அல்லது "காமத்துப்பாலில்" களவியல் மற்றும் கற்பியல் என இரண்டு இயல்கள். களவியலில் 7 அதிகாரங்களும், கற்பியலில் 18 அதிகாரங்களுமாக மொத்தம் 25 அதிகாரங்கள் உள்ளன. ஆகமொத்தம் 9 இயல்கள்; 133 அதிகாரங்கள்; 1330 பாடல்கள். திருக்குறளை மொத்தம் 14000 சொற்களில் திருவள்ளுவர் பாடியுள்ளார்.
திருக்குறள் நூலமைப்பைப் பொறுத்தமட்டில், அது மூன்று பெரும் பிரிவுகளைக் கொண்டுள்ளது. பாயிரத்தில் வைக்கப்பட்டுள்ள நான்கு அதிகாரங்களுள் கடவுள் வாழ்த்து, அறம் வலியுறுத்தல், நீத்தார் பெருமை என்பவை மக்களின் முழுக் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டதாகவும், வான் சிறப்பு மட்டும் மக்களின் முழுக் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டதாகவும் உள்ளது.
திருக்குறளும் எண் குறித்த தகவல்களும்
திருக்குறளின் மூன்று பால்களும், ஒவ்வொன்றிலும் 38 (பாயிரவியல் நீக்கி) , 70, 25 என்ற எண்ணிக்கையான அதிகாரங்கள் உள்ளதாக அமைக்கப்பட்டு, அந்த எண்களின் இலக்கங்களைக் கூட்டினால் 7 என்ற கூட்டெண் வரும் விதத்திலும் நூல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஒட்டு மொத்த அதிகாரங்களான 133 இன் எண்களைக் கூட்டினாலும், கூட்டெண் 7ஆக வரும் விதத்திலேயே நூல் அமைக்கப்பட்டு்ள்ளது. ஒட்டு மொத்தத்தில், திருக்குறளின் நூலமைப்பானது 7 என்ற எண்ணுக்கு அதிமுக்கியத்துவம் கொடுக்கும் விதத்தில்தான் அமைக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், திருக்குறளின் நூலமைப்பானது 3, 4, 9, 10 என்ற எண்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்தே அமைக்கப்பட்டுள்ளது. இவை தற்செயலாக நடைபெற்றதா? இல்லையா? என்பது பற்றியும், இவ்வெண்கள் எங்கேனும் தமிழரின் வாழ்வியலில் நெறிமுறைகளில் முக்கியத்துவம் பெற்றுள்ளனவா? இல்லையா? என்பது பற்றியும், இந்த எண்கள் ஒரு குறிப்பிட்ட போதனையில் முக்கியத்துவம் பெறுவதாக இருந்தால், அது எது என்பதையும் இன்றுவரை ஆய்வாளர்கள் ஆராய்ந்து, எதனையும் கூறவில்லை.
மற்றைய புறத்தில், திருக்குறளின் ஆரம்பத்தில் வைக்கப்பட்டுள்ள நான்கு அதிகாரங்களும் என்ன அடிப்படையில் வைக்கப்பட்டுள்ளன, அவைகள் ஏதாவது போதனை அடிப்படையில்தான் வைக்கப்பட்டுள்ளனவா, இல்லையா என்பது பற்றியும் ஆய்வாளர்களால் ஆராயப்பட்டு, சரியான முடிவுக்கு வரப்படவில்லை.
திருக்குறள் நூற் பிரிவு அட்டவணை
திருக்குறள் நூற் பிரிவுகள் பின்வரும் அட்டவணையில் தரப்பட்டுள்ளன.
அறத்துப்பால் (1-38)
|
பொருட்பால் (39-108)
|
காமத்துப்பால் (109-133)
|
உள்ளடக்கம்
வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் திருக்குறள் கூறுவதால், அதைச் சிறப்பித்துப் பல பெயர்களால் அழைப்பர்: திருக்குறள், முப்பால், உத்தரவேதம், தெய்வநூல், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ் மறை, திருவள்ளுவம் என்ற பெயர்கள் அதற்குரியவை. கருத்துக்களை இன, மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி உள்ளதால் இந்நூல் "உலகப் பொது மறை" என்றும் அழைக்கப்படுகிறது.
எடுத்துக்காட்டுக் குறள்கள்.
- "எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
- மெய்ப்பொருள் காண்ப தறிவு." (திருக்குறள் - 423)
- "எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
- கண்ணென்ப வாழும் உயிர்க்கு." (திருக்குறள் - 392)
- "உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
- இடுக்கண் களைவதாம் நட்பு." (திருக்குறள் - 788)
உரைகள்
பழங்காலத்தில் இதற்குப் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் புகழ் வாய்ந்ததாக விளங்குவதும் அதிகமாகப் பயன்படுத்தப்படுவதும் பரிமேலழகர் உரைதான்.
தருமர் மணக்கும் தாமத்தார் நச்சர்
பரிதி பரிமே லழகர்-மல்லர்
பரிப்பெருமாள் காலிங்கர், வள்ளுவர்நூற்கு
எல்லையுரை செய்தா ரிவர்.
என்கிறது பழைய வெண்பா .
தற்காலத்திலும் திருக்குறளுக்கு மு. வரதராசன், மு. கருணாநிதி, சாலமன் பாப்பையா உட்பட பலர் விளக்க உரைகளை எழுதியுள்ளனர். இவற்றுள் சிறப்பாகக் கருதப்படுவது டாக்டர் மு.வரதராசனார் அவர்களது நூலாகும். திருக்குறள் பாடல்களுக்கு அதிகாரம் ஒன்றுக்கு இரண்டு பாடல்கள் அல்லது கலிப்பா ஒன்று என்ற முறையில் எழுதப்பட்டுள்ள திருக்குறள் பாவுரை என்னும் நூலும் உள்ளது
உலக மொழிகளில் திருக்குறள்
ஐரோப்பிய மக்களுக்கு லத்தீன் மொழியில் 1730 இல் திருக்குறளை அறிமுகப்படுத்தியவர் வீரமாமுனிவர் ஆவார்.[4] திருக்குறள் கருத்துக்களை (Extracts from “Ocean of Wisdom”) 1794ஆம் ஆண்டு முதன் முறையாக ஆங்கில மொழியில் அறிமுகப்படுத்தியவர் கின்டெர்ஸ்லே[5][6]
மொழிபெயர்ப்புகள்
உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் மூன்றாம் இடத்தைத் திருக்குறள் வகிக்கிறது . இதுவரை 107 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.[7]
இந்திய மொழிகள்
குஜராத்தி, இந்தி, வங்காள மொழி, கன்னடம், கொங்கணி மொழி, மலையாளம், மராத்தி, மணிப்புரியம், ஒரியா, பஞ்சாபி, இராஜஸ்தானி, சமற்கிருதம், சௌராட்டிர மொழி, தெலுங்கு போன்ற 14 மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது
ஆசிய மொழிகள்
அரபி, பருமிய மொழி, சீனம், பிஜியன், இந்தோனேசிய மொழி, யப்பானியம், கொரிய மொழி, மலாய், சிங்களம், உருது போன்ற 10 மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய மொழிகள்
செக், டச்சு, ஆங்கிலம், பின்னிய மொழி, பிரெஞ்சு_மொழி, செருமன், அங்கேரிய மொழி, இத்தாலிய மொழி, இலத்தீன், நார்வே மொழி, போலிய மொழி, ரஷிய மொழி, எசுப்பானியம், சுவீடிய மொழி ஆகிய 14 ஐரோப்பிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.[8]
திருக்குறள் நூலாராய்வு
நூலின் அமைப்பு முறை
முதலாவது அதிகாரமான ”கடவுள் வாழ்த்து”
இந்த அதிகாரத்தில் போற்றப்பட்டிருப்பவன் ஆதிபகவன், வாலறிவன், மலர்மிசை ஏகினான், வேண்டுதல் வேண்டாமையிலான், பொறிவாயில் ஐந்தவித்தான், தனக்குவமை இல்லாதான், அறவாழி அந்தணன், எண்குணத்தான், இறைவன் என்பவைகளால் விபரிக்கப்பட்டுள்ளான்.
வெவ்வேறு சாரார் இந்த விபரிப்புக்களுள் ஒருசிலவற்றை மாத்திரம் எடுத்து, அவை இன்ன இன்ன கடவுள்களுடன், அல்லது போதனையாளனுடன் ஒன்றுவதால், திருக்குறள் இன்ன சமயம் சார்ந்தது என்ற கருத்தினை முன்வைத்து, திருக்குறளானது ஜைனம், சைவம், வைணவம், வைதீகம் எனச் சகல சமயங்களுடனும் இணைக்கப்பட்டு வருகிறது.
மேலும், ஆதிபகவன், வாலறிவன்,இறைவன் என்பவைகளின் பொருள்களைச் சரியாக அறிய, தமிழ் எழுத்து மொழியின் தொல்காப்பியன் குறிப்பிட்ட‘மொழிப் பொருட் காரணம்‘ அறிந்திருக்கப்படவேண்டும் என்ற வாதமும் அச்சாராரரால் முன்வைக்கப்பட்டுள்ளது.
இச்சாரார் தமிழ் எழுத்து மொழியில், மூலத்தனியொலிகள் ஒவ்வொன்றும் 'தன்மை' (nature) அடிப்படையில் குறிப்பிட்ட ஒரு விபரிப்பினைச் செய்கிறது எனவும்; குறிப்பிட்டவொரு ஒழுங்கில் அமைக்கப்பட்ட பல்வேறு மூலத்தனியொலிகளின் இணைவால் உண்டாகும் பூரண விபரிப்பினைச் செய்யும் இணையொலியே ‘சொல்‘ எனவும்; குறிப்பிட்டவொரு பூரண விபரிப்பானது நாம் வாழும் சுற்றத்திலும், பிரபஞ்சத்திலும் என்னனென்ன பொருட்களில் அடையாளங்காணப்படுகிறதோ, அவைகள் எல்லாம் அச்சொல்லின் ‘பொருள்கள்‘ ஆகமுடியும் எனவும்; இவற்றுள் எவையெவைகளைப் பொருள்களாகக் கொள்ளும் ‘மரபு‘ இருந்து வந்துள்ளதோ, அதற்கேற்ப அவைகள் பொருள்களாகக் கொள்ளப்படும் என்ற முடிவையும் கொண்டுள்ளனர்.
திருக்குறள் என்ன நூல் என்பதை இதுவரை காலமும் ஆராய்ந்தறியாத நிலையில், அதனை வெளியிட்டவர்கள் அதன் ஆரம்பத்தில் வைக்கப்பட்டுள்ள அதிகாரங்களின் ஒழுங்கினைக் கடவுள் வாழ்தது, வான் சிறப்பு, நீத்தார் பெருமை,அறன் வலியுறுத்தல் என்ற ஒழுங்கில் அமைத்து வந்தமை பிழையானது எனவும், இந்த அதிகாரங்களினது ஒழுங்கானது கடவுள் வாழ்த்து, அறன் வலியுறுத்தல், நீத்தார் பெருமை, வான் சிறப்பு என எதிர்கால வெளியீடுகளில் திருத்தி அமைக்கப்படவேண்டும் என்பதும் இச்சாராரின் முடிவாகும்.
சுவையான தகவல்கள்
- திருக்குறளில் ‘தமிழ்‘ என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை.
- திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு-1812
- திருக்குறளின் முதல் பெயர்- முப்பால்
- திருக்குறளில் உள்ள அதிகாரங்கள்- 133
- திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-380
- திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள்-700
- திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-250
- திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள்-1330
- திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது.
- ஒவ்வொரு குறளும் இரண்டு அடிகளால், ஏழு சீர் களை கொண்டது.
- திருக்குறளில் உள்ள சொற்கள்-14,000
- திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்- 42,194
- திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-இல், 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை
- திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள்-அனிச்சம், குவளை
- திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம்- நெருஞ்சிப்பழம்
- திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை- குன்றிமணி
- திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து-ஒள
- திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம்- குறிப்பறிதல்
- திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள்- பனை, மூங்கில்
- திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரெழுத்து-னி
- திருக்குறளில் ஒரு சொல் அதிக அளவில், அதே குறளில் வருவது "பற்று" - ஆறு முறை.
- திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள்-ளீ,ங
- திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள்- தமிழ், கடவுள் ( அகர முதல என தொடங்கும் முதல் குறள் கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் உள்ளது, இதில் ஆதி பகவன் - என்பது கடவுளை குறிக்கிறது)
- திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர்- தஞ்சை ஞானப்பிரகாசர்
- திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர்-மணக்குடவர்
- திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்- ஜி.யு,போப்
- திருக்குறளை உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர்-பரிமேலழகர்
- திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண்- ஒன்பது.
- திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.
- எழுபது கோடி என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம்பெற்றுள்ளது.
- ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.
- திருக்குறள் இதுவரை 107 மொழிகளில் வெளிவந்துள்ளது.
- திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர்
- திருக்குறள் நரிக்குறவர் பேசும் வக்போலி மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
- Cutler, Norman (1992). "Interpreting Thirukkural: the role of commentary in the creation of a text". The Journal of the American Oriental Society 122. http://www.questia.com/googleScholar.qst;jsessionid=GLvhZT9rv6h6WZXdrVkPGRdXRhfw2Q7BZrnpRXhbddz8YKCfPtZG!644681601?docId=5000163847. பார்த்த நாள்: 20 August 2007.
- "Literature – Thirukural". Tamilnadu.com (3 April 2013).
- திருவள்ளுவர் ஆண்டுமுறை
- The Tamil Plutach: containing a summary account of the lives of the poets and poetesses of southern India and Ceylon from the earliest to the present times, with select specimens of their compositions, Simon Casie Chitty – January 1, 1859. Ripley & Strong, printers – Publisher
- திருக்குறள் பரிமேலழகருரையுடன், திருக்குறள் பதிப்பு நிதி வெளியீடு; ஸ்ரீ காசிமடம் ; திருப்பனந்தாள்; 1968
- http://www.oocities.org/nvkashraf/kur-trans/translations.htm
- Thirukkural
- Thirukkural translations in different languages of the world
வெளி இணைப்புகள்
![]() |
விக்கிநூல்களில் மேலதிக மேலதிகவிவரங்களுள்ளன: திருக்குறள் |
- குறள்திறன் இணையதளம்
- திருக்குறள்.net
- திருக்குறள்.com
- "திருக்குறள்". அகரமுதலி.
- மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டத்தில் உள்ள திருக்குறள் தொகுப்பு
- சென்னை IIT வழங்கும் (தமிழில் குறள்களுடன்)ஜி. யு. போப்பின் திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பும் உரையும்
- திருக்குறள் - இலக்கியம்
- Tirukkural in Tamil and English—Valaitamil.com
- G. U. Pope's English Translation of the Tirukkural
- "Thirukuralisai"—an app promoting Tirukkural through music
- @thirukkuralapps – An interactive twitter search app for Thirukkural in English and Tamil.