குறள் திறன் இணையதளம்
குறள் திறன் இணையதளத்தில் மணக்குடவர், பரிமேலழகர், மு. வரதராசன், இரா. சாரங்கபாணி, தெ. பொ. மீனாட்சிசுந்தரம், நாமக்கல் இராமலிங்கம், காலிங்கர், வ.சுப. மாணிக்கம், திரு. வி. க, குன்றக்குடி அடிகளார், தமிழண்ணல் போன்றோரின் திருக்குறள் விளக்க உரைகளுடன், நிறையுரையும், திருக்குறள் பாக்களை இலக்கண, இலக்கியங்களுடன் மிகவும் விரித்து தருகிறது. இது யாராலும் பயன்படுத்தக்கூடிய, இலாப நோக்கமற்ற இணையத்தளம் ஆகும். [1]
இணையத்தில் உலா வருவோர் குறள் நல்கும் இலக்கிய இன்பத்தைத் துய்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன் உருவாக்கப்பட்டது இந்த இணையதளம். ஒவ்வொரு குறளுக்குமான திறன் பக்கங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. அதுபோலவே ஒவ்வொரு அதிகாரத்திற்கும் விளக்கக் கட்டுரை வழங்கப்பட்டுள்ளது. இத்தளத்தில் பால்வகை, இயல்வகை, அதிகாரவகை, குறள் எண் வகையாக குறளையும் அதற்கான உரைகளையும் தேடலாம். திருவள்ளுவர், திருக்குறள், தமிழ் உரையாசிரியர்கள், திருவள்ளுவமாலை, குறளில் குறைகள், பாடவேறுபாடுகள், நறுஞ்செய்திகள் என்னும் தலைப்புக்களில் கட்டுரைகளும் உள்ளது.
நோக்கமும் இலக்கும்
திருக்குறளுக்கு பல உரைகளும், திறனாய்வு நூல்களும் தோன்றியதால் குறள் கூறும் கருத்து என்ன என்று புரிந்து கொள்வதில் சில சமயங்களில் மயக்கமும் குழப்பமும் உண்டாகின்றன. திருக்குறள் சொல்லும் உண்மையான கருத்துக்களை அறிந்து கொள்ளும் ஆர்வம் நாளும் பெருகி வருகிறது. ஒரு குறளுக்கமைந்த பல ஆய்வு உரைகளின் செய்திகளைத் தொகுத்து, அவற்றுள் குறட்கருத்துக்குப் பொருத்தமானது எது என்று தெளிவிக்கும் முயற்சியாக அமைந்ததே இத்தளம். மேலும் திருக்குறளுக்கு இத்தளத்தின் கருத்துரையும் சேர்த்து வழங்கப்படுகிறது.
இணையதள நுகர்வோரை இலக்காக வைத்து, வள்ளுவ உள்ளத்தை அவர்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்துடன் குறள் திறனாய்வு செய்யப்படுவதுடன், குறளின் பொருள் உணர்ந்து நூற்பயன் துய்த்து மேலும் பலரைப் படிக்கத்தூண்டவேண்டும் என்பதும் ஒரு நோக்கமாகும்.
தள அமைப்பு
திறன் பக்கங்கள் ஒவ்வொன்றும் குறள், அதன் பொழிப்புரை மு. வரதராசன் உரையுடன் தொடங்குகிறது. அதன்பின் மணக்குடவர், பரிமேலழகர் மற்றும் நாமக்கல் கவிஞர் ஆகிய மூவரின் உரைகள் கொடுக்கப்பட்டுள்ளது. பின்னர் பொருளை எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் பொருள்கோள் வரி அமைப்பு என்பதாக குறட்செய்யுளின் சீர்கள் மாற்றித் தொடுக்கப்பட்டுத் தரப்பட்டுள்ளன. அடுத்து குறள் இரண்டு தொடர்களாகப் பிரிக்கப்பட்டு விளக்க உரைகள் இடம்பெற்றுள்ளன. நிறையுரை தொகுப்பும் கூறப்பட்டுள்ளது. இறுதியாக அதிகார இயைபு கூறப்பட்டு பொழிப்பு இடப்பட்டுள்ளது.