இராம. பெரியகருப்பன்

தமிழண்ணல் என்கிற இராம. பெரியகருப்பன் (12 ஆகத்து 1928 - 29 திசம்பர் 2015) ஒரு தமிழறிஞர் ஆவார்.

வாழ்க்கையும், கல்வியும்

சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை என்ற ஊரில் பிறந்தவர். தந்தை பெயர் இராமசாமி செட்டியார். தாயார் பெயர் கல்யாணி ஆச்சி. பள்ளத்தூர், ஏ.ஆர்.சி. உயர்நிலைப்பள்ளியிலும், மேலைச்சிவபுரி, கணேசர் செந்தமிழ் கல்லூரியிலும் கல்வி கற்றார். 1948 இல் திருவையாறு அரசர் கல்லூரியிலும் பயின்று தமிழ் வித்துவான் பட்டம் பெற்றார். வசதி இல்லாததால் கல்லூரியில் சேராமல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை (பொருளியல்) (1948), முதுகலைத் தமிழ்(1961) ஆகிய பட்டங்களை தனிப்படிப்பின் வழியாகத் தேர்ச்சிப்பெற்றார்.மதுரை தியாகராசர் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றிய காலத்தில் சங்க இலக்கிய மரபுகள் என்னும் பொருளில் ஆய்வு செய்து 1969இல் முனைவர் பட்டம் பெற்றார். முனைவர் சி.இலக்குவனாரும், முனைவர் அ.சிதம்பரநாதனாரும் இவர்தம் ஆய்வு நெறியாளர்கள் ஆவர்[1]

பணிகள்

13 ஆண்டுகள் காரைக்குடியில் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். இவரது முயற்சியையும், கடின உழைப்பையும், சங்க இலக்கியத்தில் இருந்த ஈடுபாட்டையும் பாராட்டி, மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த மு. வரதராசனார், பல்கலைக்கழகத்தில் பணியளித்ததோடு இரண்டே ஆண்டுகளில் இணைப்பேராசிரியராகப் பதவி உயர்வும் அளித்தார். 1981-82 ஆம் கல்வியாண்டில் பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் தேசியப் பேராசிரியராகவும் பணியாற்றினார்.

இரண்டாண்டுகள் பல்கலைக்கழக மானியக் குழுவின் சிறப்புப் பேராசிரியராகப் பணியாற்றினார். தமிழ்க்குடிமகன், கா. காளிமுத்து உள்பட ஐம்பதுக்கும் மேற்பட்டோருக்கு ஆய்வு வழிகாட்டியாகவும் சாகித்ய அகாதெமியில் 10 ஆண்டுகள் உறுப்பினராகவும் இருந்தார். தமிழ் இலக்கணம்குறித்து ஐம்பதுக்கும் மேற்பட்ட கட்டுரைகள், நூல்கள், சங்க இலக்கியம், ஒப்பிலக்கியம், நாட்டுப்புறப் பாடல்கள், ஆய்வில் துறைகள் விரிவாக அமைய பல அடிப்படை நூல்கள் எழுதியுள்ளார்.

தினமணி இதழில் வளர்தமிழ்ப் பகுதியில் உங்கள் தமிழைத் தெரிந்து கொள்ளுங்கள் என்ற தலைப்பில் எழுதியவற்றை வளர்தமிழ் : உங்கள் தமிழைத் தெரிந்து கொள்ளுங்கள் என்ற தலைப்பில் தொகுத்து வெளியிட்டுள்ளார்.

புதிய நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு (நூல்) என்ற நூலில் புதிய நோக்கில் தமிழ் மொழியின் இலக்கிய வரலாற்றைப் பல கோணங்களில் விவாதிக்கிறார்.

சிங்கப்பூர் அரசு பள்ளிகளுக்காக தமிழ் பாட நூல்களையும் எழுதி உள்ளார்.[2]

சிறப்பு

மதுரை காமராசர் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், வெங்கடேசுவரா பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், கோழிக்கோடு பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டக்குழு உறுப்பினராகப் பணிபுரிந்தர் இவர். தமிழறிஞர்கள் சாகும்வரை உண்ணாநோன்பு போராட்டம் நிகழ்த்திய பொழுது அறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் போராட்டத் தலைமையிலிருந்து விலகிக்கொண்டபொழுது தாமே முன்வந்து தமிழ்வழிக் கல்விக்காகச் சாகும்வரை உண்ணா நோன்பில் தலைமைதாங்கி நடத்தியவர் இவர். தமிழக அரசால் சாகித்திய அகாதெமியின் பொதுக்குழு உறுப்பினராகத் தேர்ந்ததெடுக்கப்பட்டார். 1985 முதல் ஞானபீட விருதுக்குரிய கருத்துரைஞர் குழுவில் பணியாற்றி வருகிறார். தமிழக அரசின் சங்க இலக்கியக்குறள் பீடத்தின் துணைத் தலைவராகவும் பணிபுரிந்தவர்

விருதுகள்

  • நல்லாசிரியர் விருது
  • 1989இல் திரு. வி. க. விருது
  • 1995இல் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழ்ச் செம்மல் விருது [3]
  • மத்திய அரசின் செம்மொழி விருது
  • தமிழக அரசின் கலைமாமணி விருது
  • எஸ்ஆர்எம் பல்கலைக்கழக தமிழ்ப் பேராயத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது,
  • கவிதை நூலுக்காக மதுரை மீனாட்சி விருது

மறைவு

தமிழண்ணல் மதுரை சதாசிவ நகரில் உள்ள அவரது இல்லத்தில் 2015 டிசம்பர் 29 செவ்வாய்க்கிழமை இரவு காலமானார்.[4]

குறிப்புகளும் மேற்கோள்கள்

  1. http://tamil.oneindia.com/news/tamilnadu/veteran-tamil-scholar-thamizhannal-passes-away-243394.html
  2. மத்திய அரசின் செம்மொழி விருது பெற்ற தமிழறிஞர் தமிழண்ணல் மரணம்
  3. தினமணி தீபாவளி மலர்,1999,தலைசிறந்த தமிழர்கள். பக்கம்122
  4. "தமிழறிஞர் தமிழண்ணல் காலமானார்". தினமணி (30 டிசம்பர் 2015). பார்த்த நாள் 30 திசம்பர் 2015.

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.