பல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா)
இந்தியாவின் பல்கலைக்கழக மானியக் குழு (University Grants Commission) இந்தியாவின் பல்கலைக்கழகக் கல்வியினை ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிடவும், தரக்கட்டுப்பாடு செய்யவும் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பாகும். 1956 ஆம் ஆண்டு இந்திய நடுவண் அரசால் நிறுவப்பட்ட சட்டரிதியான அமைப்பாகும். இந்தியப் பல்கலைக்கழகங்களுக்கு ஏற்பு வழங்குதல், அரசு பல்கலைக்கழங்களுக்கு நிதி மானியங்கள் வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொள்கிறது. தில்லியில் தலைமையகத்தைக் கொண்டுள்ள இதற்கு புனே, போபால், கொல்கத்தா, ஐதராபாத்து, கௌகாத்தி, பெங்களூரு ஆகிய நகரங்களில் துணை அலுவலகங்கள் உள்ளன.
![]() | |
சுருக்கம் | UGC |
---|---|
உருவாக்கம் | திசம்பர் 28, 1953 |
தலைமையகம் | புது தில்லி |
அமைவிடம் | |
அவைத்தலைவர் | பேரா. வேத் பிரகாஷ் [1] |
சார்புகள் | உயர்கல்வித் துறை, மனித வள மேம்பாட்டு அமைச்சகம் |
வலைத்தளம் | www.ugc.ac.in |
வரலாறு
கல்விக்கான மத்திய ஆலோசனைக்குழு இந்தியாவில் போருக்கு பின்னர் ஏற்பட்ட கல்வி வளர்ச்சியைப் பற்றி 1944 ல் அளித்த அறிக்கை ( சார்ஜியன்ட் அறிக்கை) பல்கலைக் கழக மான்ய குழு அமைக்க பரிந்துரை செய்தது. முதன் முதலில் 1945 ஆம் ஆண்டு அலிகார்க்,பனாரஸ் மற்றும் டெல்லி மத்திய பல்கலைக்கழகங்களை மேற்பார்வையிட பல்கலைக்கழக மான்யக் குழு அமைக்கப்பட்டது. 1947 ஆம் ஆண்டு முதல் அப்போது இருந்த அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் விரிவாக்கப்பட்டது. சுதந்திரத்திற்குப் பின்னர் சர்வபள்ளி ராதா கிருஷ்ணன் அவர்களை தலைவராக நியமித்து 1948 ஆம் ஆண்டு பல்கலைக் கழக கல்விக்குழு அமைக்கப்பட்டது. அக்குழு இங்கிலாந்து பல்கலைக்கழக மான்யக் குழு மாதிரி வடிவில் ஒரு முழு நேர தலைவராகவும் மற்றும் சிறந்த கல்வியாளர்களை உறுப்பினராகவும் கொண்டு அமைக்கலாம் என பரிந்துரை செய்தது. 1952 ஆம் ஆண்டு மத்திய அரசாங்கம் அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களுக்கான பொது நிதி உதவிகளை இனிமேல் பல்கலைக் கழக மான்யக் குழுவின் முலம் தான் கொடுக்கப்பட வேண்டும் என முடிவெடுத்தது. அதன் தொடர்ச்சியாக அப்போதயை மத்திய கல்வி, இயற்கை வளங்கள் மற்றும் விஞ்ஞான ஆராய்ச்சி அமைச்சர் மொலானா அபுல் காலம் அசாத் அவர்களால் டிசம்பர் 28 1953 அன்று முறையாக தொடங்கி வைக்கப்பட்டது. 1956 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் பராளுமன்றத்தில் பல்கலைக்கழக மான்யக்குழு சட்டம், 1956 இயற்றி முறைப்படுத்தியது.