வீ. முனிசாமி

திருக்குறள் வீ.முனிசாமி (செப்டம்பர் 26, 1913 - சனவரி 4, 1994)[1] தமிழறிஞரும் அரசியல்வாதியும் ஆவார். உலகப் பொதுமறை திருக்குறள் வகுப்புகள் நடத்தியும், தொடர் சொற்பொழிவுகள் ஆற்றியும் திருக்குறளுக்காகப் பணி செய்தவர். திருக்குறள் மக்களின் அன்றாடப் பயன்பாட்டில் இருக்க வேண்டும் என விரும்பிய இவர், தமிழகத்தின் மூலை, முடுக்கெங்கும் பயணம் செய்து திருக்குறள் பரப்பும் பணியில் ஈடுபட்டார். 1952-1957 காலப்பகுதியில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.

வாழ்க்கைக் குறிப்பு

விழுப்புரம் அருகே உள்ள தோகைப்பாடி என்ற ஊரில் அ. வீராசாமிக்கும் வீரம்மாளுக்கும் மகனாக 1913 செப்டம்பர் 26ஆம் நாள் பிறந்தார் முனிசாமி. திருச்சியிலுள்ள தூய சூசையப்பர் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர் திருச்சி தூய சூசையப்பர் கல்லூரியில் பயின்று பொருளியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். சென்னை சட்டக்கல்லூரியில் பயின்று சட்ட இளவர் பட்டம் பெற்றார். 1943ஆம் ஆண்டில் தமிழ் வித்துவான் புகுமுக நிலையில் தேறினார்.[2]

திருக்குறள் பரப்பும் பணி

திருச்சி தூய சூசையப்பர் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் பொழுதே முனுசாமிக்கு திருக்குறளின் மீது ஆழ்ந்த ஈடுபாடு ஏற்பட்டது. 1330 குறட்பாக்களையும் மனப்பாடம் செய்த அவர், திருக்குறளை நகைச்சுவையாகவும் நயமாகவும் அன்றாட வாழ்க்கைக்குப் பொருத்தமாக இருக்குமாறும் மக்களுக்குச் சொல்ல வேண்டும் எனும் முயற்சியில் ஈடுபட்டார் 1935 ஆம் ஆண்டில் திருச்சி மலைக்கோட்டை நூற்றுக்கால் மண்டபத்தில் தனது திருக்குறள் பரப்பும் பணியை ஆரம்பித்தார்.

1941 ஆம் ஆண்டு முதன்முதலாக சேலத்தில் இவர் நடத்திய திருக்குறள் மாநாட்டில் தேவநேயப் பாவாணர் உள்ளிட்ட தமிழறிஞர்கள் பங்கேற்றனர். சென்னை புரசைவாக்கத்தில் தங்கி, சட்டப் படிப்பினை மேற்கொண்டு திருக்குறள் வகுப்பினையும் நடத்தியபோது தமிழறிஞர்கள் அ.கி.பரந்தாமனார், நடேசனார், வடிவேலனார் ஆகியோருடன் இணைந்து குறட்பாக்களை அட்டைகளில் எழுதி தெருக்கள் தோறும் தமிழ் முழக்கம் செய்யும் தொண்டிலும் திருக்குறளார் ஈடுபட்டார். தொடர்ந்து சென்னையில் இவர் முன்னின்று நடத்திய திருக்குறள் மாநாட்டில், பேராசிரியர்கள் ரா.பி.சேதுப்பிள்ளை, சுப்பிரமணியப்பிள்ளை, இராசாக்கண்ணனார் உள்ளிட்டவர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

தந்தை பெரியார் 1948 இல் சென்னை ராயபுரத்தில் நடத்திய திருக்குறள் மாநாட்டில் திரு.வி.க., தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், கல்விக்கடல் சக்கரவர்த்தி நயினார், நாவலர் நெடுஞ்செழியன் ஆகியோருடன் பங்கேற்று திருக்குறளார் சிறப்புச் சொற்பொழிவாற்றினார்.

வள்ளுவரின் குறள் மக்களிடம் வேகமாகப் பரவியது. இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியும் தமிழ்ப் பாதுகாப்பு உணர்ச்சியும் மேலோங்கியிருந்த அக்காலகட்டத்தில் திருக்குறளாரின் திருக்குறள் புத்தகங்கள் ஆயிரக்கணக்கில் விற்பனையாயின.

பெரியார், பாரதிதாசன், ப.ஜீவானந்தம், காமராசர், டாக்டர் மு.வ., கி.ஆ.பெ.விசுவநாதம், ரா.பி.சேதுப்பிள்ளை, ந.மு.வேங்கடசாமி நாட்டார், நாவலர் சோமசுந்தர பாரதியார், குன்றக்குடி அடிகளார், கவியோகி சுத்தானந்த பாரதி, உ.வே.சா., மகாவித்வான் தண்டபாணி தேசிகர், சுவாமி சகஜானந்தா, சுவாமி விபுலானந்த அடிகளார், சர்.பி.டி.இராசன், சி.பா.ஆதித்தனார், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் உள்ளிட்ட தமிழறிஞர்களுடன் நட்புறவு கொண்டிருந்தார் திருக்குறளார்.

திருக்குறளாரின் பணியை ""குறட்பயன் கொள்ள நம்திருக் குறள்முனிசாமி சொல் கொள்வது போதுமே என புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் (1948) பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

1949 ஆம் ஆண்டு கடலூரில் கூட்டுறவு முறையில் திருக்குறள் அச்சகம் தொடங்கப்பட்டு, அதனைப் பொறுப்பேற்று நடத்தினார் திருக்குறளார். மேலும், "குறள் மலர்' இதழ் மூலம் மக்களிடையே திருக்குறள் பரவுமாறு செய்தார். தமிழகத்தில் மட்டுமல்லாது தலைநகர் தில்லியிலும், மும்பையிலும், கடல்கடந்து மலேசிய, சிங்கப்பூர் நாடுகளிலும் திருக்குறளாரின் திருக்குறள் பரப்பும் பணி தொடர்ந்தது.

நாடாளுமன்ற உறுப்பினராக (1952-1957) இருந்தபோது, நாடாளுமன்றக் கூட்டங்களில் திருக்குறளுடன் பேச்சைத் தொடங்கினார். நாடாளுமன்றப் பதிவேடுகளில் தனது பெயருக்கு முன்பு திருக்குறளார் என்பதை இடம்பெறச் செய்தார். நாடாளுமன்றத்தில் அப்போது மக்களவைத் தலைவராய் (சபாநாயகர்) இருந்த அனந்தசயனம் அய்யங்கார், திருக்குறளார் நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு நல்ல ஆர்வமும் ஊக்கமும் கொடுத்தார்.

இக்காலகட்டத்தை தில்லி மற்றும் சுற்றுவட்டாரங்களில் வாழும் தமிழர்களிடையே குறட்பாக்களை எடுத்துப் பேசுவதற்கு திருக்குறளார் பயன்படுத்திக் கொண்டார்.

1981 ஆம் ஆண்டு மதுரையில் நடந்த உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில், திருக்குறளுக்காக ஒரு நாளை ஒதுக்கிய அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர்., அந்த அரங்கிற்கு திருக்குறளாரை தலைமையேற்று நடத்தச் செய்தார். தமிழக அரசு தொடங்கிய திருக்குறள் நெறி பரப்பு மையத்திற்கு தொடர்ந்து நான்கு முறை இயக்குநராக நியமிக்கப்பட்டார் திருக்குறளார்.

பதிப்பித்த நூல்கள்

  1. திருக்குறள் மூலம்

இயற்றிய நூல்கள்

  1. அகமும் புறமும்
  2. அவள் சிரித்த சிரிப்பு
  3. இன்பத்தோட்டம்
  4. இன்பம் தரும் இன்பம்
  5. உலகப் பொதுமறை திருக்குறள் உரைவிளக்கம்
  6. ஏன் இந்த வாழ்வு
  7. வடலூரும் ஈரோடும்
  8. வள்ளுவர் உள்ளம்
  9. வள்ளுவர் ஏன் எழுதினார்
  10. வள்ளுவர் காட்டிய வழி
  11. வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப்பாதை
  12. வள்ளுவரைக் காணோம்
  13. வள்ளுவர் குறளும் ஈ.வெ.ர. வாழ்க்கையும்
  14. வள்ளுவர் வழிப்பயணம்
  15. வள்ளுவர் பூங்கா
  16. வள்ளுவரும் பரிமேலழகரும்
  17. வள்ளுவரும் பெரியாரும்
  18. திருக்குறள் அதிகாரவிளக்கம்
  19. திருக்குறள் இன்பம்
  20. திருக்குறள் உரைவிளக்கம்
  21. திருக்குறள் காமத்துப்பால் பொழிப்புரை
  22. திருக்குறளாரின் சிந்தனைகள்
  23. திருக்குறளில் நகைச்சுவை
  24. திருவள்ளுவரும் திராவிடக்கொள்கையும்

இவற்றுள் உலகப் பொதுமறை திருக்குறள் உரைவிளக்கம் என்னும் நூல் அவருக்கு அழியாப்புகழைக் கொடுத்தது. இதுபோன்ற விளக்க நூல் இதுவரை திருக்குறளுக்கு வெளிவரவில்லை என்ற சிறப்பைப் பெற்றது.

பட்டங்கள்

தமிழ்மறைக்காவலர், திருக்குறள் கேசரி, முப்பால் வித்தகர், திருக்குறள் இரத்தினம், நகைச்சுவை இமயம் என ஏராளமான பட்டங்கள் உலகத் தமிழர்களால் வழங்கப்பட்டன. ஆனாலும், 1951, ஜனவரி 23 இல் குடந்தை மாநகரில் உடையார்பாளையம் குறு நிலமன்னர் கச்சியுவரங்க காளாக்க தோழ உடையார் முதன் முதலில் அளித்த பட்டமான "திருக்குறளார்' எனும் பட்டமே இவருக்கு வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தது.

குடும்பம்

முனுசாமி 1939ஆம் ஆண்டில் திருச்சியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியர் மகளார் ஞானம்பாள் என்பவரை மணந்தார். இவர்கள் (1) குமரகுருபரன், (2)பாலசுப்பிரமணியன், (3) தேவிகுமாரி, (4) கோபிநாதன், (5) ஞானசூரியன், (6) திலகர், (7)ரேவதி, (8) தேவகுரு என்னும் சுந்தரராஜன் என்னும் 5 ஆண்களையும் 2 பெண்களையும் பெற்றார் .[2]

சான்றடைவு

  1. கோ.செங்குட்டுவன். "குறளுக்காக வாழ்ந்த திருக்குறளார் வீ.முனிசாமி (1913 - 1994)". பார்த்த நாள் 4 நவம்பர் 2018.
  2. கோ.பெரியண்ணன் எழுதிய திருக்குறள் வீ. முனிசாமி, சென்னை, அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம், 05.09.2013

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.