கோலாட்டம்

கோலாட்டம் என்பது பல்வேறு நிறங்கள் தீட்டப்பட்ட கழிகளைக் கொண்டு தாளத்துக்கும், இசைக்கும் ஏற்ப ஒன்றுடன் ஒன்று தட்டிக்கொண்டே ஆடும்[1] ஒரு நாட்டார் கலை. தமிழ் ஊர்களில் இது தொன்று தொட்டு ஆடப்படுகிறது. தமிழ்நாடு மற்றும் வட மாநிலங்களில் பல்வேறு பெயர்களில் இக் கலை நிகழ்த்தப்படுகிறது. கையில் கழிகளை வைத்தாடும் நாட்டார் கலை வடிவங்கள் நிறைய உண்டு. அவற்றில் கோலாட்டம் தனிச்சிறப்புப் பெற்ற ஒன்று. பல்வேறு பகுதிகளில் கண்ணன் பிறந்த நாளன்று சமயச்சடங்காகவும் இக்கலை நிகழ்த்தப்படுகிறது. ஆரம்ப காலத்தில் இக்கலையைத் திருமணமாகாத ஆண்கள் மட்டுமே நிகழ்த்தினர். இப்போது பெண்கள் பெரும்பான்மையாக இக்கலையில் பங்கேற்கிறார்கள். தமிழகத்தில் தென் மற்றும் வடகிழக்கு மாவட்டங்களில் ஆண்களும், பெண்களும் இணைந்து கோலாட்டம் நிகழ்த்துகிறார்கள். தொடக்கத்தில் மெதுவாக தொடங்கும் இசையும் ஆட்டமும் உச்சத்தில் முடிவுறும். இதற்கென தனி அடவுகளும் உண்டு. இக்கலை சிற்சில வேறுபாடுகளுடன் வட மாநிலங்களில் "தாண்டியா" என்ற பெயரில் நிகழ்த்தப்படுகிறது. கோலாட்டத்தைக் கற்றுக்கொடுக்கும் ஆசிரியரை ஆசான் என்பார்கள். ஆசான் இறந்து போனால் அவரது இறுதி ஊர்வலத்தில் அவரது மாணவர்கள் கோலாட்டம் நிகழ்த்தியபடி செல்வார்கள்.

கோலாட்டம்

காணிக்காரர்கள்/இனக்கலை

காணிக்காரர்கள் என்னும் ஆதியினம் கோலாட்டத்தைத் தங்கள் இனக்கலையாகக் கொண்டிருந்தது. காணிக்காரர்களின் தலைவர் மூட்டுக்காணியின் தலைமையில் ஓணம் பண்டிகை அன்று ஊர்ப்பொதுவிடத்தில் பிரமாண்டமான கோலாட்டம் நிகழ்த்தப்படும். காணிக்காரர்கள் கொரண்டி, கன்னங்கயிஞ்சி, சீதவெற்றம் ஆகிய மரங்களின் கம்புகளை கோலாட்டத்துக்கு உரிய கழியாகப் பயன்படுத்துவார்கள். இக்கழிகள் பளபளப்பாகவும், அடித்து ஆடும்போது கணீரென ஒலி எழுப்புவதாகவும் இருக்கும். அடர்ந்த காட்டுப்பகுதிகளில் மட்டுமே இக்கழி தரும் மரங்கள் வளர்கின்றன. இப்போது வனத்துறை நிர்ப்பந்தத்தால் காட்டுப்பகுதியை காலி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதால் கையில் கிடைக்கும் எந்தக் குச்சியையும் இவர்கள் பயன்படுத்துகிறார்கள். காணிக்காரர்களின் கோலாட்டத்தில் காடுகளின் செழிப்பு, சிறப்பு, இயற்கை, விலங்குகள், அவர்களின் குல தெய்வங்கள் என்பன பாடுபொருளாகக் கொள்ளப்படும். பிற சமூகத்தினரின் கோலாட்டத்தில் தலைவர்களின் சிறப்புகள், புராண, இதிசாகங்கள் என்பன பாடுபொருளாகக் கொள்ளப்படும்.

வகைகள்

ஒற்றைக் கம்பால் அடித்து ஆடுவது, இரட்டை கம்பால் அடித்து ஆடுவது என கோலாட்டத்தில் இரண்டு வகைக் கலையாடல்கள் உள்ளன. கோலாட்டம், பின்னல் கோலாட்டம், கோலாட்டக்கும்மி என மூன்று வகையான கலையாடல்கள் தமிழகத்தில் நிகழ்த்தப்படுகின்றன.

பின்னல் கோலாட்டம்

கோலாட்டத்தில் பின்னல் கோலாட்டம் பார்க்கச் சிறந்தது. பல வண்ணத் துணிகளையோ அல்லது கயிற்றையோ உத்தரத்திலிருந்து தொங்கவிட்டு அதை நடனமணிகளின் இடது கைக்கோலில் கட்டி அவர்கள் அசைவுகளைச் செய்யும்பொழுது மெதுவாகக் கயிறுகள் ஓர் அழகிய பின்னலாக பின்னப்படும். பிறகு ஆடிய முறையின் நேர் எதிர் முறையில் ஆடிப் பின்னல் அவிழ்க்கப்படும். இதற்குக் கிருஷ்ண லீலை பற்றிய பாடல்கள் இசைக்கப்படும். ஆடும் ஆண்களும் பெண்களும் வண்ண ஆடை அலங்காரங்கள் செய்து கொள்வார்கள். மன்னர்களும், அரசவை நாயகர்களும் இக்கலைக்கு மிகுந்த ஆதரவு அளித்து வந்திருக்கின்றனர்.

மரபு சாராத கோலாட்டம்

தமிழகத்தின் பிற பகுதிகளில் பள்ளி, கல்லூரி, அரசு விழாக்களில் மரபு சாராத கோலாட்டம் நிகழ்கிறது. கன்னியாகுமரியில் இயங்கும் களரி அமைப்பும், திண்டுக்கல்லில் இயங்கும் சக்தி கலைக்குழுவும் இக்கலையை விடாது இயக்குகின்றன.

புராணக்கதை

தேவர் உலகம் போர்க்களமாக மாறிக்கிடக்கிறது. தேவர்களை அழித்தொழிப்பது தான் தன் பிறப்பின் இலட்சியம் என்று உறுதியோடு போரிடுகிறான் பந்தாசுரன் என்ற கொடூர அசுரன். பந்தாசுரனை அழித்தொழிக்கும் நோக்கோடு களமாடுகின்றனர் தேவர்கள். இந்தப் போரில் தேவர்கள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பார்வதியம்மை ஒன்பது நாட்கள் கடும் தவம் புரிந்தாள். கடும் தவத்தால் பார்வதியின் பொலிவான முகம் அழகொழிந்து கருமை நிறமாகியது. அதிர்ந்துபோன சிவபெருமான் பல முயற்சிகளை மேற்கொண்டும் கருமைநிறம் களையவில்லை. பார்வதியின் தோழிகள் வருத்தமுற்று, நந்திதேவனை வணங்கி அவர் முன் கழிகளை ஆட்டியும், அடித்தும் நடனமாடினர். அவ்வாறு அவர்கள் ஆடிக்கொண்டிருக்கும் போதே பார்வதியின் முகத்தில் படர்ந்திருந்த கருமை அழிந்து பழைய பொலிவு முகத்தில் கூடி வந்தது. கோலாட்டத்தின் மேன்மையை விளக்கும் புராணக்கதை இது.

மேற்கோள்கள்

  1. தமிழ்நாட்டு நாட்டுப்புறக் கலைகள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.