கரகாட்டம்

கரகாட்டம் அல்லது "கராகம்" (கரகம்: 'நீர் பானை' நடனம்) தமிழர்களின் பாரம்பரிய ஆட்டங்களில் ஒன்று. தலையில் கரகம் வைத்து ஆடும் ஆட்டம் இதுவாகும். கரகம் என்பது ஒரு பானை வடிவ கமண்டலத்தைக் குறிக்கும். சங்க இலக்கியங்களில் கரகாட்டம் குடக்கூத்து என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பல விதங்களில் அலங்கரிக்கப்பட்ட கரகத்தை தலையில் வைத்தபடி, சமநிலை பேணி கரகாட்டம் ஆடப்படும். மாரியம்மனைப் புகழ்ந்து பாடிய ஒரு பண்டைய நாட்டுப்புற நடனம். மதுரை, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர், திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் கோவில் திருவிழாக்களில் கரகாட்டத்தோடு காவடியாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் என பல்வேறு நடனங்கள் நடைபெறும்.

கரகம்

கரகம் அமைக்கப்படும் முறை

அலங்கரிக்கப்பட்ட செம்பு அல்லது பித்தளை குடத்தைத் தலையில் வைத்துக்கொண்டு நையாண்டி மேள இசைக்கு ஏற்றவாறு குடம் கீழே விழாதவாறு பெண்கள் மற்றும் ஆண்கள் ஆடும் ஆட்டம் கரகாட்டம் எனப்படும். கரகம் என்ற வார்த்தைக்கு கமண்டலம், பூக்குடம், கும்பம், செம்பு, நீர்க்குடம் என்ற பல அர்த்தங்கள் உண்டு. கரகாட்டத்திற்கு 3 கிலோ எடையுள்ள செம்பினுள் 3 அல்லது 4 கிலோ மண்ணோ, அரிசியோ இட்டு ஒரு ரூபா நாணயமும் வைத்து கரகச் செம்பு தயாரிக்கப்படும். கரகம் என்பது விதைப்பாதுகாப்பின் ஒரு அங்கமாகவும்  இருந்து வந்திருக்கிறது. கரகத்தின் உள்ளே விதைகளை இட்டு வைத்து, வழிபட்டு, அந்த விதைகளை முளைப்பாரி என அழைக்கப்படும் விதைத்தேர்வு முறைக்கு அனுப்பி வைக்கும் கலாச்சாரம் நீண்ட காலமாக இருந்து வருகிறது.  ஒரு விதத்தில் விதைகளை கரகத்தின் வழியாக வழிபடும் முறை என்றும் சொல்ல முடியும். இந்த செம்பின் வாய்ப் பகுதியை தேங்காயால் மூடுவதற்கென்றே கட்டை வைத்திருக்கின்றனர். இதன் பின் டோப்பா எனப்படும் குடையை இதன்மேல் பொருத்தி வைப்பர். குடையின் மேலே கிளி, அன்னம், புறா போன்ற தக்கைப்பறவை உருவம் இருக்கும். தெய்வ வழிபாட்டிற்கு ஆடும் கரகம் "சக்திக்கரகம்' என்றும் தொழில்முறைக் கரகத்தை "ஆட்டக்கரகம்' என்றும் சொல்வர். தோண்டிக்கரகம் என்றால் மண்ணால் செய்யப்படுவது. பித்தளையால் செய்யப்படுவது செம்புக்கரகம் என்றும் அழைக்கப்படும். முன்பு ஆண்கள் பெண் வேடமிட்டு ஆடியதை இன்று பெண்களே ஆடுகின்றனர். இவ்வாட்டத்திற்கு நையாண்டிமேளம், சிறிய உடுக்கை, பெரிய உடுக்கை, சத்துக்குழல், செண்டை, பறை என்பன இசைக்கப்படுகின்றன. நாதஸ்வரத்தில் பாடல் வாசிக்க மேளம் முழங்க அந்த இசைக்கேற்ப கரகாட்டக் கலைஞர்கள் ஆடுவார்கள்.

கரகாட்ட வகைகள்

  • சக்தி கரகம் - பக்தி கலந்து கோயில்களில் ஆடப்படுவது.
  • ஆட்ட கரகம் - பொதுமக்கள் முன் அல்லது பொது நிகழ்வுகளில் ஆடப்படுவது

திரைப்படம்

மிகவும் பிரபலமான கரகாட்டக்காரன் திரைப்படம் ஜூன் 16, 1989ல் வெளியானது.

காட்சியகம்

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.