கரிக்குருவிக்கு உபதேசம் செய்த படலம்

கரிக்குருவிக்கு உபதேசம் செய்த படலம் அல்லது கருங்குருவிக்கு உபதேச திருவிளையாடல் என்பது சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களை விளக்கும் பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணம் நூலிலுள்ள 47 வது படலமாகும் (செய்யுள் பத்திகள்: 2274 -2296)[1]. மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஆவணி மூலத் திருவிழாவில் கருங்குருவிக்கு உபதேசம் செய்த திருவிளையாடல் நிகழ்ச்சி ஆண்டு தோறும் நடைபெறுகிறது.

புராண வரலாறு

முற்பிறப்பில் எவ்வளவோ புண்ணிய காரியங்கள் செய்திருந்தும், சிறிது பாவமும் செய்தமையால் ஒருவன் மறு பிறப்பில் கருங்குருவியாக பிறந்தான். அந்த கருங்குருவியை காகங்கள் மிகவும் துன்புறுத்தின. அவற்றிற்கு பயந்து கருங்குருவி நெடுந்தூரம் பறந்து சென்று ஒரு மரத்தின் கிளையில் தன் நிலையை எண்ணி வருந்தியபடி அமர்ந்தது. அப்போது சிலர் மதுரை பற்றியும், பொற்றாமரைக் குளத்தில் நீராடி சோமசுந்தரரை வழிபட்டால் எண்ணியது நடக்கும் எனவும் உரையாடினர். கருங்குருவி அங்கிருந்து மதுரைக்கு வந்து, பொற்றாமரைக் குளத்தில் நீராடி இறைவனை வணங்கியது. இறைவனும் குருவியின் பக்திக்கு இணங்கி மிருத்யுஞ்சய மந்திரத்தை உபதேசித்தார்.

மேலும் கருங்குருவியின் இனத்து பெயரான எளியான் பெயரை ’வலியான்’ என மாற்றினார். இத்திருவிளையாடல் நிகழ்வுவை மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் ஆவணி மூலத் திருநாளில் ஆண்டு தோறும் நடத்திக் காட்டப்படுகிறது. [2] [3]

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.