கால் மாறி ஆடிய படலம்

கால் மாறி ஆடிய படலம் என்பது சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களை விளக்கும் திருவிளையாடல் புராணம் நூலின் 24வது படலமாகும். (செய்யுள் பத்திகள்: 1428 - 1460)[1] இது விருத்த குமார பாலரான படலம் என்பதற்கு அடுத்து வருவதாகும்.

இப்படலத்தில் இராசசேகர பாண்டியனின் வெண்டுதலுக்கு இசைந்து நடராசப் பெருமான் வெள்ளியம்பலத்தில் கால் மாறி ஆடிய திருவிளையாடல் கூறப்படுகிறது.

திருவிளையாடல்

இராசசேகர பாண்டியன் சிவபெருமானின் வெள்ளியம்பலத்தில் செய்யும் அனந்தத் திருநடனத்தில் மிகுந்த அன்பு கொண்டிருந்தான். அதன் காரணமாக 64 கலைகளில் பரதக் கலை ஒழித்து மற்றையவற்றில் கல்வி வல்லவனாயிருந்தான். அக்காலத்தில் சோழ மன்னவனாயிருந்தவன் கரிகாலன். இவன் அறுபத்து நான்கு கலைகளிலும் வல்லவனாயிருந்தான். ஒருமுறை சோழ நாட்டு அரண்மனைப் புலவன் ஒருவன் இராசசேகர பாண்டியனைப் பார்த்து நீ பரதக் கலையில் பயிற்சி இல்லாதவன்; கரிகாலன் அனைத்தும் கற்றவன் எனக் கூறினான். இதனால் வருந்திய பாண்டியன் தானும் பரதம் பயிலலானான்.

பரதம் பயில்கையில் தனது உடல்வலியை உணர்ந்த பாண்டியன் இறைவனது கால்களும் வலியால் துன்பப் படுமே எனக் கலங்கினான். ஒருநாள் சிவராத்திரி நாளில் வெள்ளியம்பலத் திருக்கூத்தைக் கண்டு கண்ணீர் மல்கிய பாண்டியன் "எம் பெருமானே நின்ற திருவடி எடுத்து வீசி, எடுத்த திருவடி ஊன்றி அடியேன் காணும் படிக் கால் மாறி ஆட வேண்டும். இல்லையேல் நான் இறந்து விடுவேன்" என வேண்டிப் புலம்பினான். இறைவன் பாண்டியனின் அன்புக்குக் கட்டுப்பட்டு இடப்பாதத்தைத் தரையில் ஊன்றி வலப்பாதத்தை எடுத்து வீசி ஆடிக் காட்டினார்.

  1. "பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற் புராணம் (திருவாலவாய் மான்மியம்) இரண்டாவது - கூடற் காண்டம் - பாகம் 2 ( படலம் 35-42): 28. நாகமெய்த படலம் (1603 - 1625)". மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம் (1998-2014). பார்த்த நாள் 11 செப்டம்பர் 2016.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.