பன்னாட்டு குடிசார் வான்பயண அமைப்பு வானூர்தி நிலையக் குறியீடு
பன்னாட்டு குடிசார் வான்பயண அமைப்பு வானூர்தி நிலையக் குறியீடு ('ICAO airport code), சுருக்கமாக ஐசிஏஓ குறியீடு அல்லது ஐசிஏஓ அமைவிட அடையாளம், அமைவிடக் குறி என்றெல்லாம் குறிப்பிடப்படுவது உலகின் ஒவ்வொரு வானூர்தி நிலையத்தையும் அடையாளப்படுத்தும் வண்ணம் பன்னாட்டு குடிசார் வான்பயண அமைப்பு (ஐசிஏஓ) வரையறுத்துள்ள நான்கு எழுத்துருக்களைக் கொண்ட குறியீடு ஆகும். இவற்றை இவ்வமைப்பு தனது ஆவணம் 7910இல் அமைவிடக் குறிகள் என வெளியிட்டுள்ளது.

ஐசிஏஓ குறிகளை வான் போக்குவரத்து கட்டுப்பாடு அமைப்புகளும் வான்வழி சேவையாளர்களும் வானோடிகளும் வானூர்தி நிலையங்களை அடையாளம் காணவும் தங்கள் பயணவழித் திட்டங்களை ஒழுங்குபடுத்திக் கொள்ளவும் பயன்படுத்துகின்றனர். இவை ஐஏடிஏ குறியீடுகளிலிருந்து வேறுபட்டவை; மூன்றெழுத்துக்களால் ஆன ஐஏடிஏ குறியீடுகள், எளிமையாகவும் வானூர்தி நிலையத்தின் பெயரை ஒத்தும் உள்ளன. எடுத்துக்காட்டாக இலண்டனின் ஹீத்ரோ வானூர்தி நிலையத்திற்கு ஐஏடிஏ குறியீடு LHR என்பதாகும். இதே வானூர்தி நிலையத்திற்கு ஐசிஏஓவின் குறியீடு EGLL ஆகும். சென்னை நிலையத்திற்கு ஐஏடிஏவின் குறியீடு MAA என்பதாகும். ஆனால் ஐசிஏஓவின் குறியீடு VOMM என்பதாகும். எனவே ஐஏடிஏ குறியீடுகள் பயணிகளுடன் தொடர்புடைய, வான்சேவையாளர்களின் பயண கால அட்டவணைகள், முன்பதிவுகள், பெட்டிப் பட்டைகள் போன்றவற்றிற்கு பயன்படுத்தப்படுகின்றன. ஐசிஏஓவின் குறியீடுகளை பொதுவாக வானோடிகள், வான் போக்குவரத்து கட்டுப்பாட்டகம் போன்றோரும் வணிக வான்வழி பறப்பினை சுவடுதொடரவும் பயன்படுத்துகின்றனர். ஐசிஏஓ குறியீடுகள் உலகத்தை வலயங்களாகப் பிரித்து ஒவ்வொரு வலயத்திற்கும் இரு எழுத்துக்களை வழங்குகிறது. காட்டாக தெற்காசியாவில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் VO என்ற குறியீடு வழங்கப்படுகிறது. பின்னதாக நாடு அடுத்து வானூர்தி நிலையம் என படிப்படியான பிரித்தலை உள்ளடக்கி உள்ளது.
ஐசிஏஓ குறியீடுகள் வானூர்தி நிலையங்களில் அமைந்திருந்தாலும் இல்லையெனினும் வேறுசில பறப்பியல் வசதிகளுக்காகவும் வழங்கப்படுகின்றன; வானிலை நிலையங்கள், பன்னாட்டு பறப்புச் சேவை நிலையங்கள், பரப்பு கட்டுப்பாடு மையங்கள் இவற்றில் சிலவாம்.
முன்னொட்டுகள்
வெளி இணைப்புகள்
- ICAO On-line Publications Purchasing (official site)
- International Civil Aviation Organization (official site)
- ICAO airport codes worldwide, by country
- Airport IATA/ICAO Designator / Code Database Search (from Aviation Codes Central Web Site - Regular Updates)
- "Airport ABCs: An Explanation of Airport Identifier Codes". Air Line Pilot. Air Line Pilots Association (December, 1994).